Published : 27 Jan 2020 02:39 PM
Last Updated : 27 Jan 2020 02:39 PM

அக்கரைப்பேட்டை கிராம சபை கூட்டம்: ஹைட்ரோகார்பன் திட்டம் ரத்து செய்ய வலியுறுத்தி தீர்மானம்

பிரதிநிதித்துவப் படம்

நாகப்பட்டினம்

அக்கரைப்பேட்டை கிராம சபை கூட்டத்தில் ஹைட்ரோகார்பன் திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

நாகை ஊராட்சி ஒன்றியம் அக்கரைப்பேட்டை மாரியம்மன் கோயிலில், கிராம சபை கூட்டம், அக்கரைபேட்டை ஊராட்சி மன்ற தலைவர் அழியாநிதி மனோகரன் தலைமையில் நேற்று (ஜன.26) நடைபெற்றது. துணைத் தலைவர் கலையரசி, வட்டார வளர்ச்சி துணை அலுவலர் லாரன்ஸ், ஊராட்சி செயலாளர் மணிமொழி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டம் தொடங்கியவுடன் வங்ககடல் மீனவர் அமைப்பை சேர்ந்த குமரவேலு, "மத்திய சுற்றுச்சூழல், தட்பவெப்ப நிலை மாற்றம் மற்றும் வனத்துறையால் கடந்த 16-ம் தேதி வெளியிடப்பட்ட சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கை குறித்த அறிவிப்பை ரத்து செய்ய வேண்டும். இந்த அரசாணையால் காவிரி டெல்டா மாவட்டங்களில், மீனவர்கள் மற்றும் விவசாயிகளின் வாழ்வாதாரம் அழியும். எனவே ஹைட்ரோகார்பன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும்" என்று கூறினார். மேலும் இதை கிராம சபை கூட்டத்தில் தீர்மானமாக நிறைவேற்ற வேண்டும் என்று வட்டார வளர்ச்சி துணை அலுவலர் லாரன்ஸிடம் மனு ஒன்றை கொடுத்தார்.

கோரிக்கை மனுவை பெற்றுக் கொண்ட லாரன்ஸ், இது குறித்து வட்டார வளர்ச்சி அலுவலரிடம் கேட்ட பின்னர் தான் தீர்மானம் நிறைவேற்ற முடியும் என்றார்.

கிராம சபை கூட்டத்தில் பொதுமக்கள் கொடுக்கும் மனுவை ஏற்றுக் கொண்டு அதை தீர்மானமாக நிறைவேற்ற வேண்டும் எனவும் அது தான் கிராமசபா கூட்டத்தின் நோக்கம், அதை விட்டு மேலதிகாரிகளிடம் கேட்டு தீர்மானம் நிறைவேற்றுவதாக கூறுவது சரியில்லை என்றும் குமரவேலு கூறினார்.

இதைகேட்டவுடன் கூட்டத்தில் கலந்து கொண்ட அதிமுகவினர், "அதிகாரிகளை மிரட்டுவதுபோல் பேசுவது சரியில்லை. மேலும் ஹைட்ரோகார்பன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்ற தீர்மானத்தை நிறைவேற்ற விட மாட்டோம்" என எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் கிராம சபை கூட்டத்தில் சிறிது நேரம் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது.

உடனே அக்கரைப்பேட்டை ஊராட்சி மன்ற தலைவர் அழியாநிதி மனோகரன் தலையிட்டு, "கிராமசபை கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள், முதலில் மனுக்களை கொடுங்கள். அதன் பின்னர் கூட்டத்தில் தீர்மானங்களை நிறைவேற்றலாம்" என்று கூறினார்.

இதைத் தொடர்ந்து அக்கரைப்பேட்டையை சேர்ந்த மணிகண்டன் என்பவர், சாகர்மாலா, ஹைட்ரோகார்பன் திட்டத்தால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து எடுத்துக் கூறி, இந்த 2 திட்டங்களையும் ரத்து செய்யும் தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டும் என்று தெரிவித்தார். இதைத் தொடர்ந்து அக்கரைப்பேட்டை பகுதியை சேர்ந்த பொதுமக்கள் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை கொடுத்து அவற்றை தீர்மானமாக நிறைவேற்றும்படி கூறினர். இதனால் கூட்டத்தில் மீண்டும் கூச்சல், குழப்பம் ஏற்பட்டது.

சுமார் 15 நிமிடத்திற்கு பின்னர் தலைவர் அழியாநிதி மனோகரன் எழுந்து, "நான் தற்போதுதான் அக்கரைப்பேட்டை ஊராட்சி மன்ற தலைவராக பொறுப்பேற்றுள்ளேன். அக்கரைபேட்டை கிராம மக்களின் அனைத்து கோரிக்கையும் நிறைவேற்றப்படும். அதற்குள் கட்சி பாகுபாடுகளை புகுத்தாதீர்கள். கட்சி பாகுபாடு இன்றி அனைத்தும் நிறைவேற்றி தரப்படும்" என்றார்.

இதையடுத்து பொதுமக்கள் அனைவரும் சமாதானம் அடைந்தனர். இறுதியாக ஹைட்ரோகார்பன் திட்டம் ரத்து செய்வது தொடர்பான தீர்மானம் வாசிக்கப்பட்டு அது நிறைவேற்றப்படுவதாக கூட்டத்தில் அறிவிக்கப்பட்டது.

அதேபோல் வேதாரண்யம் அடுத்த தேத்தாகுடி வடக்கு ஊராட்சி, கொள்ளிடம் ஒன்றியம் திருமுல்லைவாசல், அகரவட்டாரம் ஆகிய ஊராட்சிகளிலும், மயிலாடுதுறை ஒன்றியம் மாப்படுகை, மேலையூர், உளுந்தக்குப்பை, வள்ளலார்அகரம் ஆகிய ஊராட்சிகள் உட்பட பல்வேறு ஊராட்சிகளில் நடந்த கிராம சபை கூட்டங்களில் ஹைட்ரோகார்பன் ஊராட்சிகளில் நடந்த கிராம சபா கூட்டங்களில் ஹைட்ரோகார்பன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும், மயிலாடுதுறையை புதிய மாவட்டமாக அறிவிக்க வேண்டும் ஆகியவற்றை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x