

மக்களின் உணர்வுகளுக்கு மதிப் பளித்து சட்டப்பேரவை கூட்டத் தொடரில் தமிழக முதல்வர் மது விலக்கை அறிவிக்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய நிர்வாகக் குழு உறுப்பினர் ஆர்.நல்லகண்ணு வலியுறுத்தியுள்ளார்.
விழுப்புரத்தில் நிருபர்களிடம் நேற்று அவர் கூறியதாவது: சேஷசமுத்திரம் கிராமத்தில் ஏற்பட்ட கலவரத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு நஷ்டஈடு வழங்க வேண்டும். தாக்குதல் நடத்தியவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டும். அமைதியை ஏற்படுத்தி மீண்டும் தேரோட்டம் நடத்த அனுமதி அளிக்க வேண்டும்.
அங்கு உரிய பாதுகாப்பு அளிக்கவேண்டும். மதுவிலக்குப் போராட்டம் மக்கள் போராட்டமாக மாறியுள்ளது. சுதந்திர தினத்தன்று மதுவிலக்கை முதல்வர் அறிவிப்பார் என எல்லோரும் ஆவலாக எதிர்பார்த்தனர். தமிழகத்தில் ஒரு கோடி பேர் மதுவால் சீரழிந்துள்ளனர். எனவே மக்கள் நலன் கருதி சட்டப்பேரவைக் கூட்டத் தொடரில் மதுவிலக்கு குறித்து முதல்வர் அறிவிக்க வேண்டும்.
விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் பகுதியில் கூட்டு குடிநீர் திட்டம் செயல்படும் பகுதியில் 500 மீட்டர் சுற்றளவுக்கு மணல் அள்ளக்கூடாது என சட்டமிருந்தும் மணல் அள்ளப்பட்டுள்ளது. இதுதொடர்பாக ஆட்சியர் நடவடிக்கை எடுக்கவேண்டும். செப்டம்பர் 2-ம் தேதி மத்திய அரசின் தொழில், பொருளாதார கொள்கைகளை எதிர்த்து அனைத்து தொழிற்சங்கங்களும் நடத்தும் போராட்டத்துக்கு கம்யூனிஸ்ட் கட்சிகள், மதிமுக, விடுதலை சிறுத்தைகள் கட்சி உட்பட 5 கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன. இதில் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக சேஷசமுத்திரம் கலவரத்தில் பாதிக்கப்பட்ட மக்கள் தங்கியுள்ள நெடுமானூர் கிராமத்துக்கு நல்லகண்ணு சென்று ஆறுதல் கூறினார்.