Published : 27 Jan 2020 06:56 AM
Last Updated : 27 Jan 2020 06:56 AM

தஞ்சாவூர் பெரிய கோயில் குடமுழுக்கு விழாவையொட்டி 22 ஆயிரம் சதுர அடியில் பிரம்மாண்ட யாகசாலை: இன்று பூர்வாங்க பூஜைகள் தொடங்குகின்றன

தஞ்சாவூர் பெரிய கோயிலில் பிப்ரவரி 5-ம் தேதி கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளதையொட்டி பக்தர்கள் நெரிசலின்றி சுவாமி தரிசனம் செய்ய ஏதுவாக தடுப்புகள் அமைக்கப்பட்டு வருகின்றன. (அடுத்த படம்) தஞ்சாவூர் பெரியகோயிலில் கும்பாபிஷேகத்துக்காக அமைக்கப்பட்டுள்ள பிரம்மாண்ட யாகசாலை பந்தல்.

தஞ்சாவூர்

தஞ்சாவூர் பெரிய கோயில் குடமுழுக்கு விழாவுக்காக 22 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் பிரம்மாண்ட யாகசாலை அமைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து இன்று (ஜன. 27) பூர்வாங்க பூஜையுடன் குடமுழுக்கு விழா தொடங்குகிறது.

தஞ்சாவூர் பெரிய கோயில் குடமுழுக்கு விழா 23 ஆண்டுகளுக்குப் பிறகு வரும் பிப்.5-ம் தேதி நடைபெறவுள்ளது. இதற்காக கோயிலில் கடந்த 2 ஆண்டுகளாக திருப்பணிகள் நடைபெற்று வந்தன. இப்பணிகள் அனைத்தும் நிறைவுற்ற நிலையில், இன்று (ஜன.27) காலை 9.30 மணிக்கு யஜமான அனுக்ஞை, தேவதா அஷ்டாங்க அனுக்ஞை என்ற பூர்வாங்க பூஜையுடன் குடமுழுக்கு விழா தொடங்குகிறது.

தொடர்ந்து, ஜன. 28-ம் தேதி கணபதி ஹோமம், தனபூஜை, லட்சுமி பூஜையும், 29, 30-ம் தேதிகளில் சாந்தி பூஜையும் நடைபெறஉள்ளது. 31-ம் தேதி காலை 9 மணிக்கு வெண்ணாற்றங்கரையிலிருந்து புனித நீர், யானை மீது ஊர்வலமாக கொண்டு வரப்படுகிறது. தொடர்ந்து பிப். 1-ம் தேதி முதல் 5-ம் தேதி வரை 8 கால யாசாலை பூஜைகள் நடைபெறவுள்ளன.

பிப்.1-ம் தேதி தொடங்க உள்ள யாகசாலை பூஜைகளுக்காக கடந்த டிச.5-ம் தேதி முதல் பந்தல், குண்டங்கள், வேதிகைகள் அமைக்கும் பணி நடைபெற்று வந்தது. சுவாமி, அம்பாள் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு 22 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ள யாகசாலையில் 110 குண்டங்கள், 22 வேதிகைகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில், 332 சிவாச்சாரியார்கள், 80 ஓதுவார்கள் அமர்ந்து யாகசாலை பூஜையை நடத்தவுள்ளனர்.

தற்போது, வேதிகை பீடத்தில் பஞ்சவர்ணம் கொண்டு பழமையான ஓவியங்கள் தீட்டப்பட்டு வருகின்றன. யாகசாலை பந்தலில் தேவர்கள், ரிஷிகள், முனிவர்கள், அஷ்டதிக்கு பாலகர்கள், தேவகணங்கள் என ஏராளமான சுதை சிற்பங்களும் அமைக்கப்பட்டுள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x