Published : 27 Jan 2020 07:05 AM
Last Updated : 27 Jan 2020 07:05 AM

டி.ஆர்.பாலு விடுவிப்பு: திமுக முதன்மைச் செயலாளராக திருச்சி கே.என்.நேரு நியமனம்

திமுக முதன்மைச் செயலாளராக திருச்சி தெற்கு மாவட்ட திமுக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.என்.நேரு எம்.எல்.ஏ. நியமிக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பாக திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன் நேற்று வெளியிட்ட அறிவிப்பில், “திமுக முதன்மைச் செயலாளராகப் பொறுப்பு வகித்து வரும் டி.ஆர்.பாலு, நாடாளுமன்ற திமுக குழுத்தலைவராகவும் பொறுப்பு வகித்துவருவதால், அவருக்குப் பதிலாகதிமுக முதன்மைச் செயலாளராக கே.என்.நேரு எம்.எல்.ஏ. கட்சித்தலைமையால் நியமிக்கப்படுகிறார்" என்று தெரிவித்தார்.

திமுக தலைவராக இருந்த கருணாநிதி கடந்த 2018 ஆகஸ்ட் 7-ம்தேதி காலமானார். அதனைத் தொடர்ந்து ஆகஸ்ட் 28-ம் தேதிநடைபெற்ற திமுக பொதுக்குழுவில் அக்கட்சியின் தலைவராக மு.க.ஸ்டாலினும், பொருளாளராக துரைமுருகனும் தேர்வு செய்யப்பட்டனர். எனவே, துரைமுருகன் வகித்து வந்த முதன்மைச் செயலாளர் பதவியில் 2018 செப்டம்பர் 14-ம் தேதி முன்னாள் மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு நியமிக்கப்பட்டார்.

கடந்த 2019 மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணி அமோக வெற்றி பெற்றது. ஸ்ரீபெரும்புதூர் மக்களவைத் தொகுதியில் வென்ற டி.ஆர்.பாலு நாடாளுமன்ற திமுககுழுத் தலைவராக செயல்பட்டு வருகிறார். இந்நிலையில் 9 மாதங்களுக்குப் பிறகு நாடாளுமன்ற குழுத் தலைவர் பதவியை காரணம் காட்டி அவர் முதன்மைச் செயலாளர் பதவியிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பாக திமுக நிர்வாகிகளிடம் விசாரித்தபோது, "திமுகவில் முதன்மைச் செயலாளர் பதவி என்பது மிக முக்கியமானது. கட்சி நிர்வாகிகள் இடையே ஏற்படும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பது, கட்சி தலைமை அலுவலகப் பணிகளை மேற்கொள்வது, கூட்டணி, தொகுதிப் பங்கீடு, வேட்பாளர் தேர்வு, நிர்வாகிகள் நியமனம் ஆகியவற்றில் முதன்மைச் செயலாளர் முக்கியப் பங்கு வகிப்பார். டி.ஆர்.பாலு அதிக நாள்கள் டெல்லியில் இருக்க வேண்டியிருப்பதாலும், டெல்லி அரசியல்பணிகளுக்கு அவர் தேவைப்படுவதாலும் முதன்மைச் செயலாளர் பதவியிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்" என்றனர்.

அனுபவம் வாய்ந்த முன்னாள்அமைச்சர்கள் பலர் இருக்கும்போது கே.என்.நேரு நியமிக்கப்பட்டது ஏன் என்று திமுக நிர்வாகிகளிடம் விசாரித்தபோது, “1989-ல்முதல் முறையாக எம்.எல்.ஏ. ஆனபோதே அமைச்சரானவர் நேரு. அந்த காலகட்டத்தில் திருச்சி திமுகவில் செல்வாக்குடன் திகழ்ந்த என்.செல்வராஜ் மதிமுகவில் இணைந்தார். இதனால் 1993-ல் திமுக மாவட்டச் செயலாளராக நியமிக்கப்பட்டார். அன்று முதல்இன்று வரை மாவட்டச் செயலாளராக இருக்கிறார். கருணாநிதியின் நம்பிக்கைக்கு உரியவராகத் திகழ்ந்தவர். மு.க.ஸ்டாலினுக்கும், இளைஞரணிச் செயலாளர் உதயநிதிக்கும் நெருக்கமான அன்பில் மகேஷ் பொய்யாமொழியை திருச்சி மாவட்டச் செயலாளராக்கி முக்கியத் தலைவராக்க கட்சித் தலைமை திட்டமிட்டது. நேரு மாவட்டச் செயலாளராக இருந்தால் அது சாத்தியமில்லை என்பதால்தான் அவர் முதன்மைச்செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்" என்றனர்.

67 வயதான கே.என்.நேருதிருச்சி மாவட்டம் காணக்கிளியநல்லூர் கிராமத்தில் பிறந்தவர். புள்ளம்பாடி ஊராட்சி ஒன்றியக் குழு தலைவர், எம்.எல்.ஏ.( 1989, 1996-ல் லால்குடி, 2006, 2016-ல் திருச்சி மேற்கு), பால்வளம், மின்சாரம், செய்தித்துறை, போக்கு வரத்து, கூட்டுறவு ஆகிய துறைகளின் அமைச்சர் என்று பல் வேறு பொறுப்புகளை வகித்தவர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x