Last Updated : 27 Jan, 2020 02:01 PM

 

Published : 27 Jan 2020 02:01 PM
Last Updated : 27 Jan 2020 02:01 PM

குழந்தைகள், பெண்களை பாலியல் வன்கொடுமை செய்பவர்களுக்கு தூக்கு தண்டனை வழங்க வேண்டும்: அன்புமணி ராமதாஸ்

குழந்தைகள், பெண்களுக்கு எதிராக பாலியல் வன்கொடுமை செய்பவர்களை தூக்கிலிட வேண்டும் என பாமக எம்.பி. அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

சிவகாசியில் பாட்டாளி மக்கள் கட்சியின் மாநிலப் பொருளாளர் திலகபாமா இல்லத் திருமண விழாவில் கலந்த கொண்ட அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

அப்போது பேசிய அவர், "சிவகாசியில் 8 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த வழக்கை முறையாக விசாரணை செய்து, குற்றவாளிக்கு தூக்கு தண்டனை வழங்க வேண்டும். இது கட்சிக்கு எதிரான கருத்துதான். ஆனாலும், நான் தனிப்பட முறையில் இதனை வலியுறுத்துகிறேன்.

குற்றவாளிகளுக்கு இத்தகைய கடுமையான தண்டனைகளை விரைந்து அளித்தால்தான் இதுபோன்ற சம்பவம் இனியும் நடக்காமல் இருக்கும். டெல்லி நிர்பயா வழக்கில் குற்றவாளிகளுக்கு தண்டனை நிறைவேற்றுவதைத் தள்ளிவைக்கக் கூடாது.

5-ம் வகுப்பு மற்றும் 8-ம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு நடத்தும் முடிவை தமிழக அரசு திரும்பப் பெற வேண்டும். இந்தத் தேர்வு முறையால் 5-ம் வகுப்பில் பயில்பவர்கள் ஒருவேளை தோல்வியடைந்தால் படிப்பை நிறுத்த வாய்ப்புள்ளது. இது சமூகப் பிரச்சினையாகும். 10-ம் வகுப்பு வரை 100% தேர்ச்சி வழங்க வேண்டும் என்பதே பாமகவின் நிலைப்பாடு.

ஹைட்ரோ கார்பன் திட்டம் தேவையில்லாத திட்டம். இது திமுக ஆட்சிக்காலத்தில் கொண்டுவரப்பட்டது. டெல்டா பகுதி விவசாய நிலம் அங்கு விவசாயமும் அதைச் சார்ந்த தொழில்களையுமே செய்யலாம்.

காவிரி டெல்டா பகுதிகளைப் பாதுகாக்கப்பட்ட விவசாய மண்டலம் என அறிவித்து சட்ட மன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி அறிக்கை வெளியிட வேண்டும். தமிழக முதல்வர் ஒரு விவசாயி என்பதால் விவசாய நிலங்களைப் பாதுகாக்கும் வகையில் இத்தீர்மானத்தை நிறைவேற்றுவார் என நான் நம்புகிறேன்.

மக்கள் தொகை கணக்கெடுப்பின்போது சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும். இது தொடர்பாக பிரதமருக்குக் கடிதம் எழுதியுள்ளோம். சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தினால் தான் இட ஒதுக்கீட்டுக்கான சிக்கலைத் தீர்க்க வேண்டும்.

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வில் நடந்த முறைகேட்டை உயர் நீதிமன்ற நீதிபதிகளைக் கொண்டு விசாரணை நடத்த வேண்டும். இந்த முறைகேடுகளை பாமக பலமுறை புகார் கொடுத்திருக்கிறது. இந்த முறைகேட்டில் சம்பந்தப்பட்டவர்களைக் கைது செய்ய வேண்டும். கடந்த 4 ஆண்டுகளில் நடந்த தேர்வுகள் அனைத்தையும் சோதனை செய்து மக்கள் இழந்த நம்பிக்கையை மீட்டெடுக்க வேண்டும். இனியும் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க வேண்டும்" என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x