Published : 27 Jan 2020 12:07 PM
Last Updated : 27 Jan 2020 12:07 PM

காஷ்மீரில் வீட்டுச் சிறையில் உள்ள அரசியல் தலைவர்களை விடுவிக்க வேண்டும்: ஸ்டாலின்

ஸ்டாலின் - ஒமர் அப்துல்லாவின் சமீபத்திய புகைப்படம்

காஷ்மீரில் வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டுள்ள அனைத்து அரசியல் தலைவர்களையும் விடுவிக்க வேண்டும் என, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலுயுறுத்தியுள்ளார்.

ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய 370-வது சட்டப்பிரிவு ரத்து செய்யப்பட்ட பின்னர், காஷ்மீரில் முன்னாள் முதல்வரும் தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவருமான ஒமர் அப்துல்லா, முன்னாள் முதல்வரும் மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவருமான மெகபூபா முஃப்தி மற்றும் ஜம்மு காஷ்மீர் மக்கள் மாநாட்டுக் கட்சியின் தலைவர் சஜத் லோன் உள்ளிட்ட தலைவர்கள் வீட்டுச் சிறையில் அடைக்கப்பட்டனர். இதில், ஒமர் அப்துல்லா தனது அதிகாரப்பூர்வ வீட்டுக்கு அருகில் வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டார்.

இந்நிலையில், ஒமர் அப்துல்லாவின் வீட்டுச் சிறை ஆறு மாதங்களாக தொடரும் நிலையில், தற்போது அவருடைய புகைப்படம் ஒன்று ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. அந்தப் படத்தில் ஒமர் அப்துல்லா அடையாளம் காண முடியாத வகையில் நீண்ட வெள்ளை தாடியுடன் காட்சியளிக்கிறார். இதனை ட்விட்டரில் பகிர்ந்துள்ள பலர் அவரை வீட்டுச் சிறையில் வைத்திருப்பதற்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர். சிலர் அவர் விரைவில் மீண்டு வர வேண்டும் என, அவருக்கு ஆதரவளித்து வருகின்றனர்.

இந்த புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் இன்று (ஜன.27) பகிர்ந்துள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், ஒமர் அப்துல்லாவின் சமீபத்திய புகைப்படத்தைப் பார்த்து தான் மிகவும் வேதனை அடைந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இவரைப் போலவே வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டுள்ள ஃபரூக் அப்துல்லா, மெகபூபா முஃப்தி மற்றும் பிற அரசியல் கட்சிகளின் தலைவர்களின் நிலை பற்றியும் தான் கவலைப்படுவதாக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

எந்தவித விசாரணையும் இன்றி அவர்கள் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளது கவலை அளிப்பதாகவும், அனைத்து அரசியல் தலைவர்களையும் வீட்டுச் சிறையில் இருந்து மத்திய அரசு விடுவிக்க வேண்டும் என்றும், மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x