Published : 27 Jan 2020 06:54 AM
Last Updated : 27 Jan 2020 06:54 AM

டிஎன்பிஎஸ்சி தேர்வு - மீளுமா நமது நம்பிக்கை?

இந்தியாவில், குறிப்பாக தமிழ்நாட்டில் பொதுநிர்வாகம் கடுமையான ‘நம்பிக்கை' நெருக்கடிகளை சந்தித்து வருகிறது. அதிலும், அரசுப் பணி நியமனம் தொடர்பான நடவடிக்கைகள் மிகுந்த சர்ச்சைக்கு உள்ளாகி வருகின்றன.

சமீபத்திய உதாரணம் - டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வில் நடைபெற்ற முறைகேடுகள். ராமேஸ்வரம் - கீழக்கரை மையத்தில், 99 பேர் முறைகேடான வழியில் தேர்ச்சி பெற்றதாகக் கண்டறியப்பட்டு, தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

தேர்வர்களிடம் ஒரு பேனா கொடுத்து அதில் தேர்வு எழுதும்படி ‘சொன்னார்களாம்'. அந்தப் பேனாவின் மை, சிறிது நேரத்தில் மறைந்து விடுமாம்; பிறகு சரியான பதில்களை வேறு மைகொண்டு நிரப்புவார்களாம். இதனால் அவர்களுக்கு முழு மதிப்பெண்களும் கிடைத்து விடுமாம்.

தேர்வு முடிந்த உடன், அத்தனை விடைத் தாள்களும் ஒரு உறையில் வைத்து ‘சீல்' இடப்படும். ஆணையத்தின் அனுமதியுடன், சீலிடப்பட்ட உறை சரியான நிலையில் இருக்கிறதா என்று உறுதி செய்து கொண்டுதான், அதனைத் திறக்க வேண்டும். எனவே, விடை திருத்தும் மையத்தில் தவறு நடைபெற சாத்தியங்கள் குறைவு.

ஒரு வேளை ‘ஓ.எம்.ஆர்.' தாளில், விடைகள் மாற்றப்பட்ட பிறகுதான் சீலிடப்பட்டது என்றால் மோசடிக்காரர்களுக்கு, அவ்வளவு கால அவகாசம் எப்படிக் கிடைத்தது...?

ஓரிரு ஆண்டுகளுக்கு முன்பு, மத்திய அரசுப் பணிக்கான, ஒரு போட்டித் தேர்வுக்கு (மைய) கண்காணிப்பாளராகப் பணிபுரிந்த அனுபவத்தில் சொல்கிறேன். தேர்வு முடிந்த சுமார் ஒரு மணி நேரத்துக்குள்ளாக, தேர்வுக்குப் பிந்தைய ‘கடமைகள்' அத்தனையும் முடித்து, அது பற்றிய ‘செய்தி'/அறிக்கையும் அனுப்பிவிட்டேன்.

ஒருவேளை, இந்த நடைமுறையில் கால தாமதம் ஏற்பட்டு இருந்தால், ஆணையத்தின் கவனத்துக்கு எப்படி வராமல்போயிற்று...? விடைத்தாள்களில் ஏற்கனவே இருந்த மை, உலர்வதற்குச் சிறிது நேரம் பிடிக்கும்; பிறகு விடைகளை மாற்றி எழுத வேண்டும். இதற்கெல்லாம் நேரம் கிடைத்ததா...? போட்டித் தேர்வு எழுதுகிற தேர்வர்களுக்கு மட்டும்தான் ‘நேர மேலாண்மை' தேவை போலும்!!

நியாயமாக எழுகிற கேள்வி என்னவெனில், தேர்வர்களைக் கண்காணிக்கிற ஆணையம், கண்காணிப்பாளர்களைக் 'கண்டுகொள்ளாமல்' விடலாமா...? ‘சி.சி.டி.வி.' காமிராக்கள் இருந்தனவா..?தேர்வர்களிடம் இருந்து விடைத்தாள்கள் சேகரிக்கப்பட்டு, முறையாக ஓர் உறைக்குள் வைத்து ‘சீல்' இடப்படும் வரை, கண்காணிப்பு வளையத்துக்குள் வரவேண்டும் அல்லவா..? ஏன் அப்படிச் செய்யவில்லை...?

ராமேஸ்வரம், கீழக்கரை மையங்களில் பணியில்இருந்த வட்டாட்சியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். வட்டாட்சியர்கள் என்போர், ஏதோ கீழ்நிலை ஊழியர்கள் அல்ல. பொறுப்பான பதவியில்,மிகுந்த அதிகாரம் கொண்டவர்கள். அவர்களா இதற்கு உடந்தையாக இருந்துள்ளனர்...? என்ன தான் நடக்கிறது...?

சொன்னால் பலருக்குக் கோபம் வருகிறது. பெருந்தலைவர் காமராசர் காலத்துக்குப் பிந்தைய அரசுகளில், அரசு ஊழியர்கள், கல்லூரிப் பேராசிரியர்கள், பள்ளி ஆசிரியர்களின் நியமனம் மற்றும் பணியிட மாற்றங்களில் ஊழல் தலைவிரித்தாடியது. இதன் பின்விளைவுகளில் ஒன்றுதான் தற்போது வெளிவந்துள்ள டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேடு.

