

கரோனா வைரஸ் தாக்குதல் காரணமாக, சீனாவில் மருத்துவ படிப்புக்கு சென்றுள்ள சென்னை மாணவர்கள் அங்கிருந்து திரும்பி வர முடியாமல் தவித்து வருகின்றனர்.
சீனாவில் கரோனா வைரஸ் தாக்குதலால் ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், சென்னையில் இருந்து அந்நாட்டுக்கு மருத்துவப் படிப்புக்கு சென்றுள்ள மாணவர்கள் கடும் இன்னலுக்கு ஆளாகியுள்ளனர். குறிப்பாக, வூஹான் பல்கலைக்கழகத்தில் மருத்துவப் படிப்பு படிக்கும் மாணவர்கள் சிலர் அங்கு சிக்கியுள்ளனர். அம்மாகாணத்தில் ரயில், விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதால் வெளியேற முடியாமல் தவிக்கின்றனர்.
சென்னையைச் சேர்ந்த பாளையம் என்பவரது மகன் விஷாலும் அங்கு சிக்கியுள்ளார். இதுகுறித்து, பாளையம் கூறும்போது, “எனது மகன் விஷால், வூஹான் பல்கலைக்கழகத்தில் மருத்துவ படிப்பு படித்து வருகிறார். தற்போது கரோனா வைரஸ் தாக்குதல் காரணமாக, விடுதியில் உணவு கிடைக்காமல் தவித்து வருகிறார். வைரஸ் தாக்குவதைத் தடுக்கும் வகையில், தினமும் மஞ்சள் கலந்த நீரையும், சூடான பாலையும் குடிக்குமாறு மகனிடம் கூறி வருகிறோம்” என்றார்.
இதுகுறித்து விஷால் கூறும்போது, “கரோனோ வைரஸ் காரணமாக இங்குள்ள அனைத்து உணவகங்களும், கடைகளும் மூடப்பட்டுள்ளன. விடுதி உணவகம் மட்டும் ஒருவேளை திறக்கப்படுகிறது. அறையை விட்டு வெளியேறக் கூடாது என கூறியுள்ளதால், நாங்கள் விடுதி அறையிலேயே முடங்கியுள்ளோம். எங்களை தாய்நாட்டுக்கு திருப்பி அனுப்பும்படி, இந்திய தூதரகத்தை தொடர்புகொண்டு தினமும் கோரிக்கை விடுத்து வருகிறோம். ஆனால், இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை” என்றார்.
சீனாவில் உள்ள தமிழ் சமூக அமைப்பின் துணைத் தலைவர் பழனிவேலு, “தமிழகத்தைச் சேர்ந்த 400 மருத்துவ மாணவர்கள் உட்பட ஆயிரம் பேர் இங்குள்ள குவாங்சூ மாகாணத்தில் வசித்து வருகின்றனர். கரோனா வைரஸ் தாக்காமல் இருக்க முகமூடி அணிந்து கொள்ளுமாறும், அசைவ உணவை தவிர்க்கும்படியும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன” என்றார்.