கிண்டி தொழிற்பேட்டையில் ரூ.100 கோடியில் அடுக்குமாடி தொழில் வளாகம்: முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு

கிண்டி தொழிற்பேட்டையில் ரூ.100 கோடியில் அடுக்குமாடி தொழில் வளாகம்: முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு
Updated on
1 min read

சென்னை கிண்டி தொழிற்பேட்டையில் ரூ.100 கோடியில் அடுக்குமாடி தொழில் வளாகம் உருவாக்கப்படும் என முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

சட்டப்பேரவையில் இன்று பேரவை விதி 110-ன் கீழ் அறிக்கை ஒன்றை முதல்வர் படித்தார். அவர் கூறியதாவது:

ஒவ்வொரு மனிதனும் தன்னம்பிக்கையுடன் வாழ வழி செய்வதும், வேலைவாய்ப்புகளை உருவாக்கி நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு வழி வகுப்பதுமான குறு, சிறு, நடுத்தரத் தொழில்களை ஊக்குவித்து சிறு முதலீட்டாளர்களின் நண்பனாக அதிமுக அரசு செயல்பட்டு வருகிறது.

தமிழகத்தில் பதிவு செய்யப்பட்ட 11 லட்சம் குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் ரூ.67 ஆயிரம் கோடிக்கும் அதிகமாக முதலீடுகள் செய்துள்ளன. வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில், 60 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்புகளை வழங்கி குறு, சிறு, நடுத்தர தொழிலில் முதன்மை மாநிலமாக தமிழகம் விளங்குகிறது.

தமிழகத்தை ஆசியாவின் குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்களின் தலைநகராக உருவாக்கிட புதிய தொழிற் கொள்கை உருவாக்கப்படும். தொலைநோக்குப் பார்வை 2023-ன் குறிக்கோள்களை எளிதாக அடையவும் குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் எதிர்கொண்டு வரும் சவால்களுக்கு தீர்வு காணவும் புதிய தொழில் கொள்கை வழிவகுக்கும்.

இத்துறையில் உலக அளவிலான போட்டித் திறனை அதிகரிக்கும் வகையில் துறை சார்ந்த பன்னாட்டு அளவிலான ஆய்வு மேற்கொள்ளப்படும். உலக அளவிலான தொழில் நிறுவனங்களுடன் ஒப்பிட்டு தமிழக குறு, சிறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் சிறந்த நிலையை அடைய இந்த ஆய்வு பயன்படும்.

1958-ம் ஆண்டு முதன்முதலாக சென்னை நகரின் மையப் பகுதியான கிண்டியில் தொழிற்பேட்டை உருவாக்கப்பட்டது. இதை விரிவாக்கம் செய்ய நிலம் பற்றாக்குறையாக உள்ளது. எனவே, கிண்டி தொழிற்பேட்டையில் இயங்கி வரும் நிறுவனங்களின் விடுபட்ட தேவைகளைப் பூர்த்தி செய்யவும் குறு, சிறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கு உதவி செய்யவும் அங்கு ரூ.100 கோடியில் அடுக்குமாடி தொழில் வளாகம் உருவாக்கப்படும்.

இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in