Last Updated : 27 Jan, 2020 04:17 PM

 

Published : 27 Jan 2020 04:17 PM
Last Updated : 27 Jan 2020 04:17 PM

ஒரே நாடு ஒரு குடும்ப அட்டை திட்டம்: தூத்துக்குடியில் பிப். 1 முதல் சோதனை அடிப்படையில் அமல்

தூத்துக்குடி

ஒரே நாடு ஒரே குடும்ப அட்டை திட்டம் தூத்துக்குடி மாவட்டத்தில் வரும் பிப்ரவரி 1-ம் தேதி முதல் சோதனை அடிப்படையில் அமல்படுத்தப்படவுள்ளது.

இதன் மூலம் மாவட்டத்தில் உள்ள குடும்ப அட்டைதாரர்கள் மாவட்டத்தின் எந்த நியாயவிலைக் கடைகளிலும் பொருட்களை வாங்க முடியும் என, மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்தார்.

ஒரே நாடு, ஒரே குடும்ப அட்டை திட்டம், நாடு முழுவதும் ஜூன் 1-ம் தேதிக்குள் அமல்படுத்தப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இத்திட்டத்தின் கீழ் குடும்ப அட்டைதாரர்கள் நாடு முழுவதும் எந்த நியாயவிலைக் கடைகளிலும் பொருட்களை வாங்க முடியும். இந்த திட்டத்தை அமல்படுத்த தமிழக அரசும் ஒப்புதல் அளித்துள்ளது.

இதையடுத்து ஒரே நாடு ஒரே குடும்ப அட்டை திட்டத்தை தமிழகத்தில் தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி ஆகிய இரு மாவட்டங்களிலும் முன்னோடியாக சோதனை அடிப்படையில் அமல்படுத்த தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

அதன்படி தூத்துக்குடி மாவட்டத்தில் இந்த திட்டம் வரும் பிப்ரவரி 1-ம் தேதி முதல் சோதனை அடிப்படையில் அமல்படுத்தப்படவுள்ளதாக மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்தார்.

இது தொடர்பாக இன்று செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: ஒரே நாடு ஒரே குடும்ப அட்டை திட்டத்துக்கு தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்கள் முன்னோடி மாவட்டங்களாக தேர்வு செய்யப்பட்டு, சோதனை அடிப்படையில் இவ்விரு மாவட்டங்களிலும் இந்த திட்டம் வரும் பிப்ரவரி 1-ம் தேதி முதல் அமலுக்கு வரும்.

இந்த திட்டம் தற்போது சோதனை அடிப்படையில் மாவட்ட அளவில் மட்டுமே அமல்படுத்தப்படுகிறது. எனவே, மாவட்டத்தில் உள்ள குடும்ப அட்டைதாரர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நியாயவிலைக் கடை மட்டுமல்லாமல் மாவட்டத்தில் உள்ள எந்த நியாயவிலைக் கடைகளிலும் பொருட்களை வாங்க முடியும்.

இந்த திட்டத்தில் நடைமுறையில் எந்த மாதிரியான சிக்கல்கள், பிரச்சினைகள் வருகின்றன என்பதை அறிவதற்காக முன்னோடியாக இந்த திட்டம் தூத்துக்குடி மாவட்டத்தில் அமல்படுத்தப்படுகிறது.

இந்த திட்டத்தை சுமுகமாக அமல்படுத்த தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக வட்ட வழங்கல் அலுவலர்கள், கூட்டுறவு அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்கும் ஆலோசனை கூட்டத்துக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

குடும்ப அட்டைதாரக்கள் எந்தக் கடையில் போய் வாங்குவார்கள் என்பது தெரியாது. எனவே, எந்த கடைக்கு எவ்வளவு பொருட்களை ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்பதையும் எளிதாக தீர்மானிக்க முடியாது. அனைத்து கடைகளுக்குமே கூடுதலாக பொருட்களை ஒதுக்கீடு செய்து அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஒரு முறை பார்த்த பிறகு எந்தக் கடையில் தேவை அதிகம் இருக்கிறதோ அந்தக் கடைக்கு அதிகம் ஒதுக்கப்படும்.

