

திருவள்ளூர் அருகே இளம்பெண்ணை காப்பாற்றும் முயற்சியில் உயிரிழந்த ஏகேஷ் உள்ளிட்ட 5 பேருக்கு வீரதீர செயலுக்கான அண்ணா பதக்கத்தை குடியரசு தின விழாவில் முதல்வர் பழனிசாமி வழங்கினார்.
சில மாதங்களுக்கு முன் திருவள்ளூர் மாவட்டம் மப்பேட்டில் இருந்து ஆட்டோவில் பயணித்த இளம்பெண் ஒருவர், ஆட்டோ வேறு பாதையில் செல்வதை அறிந்து காப்பாற்றுமாறு கூச்சலிட்டார். அப்பெண்ணின் அலறல் சத்தம் கேட்டு அவரை மீட்கும் முயற்சியில் இளைஞர்கள் சிலர் ஈடுபட்டனர். அப்போது ஏற்பட்ட விபத்தில் ஏகேஷ் என்பவர் உயிரிழந்தார். பிரிஸ்டன் பிராங்களின், வினித், சார்லிபன், ஈஸ்டர் பிரேம்குமார் ஆகியோர் காயமடைந்தனர். இளம்பெண்ணை காப்பாற்றும் முயற்சியில் உயிரிழந்த ஏகேஷ் உள்ளிட்ட 5 பேருக்கு வீரதீர செயலுக்கான அண்ணா பதக்கத்தை சென்னையில் நேற்று நடந்த குடியரசு தின விழாவில் முதல்வர் பழனிசாமி வழங்கினார். ஏகேஷ் சார்பில் அவரது குடும்பத்தினர் பதக்கத்தை பெற்றுக் கொண்டனர்.
ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த இரண்டரை வயது குழந்தையை தனது உயிரையும் பொருள்படுத்தாமல் மீட்ட நாகப்பட்டினம் தீயணைப்புத் துறை ஓட்டுநர் இரா.ராஜா, தனது கழுத்தில் இருந்து தங்கச் சங்கிலியை பறிக்க முயன்ற திருடனை துணிச்சலுடன் பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்த திருவள்ளூர் மாவட்டம் காட்டுப்பாக்கம் தனலட்சுமி, கோணிமேடு வினோதினி, வீட்டில் திருட வந்த திருடனை துணிவுடன் பிடித்து காவல் துறையினரிடம் ஒப்படைத்த தஞ்சை மாவட்டம், ஒரத்தநாடு இந்திரா காந்தி, அவரது கணவர் பழனியப்பன் ஆகியோருக்கும் வீரதீர செயலுக்கான அண்ணா பதக்கத்தை இந்நிகழ்ச்சியில் முதல்வர் பழனிசாமி வழங்கினார். ஒவ்வொருவருக்கும் ரூ. 5 ஆயிரம் மதிப்புள்ள தங்க முலாம் பூசப்பட்ட பதக்கம், தலா ரூ. 1 லட்சத்துக்கான காசோலை ஆகியவற்றை முதல்வர் வழங்கினார்.
கோட்டை அமீர் விருது
திருச்சி மாவட்டம், புத்தாநத்தம் கிராமத்தில் ஞானரத ஊர்வலம், விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் ஆகியவற்றின்போது காவல் துறையினர் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்துவது வழக்கம். அதில் கலந்துகொண்டு, இந்து - முஸ்லிம் மக்களிடையே எந்தப் பிரச்சினையும் இன்றி ஊர்வலம் அமைதியாக நடைபெற உதவிய மு.ஷாஜ் முகமதுவுக்கு கோட்டை அமீர் மத நல்லிணக்கப் பதக்கம் மற்றும் ரூ. 25 ஆயிரத்துக்கான கேட்புக் காசோலையை முதல்வர் வழங்கினார்.
திருப்பூர் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் ஆய்வாளர் எஸ்.சந்திரமோகன், திருச்சி மத்திய புலனாய்வுப் பிரிவு காவல் ஆய்வாளர் தே.ராஜசேகரன், கடலூர் மாவட்டம், பண்ருட்டி காவல் நிலைய ஆய்வாளர் த.பூங்கோதை, விழுப்புரம் மத்திய புலனாய்வுப் பிரிவு காவல் உதவி ஆய்வாளர் என்.அழகிரி, தஞ்சை மாவட்டம், கும்பகோணம் மேற்கு காவல் நிலைய தலைமைக் காவலர் அ.பார்த்திபநாதன் ஆகியோருக்கு காந்தியடிகள் காவலர் பதக்கங்களை முதல்வர் பழனிசாமி வழங்கினார்.
சிறந்த காவல் நிலையங்க ளுக்கான முதலமைச்சரின் முதல்பரிசு கோவை சி2 பந்தயச் சாலைகாவல் நிலைய ஆய்வாளர் ஏ.சக்திவேல், 2-வது பரிசு திண்டுக்கல் நகர வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் பி.உலகநாதன், 3-வது பரிசு தருமபுரி நகர காவல் நிலைய ஆய்வாளர் சி.எம்.ரத்தினகுமார் ஆகியோருக்கு வழங்கப்பட்டது.
திருந்திய நெல் சாகுபடி தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி அதிக உற்பத்தி செய்யும் விவசாயி ஒருவருக்கு ரூ. 5 லட்சம் பரிசுடன் வேளாண்மைத் துறை சிறப்பு விருது ஆண்டுதோறும் வழங்கப்படுகிறது. இதன்படி ஹெக்டேர் ஒன்றுக்கு 16 ஆயிரத்து 750 கிலோ தானிய மகசூல் பெற்று சாதனைப் படைத்த ஈரோடு மாவட்டம், சென்னிமலை வட்டம், குன்னாங்காட்டு வலசு, பசுவப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சு.யுவக்குமாருக்கு வேளாண்மைத் துறை சிறப்பு விருது, ரூ. 5 லட்சத் துக்கான காசோலை, ரூ. 5 ஆயிரம் மதிப்புள்ள பதக்கத்தை முதல்வர் பழனிசாமி வழங்கினார்.