தமிழ் மரபு விளையாட்டுகளை மீட்டெடுக்கும் அரசுப் பள்ளி

தமிழ் மரபு விளையாட்டுகளை மீட்டெடுக்கும் அரசுப் பள்ளி
Updated on
1 min read

நாகரிக வளர்ச்சியால் தமிழ் மரபு விளையாட்டுகள் அழிந்து வருகின்றன. பல்லாங்குழி, கண்ணாமூச்சி, ராஜா ராணி, பரமபதம், பம்பரம் உள்ளிட்ட மரபு விளையாட்டுகளை மறந்து, கிரிக்கெட், டென்னிஸ் உள்ளிட்ட விளையாட்டுகளில் ஈடுபட்டது கடந்த தலைமுறை. இவற்றை தற்போதைய தலைமுறை புறக்கணித்துவிட்டு, உடல் உழைப்பே இல்லாத, செல்போன் ‘வீடியோ கேம்ஸ்’ களில் கவனம் செலுத்தி வருகிறது.

கடந்த காலங்களில் மாலை நேரங்களில் ஓடி, ஆடி விளையாடியதால், உடல் உழைப்பு இருந்தது. அதனால், குழந்தை களுக்கு நோய் பாதிப்பு குறைந்து காணப்பட்டது. ஆனால், கணினி வளர்ச்சி, குழந்தைகளை நான்கு சுவருக்குள் முடக்கிவிட்டதால், அவர்களின் உடல் ஆரோக்கியம் இன்று குறைந்து காணப்படுகிறது. இதனால், மரபு விளையாட்டுகளை மாணவ, மாணவியர் மத்தியில் கொண்டு செல்லும் தேவை அதிகரித்துள்ளது. இந்நிலையில், பொள் ளாச்சியை அடுத்த பெத்தநாயக்கனூர் அரசு உயர்நிலைப் பள்ளியில், தமிழ் மரபு விளையாட்டு திருவிழா நேற்று நடைபெற்றது. காலையில் பொங்கல் வைத்து வழிபாடு செய்த பின்னர், பறை இசை, ஒயிலாட்டம், காவடி ஆட்டம், கரகாட்டம், கும்மியாட்டம், வள்ளி கும்மி ஆகியவற்றுடன் தொடங்கிய இந்த விளையாட்டு விழாவில், ராஜா ராணி, நுங்குவண்டி ஓட்டுதல், பம்பரம், கண்ணாமூச்சி, கயிறு இழுத்தல், பாண்டியன் குழி, பன்னாங்கல், தாயம், பூச்சூடவா, சம்பா, ஓட்டங்கரம், கில்லி, டயர்வண்டி ஓட்டுதல், பச்சக்குதிரை, நொண்டி அடித்தல் உள்ளிட்ட மரபு விளையாட்டுகளை, மாணவ, மாணவியர்கள் உற்சாகமாக விளையாடினர். கபடி, பச்சக்குதிரை ஆகியன மாணவர்களிடம் தன்னம்பிக்கை, குழுவாகச் செயல்படுதல், விடாமுயற்சி, மனவலிமை ஆகியவற்றை வெளிப்படுத்தும்.

இதுகுறித்து பள்ளியின் தமிழ் ஆசிரியர் பாலமுருகன் கூறும்போது, 'கடந்த 6 ஆண்டுகளாக எங்கள் பள்ளியில் மரபு விளையாட்டு திருவிழாவை நடத்தி வருகிறோம். மரபு விளையாட்டுகள் மாணவர்களின் கற்பனைத் திறன், சிந்திக்கும் ஆற்றல், ஞாபக சக்தி, கூர்நோக்கும் திறனை அதிகரித்தல் ஆகியவற்றுக்கு உதவுகின்றன.

மேலும், ஆசிரியர், மாணவர் இடையே புரிதல் ஏற்பட்டு, இருவருக்கும் இடையிலான இடைவெளியைக் குறைக்கிறது. மாணவர்களுக்கு தாழ்வு மனப்பான்மையை நீக்கி, தன்னம்பிக்கையை ஏற்படுத்துகிறது' என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in