வேலைக்காக தற்காலிகமாக வேறு ஊர்களுக்கு, வேறு வார்டுகளுக்கு இடம்பெயர்ந்தவர்கள் தான் வேறு கடைகளில் பொருட்களை வாங்க வாய்ப்பு உள்ளது. மற்றப்படி 95 சதவீதம் பேர் தங்கள் பகுதியில் உள்ள கடைகளில் தான் வாங்குவார்கள். எனவே, சோதனை அடிப்படையில் இந்த திட்டத்தை ஒரு மாதம் அமல் செய்து, அதன் செயல்பாட்டை பார்த்த பிறகு தான், பொருட்கள் ஒதுக்கீடு விபரம் தெரியவரும்.

இப்போது மாவட்டத்துக்குள் மட்டுமே எந்தக் கடையிலும் பொருட்களை வாங்க முடியும். தமிழகம் முழுவதும் இந்த திட்டம் அமலாகும் போது மாநிலம் முழுவதும் எங்கு வேண்டுமானாலும் பொருட்களை வாங்கலாம். அதுபோல நாடு முழுவதும் அமலுக்கு வரும் போது நாட்டின் எந்த பகுதியிலும் பொருட்களை வாங்க முடியும். இது படிப்படியாக தான் அமலுக்கு வரும்.

மறைமுக தேர்தல்:

தூத்துக்குடி மாவட்டத்தில் ஒத்திவைக்கப்பட்ட ஊரக உள்ளாட்சி பதவிகளுக்கான மறைமுகத் தேர்தல் வரும் 30-ம் தேதி நடைபெறுகிறது. கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியத் தலைவர் மற்றும் துணைத் தலைவர் தேர்தல், மூப்பன்பட்டி, உருளைக்குடி, தத்தனேரி, வெள்ளூர் ஆகிய ஊராட்சி துணைத் தலைவர் தேர்தல் ஆகியவை அன்றைய தினம் நடைபெறும் என்றார் ஆட்சியர்.

தொடர்ந்து மக்கள் குறைதீர் நாள் கூட்டத்தில் 2018-2019-ம் ஆண்டு கொடிநாள் வசூலில் 100 சதவீதம் வசூல் புரிந்து இலக்கு நிறைவு செய்த மாவட்ட அலுவலர்கள் 13 பேருக்கு பாராட்டு சான்றிதழ், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகம் மூலம் மாவட்ட ஆட்சியரின் விருப்புரிமை நிதியிலிருந்து ஒரு பயனாளிக்கு ரூ.6 ஆயிரம் மதிப்புள்ள தையல் இயந்திரம், கள்ளச்சாராய தொழிலில் ஈடுபட்டு மனம் திருந்தியவர்களுக்கு மறுவாழ்வு நிதியாக தலா ரூ.30 ஆயிரம் வீதம் 26 பயனாளிகளுக்கு ரூ.7.80 லட்சத்துக்கான காசோலை, போரில் ஊனமுற்ற படைவீரர் மற்றும் இறந்த படைவீரரின் குடும்பத்தாருக்கு வருடாந்திர பராமரிப்பு மானியமாக தலா ரூ.25 ஆயிரம் வீதம் 2 பயனாளிகளுக்கு ரூ.50 ஆயிரத்துக்கான காசோலை என மொத்தம் 41 நபர்களுக்கு ரூ.8.36 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை ஆட்சியர் வழங்கினார்.

கூடுதல் ஆட்சியர் (வருவாய்) பா.விஷ்ணு சந்திரன், தூத்துக்குடி சார் ஆட்சியர் சிம்ரான் ஜீத் சிங் காலோன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் தனபதி, சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை ஆட்சியர் சங்கரநாராயணன், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் சண்முகசுந்தரம், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் பிரம்மநாயகம் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x