

செங்கல்பட்டு, பரனூர் சுங்கச்சாவடியில் அரசு பேருந்து ஓட்டுநர், நடத்துநர் மீது தாக்குதல் நடத்தியதால் பேருந்தில் வந்த பயணிகள் சுங்கச்சாவடியை தாக்கி சேதப்படுத்தினர்.
செங்கல்பட்டு அடுத்த பரனூரில் சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சுங்கச்சாவடி உள்ளது. நேற்றுமுன்தினம் நள்ளிரவு கோயம்பேட்டிலிருந்து நெல்லை நோக்கி அரசு விரைவு பேருந்து வந்து கொண்டிருந்தது. இந்த பேருந்தில் நெல்லை, நாங்குநேரி பகுதியைச் சேர்ந்தநாராயணன் (38) என்பவர் ஓட்டுநராகஇருந்துள்ளார். நடத்துநர் அம்பாசமுத்திரத்தை சேர்ந்த பசும்பொன் முத்துராமலிங்கம் இருந்தார்.
சுங்கச்சாவடி வந்தபோது, அங்கிருந்த ஊழியர்கள் அரசு பேருந்தை மறித்து கட்டணம் கேட்டுள்ளனர். பாஸ்டாக் ஏற்கெனவே எடுத்துவிட்டதாகவும் மீண்டும்எடுக்க முடியாது எனவும் ஓட்டுநர் கூறியுள்ளார். இதை சுங்கச்சாவடி ஊழியர்கள் ஏற்க மறுத்தனர். இதனால் ஓட்டுநருக்கும் சுங்கச்சாவடி ஊழியர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது சுங்கச்சாவடி ஊழியர் திடீரென பேருந்து ஓட்டுநரை தாக்கியுள்ளார். இதை கேட்ட நடத்துனரையும் ஊழியர்கள் தாக்கினர்.
சுங்கச்சாவடி கவுன்ட்டர்கள் சூறை
இதனால் ஆத்திரமடைந்த பேருந்து ஓட்டுநர் பேருந்தை வாகனங்கள் செல்லாதவாறு சுங்கச்சாவடி குறுக்கே நிறுத்தியுள்ளார். அப்போது அந்த வழியே வந்த மற்ற பேருந்து ஓட்டுநர்களும், சுங்கச்சாவடி ஊழியர்களை கண்டித்து பேருந்துகளை சாலையின் குறுக்கே நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் சுமார் நான்கு கி.மீ. தொலைவுக்கு வாகன நெரிசல் ஏற்பட்டது. இந்தசம்பவத்தைத் தொடர்ந்து பேருந்துகளில் வந்த பயணிகள், அரசு ஓட்டுநர், நடத்துநர்களுக்கு ஆதரவாக சுங்கச்சாவடி ஊழியர்களை தாக்கி, அனைத்து கட்டணகவுன்ட்டர்களையும் அடித்து நொறுக்கினர்.
மேலும் அங்கே நிறுத்திவைக்கப்பட்டிருந்த ஊழியர்களின் வாகனங்களையும் சேதப்படுத்தினர். இந்த சம்பவத்தை பயன்படுத்தி சிலர் சுங்கச்சாவடியில் வசூலான தொகையை திருடிச் சென்றதாகக் கூறப்படுகிறது.
போக்குவரத்து கடும் பாதிப்பு
போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டதால், தகவலறிந்து வந்த செங்கல்பட்டு காவல்துறையினர் உடனடியாக பேருந்துகளை அப்புறப்படுத்தி வாகனங்களை கட்டணம் இல்லாமல் செல்ல ஏற்பாடு செய்தனர். இந்த வாகன நெரிசலால் சுமார் 3 மணி நேரத்துக்கும் மேலாக இரு மார்க்கங்களிலும் வாகனங்கள் நீண்டவரிசையில் காத்திருந்தன.
இந்த சம்பவம் தொடர்பாக செங்கல்பட்டு தாலுகா போலீஸார் இருதரப்பினரிடமும் புகார் பெற்று வழக்கு பதிவு செய்துவிசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சுங்கச்சாவடிகள் முற்றிலும் சேதமடைந்துள்ளதால் அவற்றை சீரமைப்பதற்கு ஒரு வாரத்துக்கும் மேலாகும் எனத் தெரிகிறது. அதுவரை வாகனங்கள் கட்டணம் இன்றி செல்ல அனுமதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாங்குநேரி சுங்கச்சாவடியிலும் மோதல்
திருநெல்வேலி
கன்னியாகுமரி மாவட்டம் மணவாளக்குறிச்சி ஆறாம்விளையைச் சேர்ந்த ஷேக்சுலைமான் (44) மற்றும் கேரளத்தைச் சேர்ந்த அவரது உறவினர்கள் 10-க்கும் மேற்பட்டோர் திருமண விழாவுக்காக 2 கார்களில் நேற்று தூத்துக்குடிக்கு வந்து கொண்டிருந்தனர். நாங்குநேரி சுங்கச்சாவடியில் சுங்கக் கட்டணம் செலுத்த அவர்கள் காத்திருந்தனர். தாமதம் ஏற்பட்டதால், ஷேக்சுலைமான் உள்ளிட்டோர் அங்கிருந்த ஊழியர்களிடம் இதுகுறித்து கேட்டுள்ளனர். அப்போது காரில் வந்த சர்புதீன் (48) என்பவருக்கும், ஊழியர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இரும்பு கம்பி, சேர் உள்ளிட்டவற்றால் காரில் வந்தவர்களை ஊழியர்கள் தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதை தடுக்கமுயன்றவர்களும் தாக்கப்பட்டனர்.இதில் ஷேக்சுலைமான், அல் அமீது மனைவி சமீமா (27), கார் ஓட்டுநர் நாகர்கோவிலைச் சேர்ந்த ஜெகன் உள்ளிட்ட 10 பேர் காயமடைந்தனர். பலத்த காயமடைந்த 5 பேர் நாங்குநேரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். நாங்குநேரி போலீஸார் சுங்கச்சாவடி ஊழியர்கள் 3 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.