Published : 27 Jan 2020 03:29 PM
Last Updated : 27 Jan 2020 03:29 PM

பொது சுகாதாரமும் பறிபோகிறது; கூட்டாட்சி முறைக்குக் குழிபறிக்கும் பாஜக: வேல்முருகன் கண்டனம்

பொது சுகாதாரத்தை பொதுப் பட்டியலுக்கு மாற்றுவது, கூட்டாட்சி முறைக்குக் குழிபறித்துவிடும் என, தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் குற்றம்சாட்டியுள்ளார்.

இதுதொடர்பாக வேல்முருகன் இன்று (ஜன.27) வெளியிட்ட அறிக்கையில், "மக்கள் விரோத, பாசிசத் திட்டங்கள், சட்டங்கள், நடவடிக்கைகள் தொடர்ந்து பாஜக ஆட்சியில் அரங்கேறி வருகின்றன.

அரசியலமைப்புச் சட்டம் வழங்கும் அடிப்படை உரிமைகளுக்குப் பங்கம் என்றாலோ, அந்த உரிமைகளைப் பறிப்பது என்றாலோ அதைப் பற்றியெல்லாம் கவலைப்படுவதில்லை மத்திய அரசு. பண மதிப்பழிப்பு, ஜிஎஸ்டி, நீட், புதிய கல்விக் கொள்கை, காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவு 370 நீக்கம், முத்தலாக், குடியுரிமைத் திருத்தச் சட்டம் இப்படி பாசிசத் திட்டங்கள், சட்டங்களைக் கொண்டுவந்து மக்களின் உயிர்களையும் பறித்துக் கொண்டிருக்கிறது.

இப்போது கொண்டுவந்த குடியுரிமைத் திருத்தச் சட்டம் ஒட்டுமொத்த இந்தியர்களையும் அச்சத்தில் ஆழ்த்தி, அவர்களாகவே தன்னெழுச்சியாகப் போராடும் நிலைக்குத் தள்ளியிருக்கிறது. இது மத்திய அரசு வசமாக மாட்டிக்கொண்ட படுகுழியே தவிர வேறல்ல.

இதிலிருந்தும் மக்கள் கவனத்தை, மாநிலங்களின் கவனத்தை வேறு பக்கம் திருப்பியாக வேண்டிய நிர்பந்தம். அதனால்தான் அரசியலமைப்புச் சட்டம் வழங்கும் அடிப்படை உரிமையையே பறிக்கும் விதமாக பொது சுகாதாரத்தை மாநிலங்களிடமிருந்து பறிக்க முடிவு செய்திருக்கிறது பாஜக ஆட்சி.
மாநிலப் பட்டியலில் உள்ள பொது சுகாதாரம் மற்றும் மருத்துவமனைகளை பொதுப்பட்டியலுக்கு மாற்ற வேண்டும் என்று மத்திய அரசால் அமைக்கப்பட்ட நிதி ஆணையத்தின் சுகாதாரத் துறைக்கான துணைக்குழு பரிந்துரை செய்திருக்கிறது.

மத்திய, மாநில அரசுகளுக்கிடையிலான நிதி உறவு மற்றும் நிதிப்பகிர்வு முறையை வரையறை செய்வதற்காக அமைக்கப்பட்டுள்ள 15 ஆவது நிதி ஆணையம், சுகாதாரத்துறை சீர்திருத்தங்கள் குறித்து பரிந்துரைக்க எய்ம்ஸ் நிறுவனத்தின் இயக்குநர் ரந்தீப் குலேரியா தலைமையில் துணைக்குழு ஒன்றை அமைத்தது. அந்தக்குழுதான் பொது சுகாதாரம் மற்றும் மருத்துவமனைகளை மாநிலப்பட்டியலில் இருந்து பொதுப்பட்டியலுக்கு மாற்ற வேண்டும் என்று பரிந்துரைத்திருக்கிறது.

இதற்கு அக்குழு சொன்ன காரணம், மருத்துவக் கல்வி, குடும்பக் கட்டுப்பாடு ஆகிய துறைகள் பொதுப்பட்டியலில் இருக்கும்போது பொது சுகாதாரமும் பொதுப்பட்டியலில் இருந்தால்தான் சரியாக இருக்கும் என்கிறது.

மாநிலங்களின் அதிகாரத்தைப் பறிக்கும் இந்த செயலும் கார்ப்பரேட்டுகளின் வணிக ஆதாயத்துக்காக எடுக்கப்பட்டதுதான் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால் இது மகா ஆபத்தான செயலாகும். தனிமனித உரிமையையும் பறிக்கும் இந்தப் படுபாதகச் செயலை உடனடியாகக் கைவிட வேண்டும்.

ஆட்டைக் கடித்து, மாட்டைக் கடித்து, மனிதனையே கடிக்கிறது பாஜக ஆட்சி. கூட்டாட்சி முறைக்குக் குழிபறிக்கும் இந்த பாசிசத்தை வன்மையாகக் கண்டிப்பதுடன், எச்சரிக்கையும் விடுக்கிறது தமிழக வாழ்வுரிமைக் கட்சி" என வேல்முருகன் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x