Published : 27 Jan 2020 09:51 PM
Last Updated : 27 Jan 2020 09:51 PM

சினிமா டிக்கெட் கட்டண உயர்வு குறித்து பெரிய நடிகர்கள் குரல் கொடுக்காதது ஏன்?- விஜய டி.ராஜேந்தர் கேள்வி

மதுரை

"திரையரங்குக் கட்டண உயர்வு குறித்து பெரிய நடிகர்கள் கேள்வி எழுப்பாதது ஏன்? உள்ளூர் வரியில் விலக்கு பெற முதல்வரை சந்தித்து பேசுவேன்" என திரைப்பட இயக்குநரும், நடிகருமான விஜய டி.ராஜேந்தர் தெரிவித்துள்ளார்.

மதுரை விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களிடம் விஜய டி.ராஜேந்தர் கூறியது:

திரைப்பட விநியோகஸ்தர் சங்கக் கூட்டமைப்பின் கூட்டத்தில் சினிமா கட்டணம் குறித்து விவாதிக்க இருக்கிறேன். திரையரங்க உரிமையாளர்களிடம் எங்கள் உணர்வைத் தெரிவிப்போம்.

இன்று திரையரங்கிற்கு வரக்கூடிய மக்கள் எண்ணிக்கை குறைந்துவிட்டது. முன்பெல்லாம் ரூ.100-ல் குடும்பமே சினிமா பார்த்த காலம் போய், இன்று ஒரு டிக்கெட் குறைந்தது ரூ.100 என்றாகிவிட்டது. ரூ.10-க்கு விற்ற பாப்கார்ன் ரூ.100-வரை விற்பது நியாயமா? பொங்கல், தீபாவளி போன்ற முக்கிய பண்டிகையின்போது பெரிய நடிகர்களின் திரைப்படம் மட்டுமே வெளியாகிறது.

திரையரங்க டிக்கெட் கட்டணம் குறித்து எந்த பெரிய நடிகரும் கருத்து கூறுவது இல்லை. ஏனென்றால் அவர்களுக்கு கிடைக்க வேண்டிய கோடி ரூபாய் கிடைக்காமல் போகும் என்பதால்தான். பெரிய நாயகர்களாக இருந்த எம்ஜிஆர், சிவாஜிகணேசன் திரைப்படங்களுக்கென டிக்கெட் உயர்த்தப்படவில்லை.

ஏழை, பாமர மக்கள் திரையங்கிற்கு வர முடியாத சூழல் உள்ளது. முக்கிய நடிகர்கள் ரூ.75 கோடி, ரூ.50 கோடி வேண்டும் என கேட்டு வாங்கிவிட்டால், அந்தப் படத்தை வாங்கிய விநியோஸ்தர் தெருக்கோடிக்குத்தான் போக வேண்டும்.

இந்தியா முழுவதிலும் ஒரே மாதிரியாக ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்டது. பின்னர் எதற்கு தனியாக உள்ளூர் வரியை விதிக்கின்றனர்.

சினிமாத்துறையினரை வாழவைக்க ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களில் வரிவிலக்கு அளித்துள்ளனர். ஜிஎஸ்டி செலுத்திய பின்னர், உள்ளூர் வரியை செலுத்தச் சொல்வது தமிழகத்தில் மட்டுமே. மற்ற மாநிலங்களில் இல்லை.

தமிழக முதல்வரிடம் இந்த வரி குறித்து கூற உள்ளேன். அதிமுகவிற்கு மக்கள் ஒரு எச்சரிக்கையை அளித்துள்ளனர். இதைப் பார்த்த பின்னர் சுதாரித்திருப்பீர்கள்.

அடுத்து நகராட்சிக்கு, மாநகராட்சிக்கு தேர்தல் வரப்போகிறது. தொடர்ந்து சட்டப்பேரவை பொதுத்தேர்தலும் வந்து விடும். அதற்கு தயாராகுங்கள். 5 மற்றும் 8-ம் வகுப்பு பொதுத் தேர்வால் மாணவர்கள் பாதிப்படைவார்கள். ஆனால் இதனை எதிர்த்து யாராவது குரல் கொடுத்தார்களா? இதனால் கல்வி தடைபடும்” இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x