எளிதாக டிஎன்பிஎஸ்சி நிர்வாகத்தைக் குறை சொல்லி விடலாம். ஆனால், பல லட்சம் பேர் எழுதுகிற தேர்வை நடத்தி முடிக்க, அரசு அலுவலர்களின் ஒத்துழைப்பு, ஆணையத்துக்கு மிக அவசியம் ஆகிறது. தேர்வுகள், தேர்தல்கள், மருத்துவ சுகாதார திட்டங்கள், வெவ்வேறு கணக்கெடுப்புகள் என்று எதையுமே ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள், தயவு இன்றி செயல்படுத்தவே முடியாது. இப்படி இருக்க, பல லட்சம் பேர் எழுதும் போட்டித் தேர்வுகளை சிறப்பாக நடத்தி முடிக்க ஆணையத்திடம் என்ன ‘வசதி' இருக்கிறது? முழுமையாக தன்னுடைய கட்டுப்பாட்டின் கீழ் வராத,'பகுதி நேர'அலுவலர்கள் மீது ஆணையம் என்ன அதிகாரம் செலுத்திவிட முடியும்? பிரச்சினையின் மறு கோணம் இது.

அரசு மேற்கொள்ளும் ஊதியம் தருகிற ‘பொதுக்காரியங்களில்' ஈடுபடுத்துகிற வகையில், இளைஞர்களைப் பயிற்றுவிக்க வேண்டும். வேலை வாய்ப்பும் உருவாகும்; இத்தகைய குழு மட்டும்கிடைக்குமானால் தேர்வு ஆணையமும் சரி தேர்தல் ஆணையமும் சரி, இன்னமும் 'சுதந்திரமாக' செயல்பட முடியும்.

குரூப் 4 தேர்வில் முறைகேட்டு புகார் மீது, மிக விரைந்த நடவடிக்கை எடுத்துள்ள டிஎன்பிஎஸ்சி நிர்வாகம் பாராட்டுக்கு உரியது. ஆனாலும், அதன் முன் மிகப்பெரிய சவால் காத்துக் கிடக்கிறது. ராமநாதபுரம், கீழக்கரை சம்பவம் காரணமாக, அரசுப் பணிக்கான தேர்வுகளின் மீது இளைஞர்களின் நம்பிக்கை வெகுவாகத் தகர்ந்து போயுள்ளது. இதனைச் சரி செய்வது அத்தனை எளிதான காரியம் அல்ல.

புலனாய்வு அமைப்புகளின் துணையுடன், வேறேதும் முறைகேடுகள் நடைபெற்றனவா என்று முழுமையாக ஆய்வு செய்வதில் தவறு இல்லை. இத்துடன், இனி வரும் நாட்களில் ஆணையம், ‘கீழ் இறங்கி' வந்து செயலாற்ற வேண்டும். இளைஞர்களுடன் நேரடியாகக் கலந்துரையாடுதல், இணைய வழித் தடங்களைப் பரவலாக்குதல், தேர்வுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை வலுப்படுத்துதல், தேர்வு நடவடிக்கைகளை முழுவதுமாக கண்காணிக்க வகை செய்தல், பொது வாழ்வில் உள்ள நேர்மையாளர்களை ஆணையப் பணிகளில் ஈடுபடுத்துதல், ஊடகங்களுடன் அதிகம் உரையாடுதல், தகவல்களைப் பகிர்ந்து கொள்ளுதல்.. என்று பல வழிகளை முயற்சித்து பார்க்க வேண்டும். தற்போது வரும் செய்திகளின்படி, குரூப் 2, காவலர் தேர்வு உள்ளிட்ட வேறு சில தேர்வுகளும் சந்தேக வளையத்துக்குள் சிக்கும் எனத் தோன்றுகிறது. ஒரு முறைகேடு உறுதியானால், மேலும் பல தவறுகள் குறித்து செய்திகள் வருவது வழக்கம்தான்.

ஒரு வகையில், ஆணையத்துக்கு கிடைத்துள்ள நல்ல சந்தர்ப்பம் இது. புலனாய்வு அமைப்புகளின் துணையுடன், தவறுகளை முற்றிலுமாக களையெடுக்கிற பணியில் ஆணையம் தீவிரமாக செயல்பட வேண்டும். ஆணையத்துக்கு என சுயமாக பணிப்படை (workforce) இல்லாமல் இருப்பதே இதுபோன்ற முறைகேடுகள் நடைபெறுவதற்கு மூலக்காரணமாகும். இந்த விஷயத்திலும் நிரந்தரத் தீர்வுக்கு முயற்சித்தால் என்றைக்கும் நல்லது.

தேர்வும் தேர்ச்சியும் தாண்டி இளைஞர்களின் நம்பிக்கை - அனைத்திலும் முக்கியம் ஆனது. எந்த நிலையிலும் ஆணையம் மீதான நம்பகத் தன்மை, குன்றிவிடக் கூடாது. சிறந்த நேர்மையான செயலாளர், இந்த ‘சோதனை'யில் இருந்து ஆணையத்தை மீட்டெடுப்பார் என்று நம்பலாம். இதற்கு, டிஎன்பிஎஸ்சி நிர்வாகத்துக்குத் துணை நிற்க வேண்டியது நமது கடமை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x