Published : 27 Jan 2020 04:47 PM
Last Updated : 27 Jan 2020 04:47 PM

மாவட்ட செயலாளராகிறார் அன்பில் பொய்யாமொழி மகேஷ்?- திருச்சி 3 மாவட்டமாக பிரிப்பு

திருச்சியின் செல்வாக்குமிக்க தலைவர், மாவட்டச்செயலாளர் கே.என்.நேரு திமுகவின் முதன்மை தலைமைக் கழகச் செயலாளராக பதவி உயர்த்தப்பட்ட அடிப்படையில் மாவட்டத்தை 3 ஆக பிரித்து அன்பில் பொய்யாமொழி மகேஷுக்கு கட்சிப்பதவி அளிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

திருச்சி மாவட்டச் செயலாளராக சுமார் 30 ஆண்டுகளாகப் பணியாற்றிய முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு, திமுகவின் தலைமைக் கழக முதன்மைச் செயலாளராக நியமிக்கப்பட்டிருக்கிற நிலையில் திருச்சி மாவட்டத்தை மூன்றாக பிரிக்க உள்ளதாக திமுக வட்டாரத்தில் தகவல் வெளியாகியுள்ளது.

இதில் இளைஞரணி மாநிலப்பொறுப்பில் இருப்பவரும், உதயநிதியின் நெருங்கிய நண்பரும், எம்எல்ஏவுமான அன்பில் பொய்யாமொழி மகேஷுக்கு திருச்சி ஒரு பகுதிக்கு மாவட்டச் செயலாளர் பதவி அளிக்க திமுக தலைமை முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

தற்போது திருச்சி வடக்கு, தெற்கு என இரண்டு மாவட்டச் செயலாளர்கள் உள்ளனர். தெற்கு மாவட்டச்செயலாளராக கே.என்.நேருவும், வடக்கு மாவட்டச் செயலாளராக காடுவெட்டி தியாகராஜனும் உள்ளனர்.

கே.என்.நேரு விடுவிக்கப்பட்டதை அடுத்து திருவெறும்பூர், ஸ்ரீரங்கம், மண்ணச்சநல்லூர் தொகுதிகள் அடங்கிய மாவட்டத்தை மத்திய மாவட்டமாக உருவாக்கி அன்பில் பொய்யாமொழி மகேஷ் மாவட்டச் செயலாளராக அறிவிக்கப்படலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

திருச்சி மேற்கு, திருச்சி கிழக்கு, லால்குடி சட்டமன்றத் தொகுதிகள் அடங்கிய மாவட்டத்தை பிரித்து கே.என்.நேருவின் தீவிர ஆதரவாளர் அன்பழகனையும், முசிறி, மணப்பாறை, துறையூர் தொகுதிகள் அடங்கிய பகுதிகளை மாவட்டமாக பிரித்து தற்போது இருக்கும் காடுவெட்டி தியாகராஜனையே மாவட்டச் செயலாளராகத் தொடர வைக்கலாம் என்று பேச்சு அடிபடுகிறது.

உள்ளாட்சித்தேர்தலில் கரூர் உள்ளிட்ட இடங்களில் திமுக தோல்வி அடைந்தாலும் திருச்சியில் இமாலய வெற்றியை பெற்றது திமுக. திருச்சி மக்களவை தொகுதியை திமுக காங்கிரஸுக்கு கொடுக்கக் கூடாது என கூறியவர் நேரு. திருச்சியில் காங்கிரஸ் வேட்பாளர் திருநாவுக்கரசு அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வென்றார்.

நேரு தான் சொன்னது உண்மை என்பதை உள்ளாட்சித் தேர்தல் வெற்றியில் நிரூபித்தார். திமுக வலுவாக திருச்சியில் வென்றது. இந்நிலையில் டி.ஆர்.பாலுவிடமிருந்து தலைமைக் கழக முதன்மைச் செயலாளர் பதவியை வாங்கி நேருவுக்கு அளிக்கப்பட்டிருப்பது மேலோட்டமாக பதவி உயர்வாக பார்க்கப்பட்டாலும் நேரு அதை ரசிக்கவில்லை என்கிறார்கள்.

மண்ணின் மைந்தராக மாவட்டச்செயலாளராக இருப்பதையே அவர் விரும்பினாலும் திமுக தலைமையின் முடிவை தட்ட முடியாமல் அவர் ஒப்புக்கொண்டார் என்று தெரிவிக்கின்றனர். அன்பில் பொய்யாமொழி மகேஷ் மாவட்டச் செயலாளர் ஆகும் பட்சத்தில் அவர் இளைஞரணியிலிருந்து கட்சி பொறுப்புக்கு வரவேண்டி இருக்கும்.

கட்சிக்கு இளம் தலைவர்களை கொண்டு வருவது தேவை என்று கூறப்பட்டாலும், அதை கட்சி தோல்வி அடைந்த மாவட்டங்களில் யோசிக்காமல் வெற்றிக்கனியை பறித்துக்காட்டி அடுத்து மாநகராட்சி தேர்தல், சட்டமன்ற தேர்தலை நோக்கி அதே வேகத்தில் செல்லும் நேரத்தில் இந்த மாற்றம் பலனை தருமா என்கிற கேள்வியும் சில திமுக நிர்வாகிகளால் முன்வைக்கப்படுகிறது.

கட்சியில் பல மாவட்டங்களில் விரைவில் அதிரடி மாற்றம் வரப்போகிறது என்ற பேச்சும் தற்போது அடிபடுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x