Published : 27 Jan 2020 06:52 PM
Last Updated : 27 Jan 2020 06:52 PM

சிஐடியு அகில இந்திய மாநாடு நிறைவு:  புதிய நிர்வாகிகள் தேர்வு

சிஐடியு தொழிற்சங்க அமைப்பின் 16-வது அகில இந்திய 3 நாள் மாநாடு இன்று நிறைவுப்பெற்றது. மாநாட்டில் மத்திய அரசின் சிஏஏ, என்பிஆர், என்சிஆர் சட்டங்களுக்கு எதிரான தீர்மானம் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

சிஐடியு தொழிற்சங்க அமைப்பின் 16வது அகில இந்திய மாநாடு 2020 ஜனவரி 23ந் தேதி ராயப்பேட்டை ஒய்எம்சிஏ வளாகத்தில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. சிஐடியு அகில இந்திய தலைவர் டாக்டர் கே.ஹேமலதா கொடியேற்றி மாநாட்டை தொடங்கி வைத்தார்.

சிஐடியு தலைவர் கே.ஹேமலதா தலைமையில் நடைபெற்ற இந்த மாநாட்டின் தொடக்க நிகழ்ச்சியில் உலக தொழிலாளர் சம்மேளன தலைவர் மாவாண்டில் மக்வாய்பா, ஏஐடியுசி பொதுச் செயலாளர் அமர்ஜித் கவுர், தொமுச பொதுச்செயலாளர் சண்முகம் எம்.பி., உள்ளிட்டு 10 மத்திய தொழிற்சங்கத் தலைவர்கள் மாநாட்டை வாழ்த்தி பேசினர்.

நாடு முழுவதுமிருந்து 2,050 பிரதிநிதிகள் மாநாட்டில் கலந்து கொண்டனர். சிஐடியு பொதுச் செயலாளர் தபன்சென் அரசியல் வேலை அறிக்கை, ஸ்தாபன அறிக்கைகளை முன்மொழிந்து பேசினார்.

அகில இந்திய விவசாயிகள் சங்க பொதுச் செயலாளர் ஹன்னன்முல்லா, அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் பொதுச் செயலாளர் பி.வெங்கட், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் பொதுச் செயலாளர் மரியம்தாவ்லே, இந்திய ஜனநாயக வாலிபர் சங்க பொதுச் செயலாளர் அவாய் முகர்ஜி, இந்திய மாணவர் சங்கத்தின் தலைவர் வி.பி.ஷானு உள்ளிட்டு பல்வேறு அமைப்புகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர்.

ஜார்க்கண்ட் மாநில முதலமைச்சரும் நிலக்கரி தொழிலாளர் சங்க துணைத்தலைவருமான ஹேமந்த் சோரன் மாநாட்டிற்கு வாழ்த்து செய்தி அனுப்பியிருந்தார். கேரள மாநில அமைச்சர்கள் கடகம்பள்ளி சுரேந்திரன், மெர்சி குட்டியம்மா, டி.பி.ராமகிருஷ்ணன், ஏ.கே.பாலன் மற்றும் பல சட்டமன்ற உறுப்பினர்கள் பிரதிநிதிகளாக பங்கேற்றனர்.

குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்ப பெற வேண்டும், தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய குடியுரிமை பதிவேடு ரத்து செய்ய வேண்டும், ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் மீண்டும் ஜனநாயக உரிமைகள்நிலைநாட்டப்பட வேண்டும், பொதுத்துறை வங்கிகளை இணைப்பதை நிறுத்தக்கோரி நாடு தழுவிய அளவில் வங்கி ஊழியர்கள் நடத்த உள்ள வேலை நிறுத்த போராட்டங்களுக்கு ஆதரவு தெரிவித்தும், கேரள ஆளுநரின் மாநில அரசுக்கு எதிரான கருத்துக்களுக்கு கண்டனம் தெரிவித்தும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

சிறை நிரப்பும் போராட்டம்:

நாடு முழுவதும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகளை தடுத்து நிறுத்த வேண்டும் என வலியுறுத்தி மார்ச் 6-ம் தேதி நாடு தழுவிய பெண்கள் சிறை நிரப்பும் போராட்டத்தை நடத்த மாநாடு தீர்மானித்துள்ளது.

இதனைத் தொடர்ந்து தொழிலாளர் சட்டத்தை நெறிப்படுத்துதல், மாற்றுக்கொள்கைக்கான போராட்டம், வேலைவாய்ப்பு மற்றும் வேலைவாய்ப்பு திறனுக்கான மாற்றம், சமூக ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டம் ஆகிய 4 ஆணையங்களின் குழுவிவாதத்தில் தெரிவிக்கப்பட்ட கருத்துகளை தொகுத்து அந்தக்குழுவின் தலைவர்கள் பேசினர்.

இறுதிநாளான இன்று (ஜனவரி 27) ஆணையங்களின் குழு விவாதங்கள் குறித்த அறிக்கையை தலைவர்கள் பிரதிநிதகள் முன்பு சமர்பித்தனர். இதுகுறித்த இறுதி முடிவை புதிய செயற்குழுவும், பொதுக்குழுவும் எடுக்கும் என்றும் அறிவிக்கப்பட்டது.

நிர்வாகிகள் தேர்வு:

இதனைத் தொடர்ந்து நிர்வாகிகள் தவிர்த்து 425 பேர் கொண்ட பொதுக்குழு உறுப்பினர்கள் மாநாட்டில் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

தலைவராக டாக்டர் கே.ஹேமலதா, பொதுச் செயலாளராக தபன்சென், பொருளாளராக எம்.எல்.மல்கோட்டியா ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். மூத்த தொழிற்சங்கத் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான பாசுதேவ் ஆச்சார்யா நிரந்தர அழைப்பாளராக தேர்வு செய்யப்பட்டார்.

தமிழகத்தை சேர்ந்த நிர்வாகிகள்:

தமிழகத்திலிருந்து 35 பேர் அகில இந்திய பொதுக்குழுவிற்கு தேர்வு செய்யப்பட்டனர். தமிழத்தை சேர்ந்த ஏ.கே.பத்மநாபன், அ.சவுந்தரராசன், மாலதி சிட்டிபாபு ஆகியோர் உதவித் தலைவர்களாகவும், ஜி.சுகுமாறன், ஆர்.கருமலையான் ஆகியோர் செயலாளர்களாகவும் தேர்வு செய்யப்பட்டனர்.
இறுதியாக வரவேற்புக்குழுத் தலைவர் அ.சவுந்தரராசன் நன்றி கூறினார்.

பேரணி பொதுக்கூட்டம்:
மாலை 4 மணிக்கு சைதாப்பேட்டை மெட்ரோ ஸ்டேஷன் அருகிலிருந்து தொழிலாளர்களின் மாபெரும் பேரணி தொடங்கி அண்ணாசாலை வழியாக நந்தனம் ஒய்எம்சிஏ திடலை சென்றடையும். அங்கு பொதுக்கூட்டம் நடக்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x