

தமிழ்நாட்டில் கள் இறக்க அரசு அனுமதியளிக்க வலியுறுத்தி, அடுத்த ஆண்டு ஜனவரி 21-ம் தேதி கள் இறக்கும் போராட்டம் நடத்தப்படும். அந்தப் போராட்டத்தில் வெற்றி கிடைக்காவிட்டால் தமிழ்நாடு கள் இயக்கம் கலைக்கப்படும் என்று அதன் கள ஒருங்கிணைப்பாளர் செ.நல்லசாமி கூறியுள்ளார்.
திருச்சியில் நேற்று அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
தமிழ்நாட்டில் மதுவிலக்கு அமல்படுத்தப்பட்டால் அதை வரவேற்கிறோம். ஆனால், கள் மது அல்ல; அது, உணவின் ஒரு பகுதி. இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் கள்ளை உணவுப் பட்டியலில் வைத்துள்ளது. எனவே, கள் இறக்க அனுமதி அளிக்க வேண்டும்.
அதே வேளையில் கள்ளுக்கடை நடத்தினால், கள்ளில் கலப்படம் செய்யவும், அதன் தரம் குறையவும் வாய்ப்பு உள்ளது. எனவே, கள்ளை மரத்திலிருந்து இறக்கும் இடத்திலேயே பருகும் வகையில் அனுமதிக்க வேண்டும்.
ஆனால், அரசியலமைப்புச் சட்டத்தின் 47-வது பிரிவுக்கு எதிராக தமிழகத்தில் கள் இறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. கள் இறக்க தடை விதித்துள்ள அரசு, வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு மதுபான விற்பனையில் ஈடுபட்டு வருகிறது. கள் இறக்குவோர் மீது தமிழ்நாடு மதுவிலக்குச் சட்டத்தின்படி நடவடிக்கை எடுப்பது அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிரானது.
கள் போதை தரும் பொருள்தான் என்று நிரூபித்தால் ரூ.10 கோடி தருவதாக அறிவித்தும், அரசுத் தரப்போ அல்லது அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளோ அதுகுறித்து விவாதம் நடத்தவோ, நிரூபிக்கவோ முன்வரவில்லை.
எங்களுக்கு முன்பு ஆதரவு தெரிவித்த கட்சிகள்கூட தற்போதைய சூழலில் அந்த நிலைப்பாட்டில் இருந்து பின்வாங்குகின்றனர். கள் இறக்க அனுமதி அளித்தால் தமிழ்நாட்டில் பனை மற்றும் தென்னைத் தொழிலாளர்கள் உட்பட 60 லட்சம் பேர் பயன் பெறுவர்.
பல ஆண்டுகளாக கள் இறக்க அனுமதி கேட்டு பல கட்ட போராட்டங்களை நடத்தி வந்துள்ளோம். இந்த நிலையில், அடுத்த ஆண்டு ஜனவரி 21-ம் தேதி தமிழகம் முழுவதும் கள் இறக்கி விற்பனை செய்யும் போராட்டம் நடத்தவுள்ளோம். அந்தப் போராட்டமே கள் இறக்க அனுமதி கோரி நடத்தப்படும் இறுதிப் போர். அதில் வெற்றி கிடைக்காவிட்டால், தமிழ்நாடு கள் இயக்கம் கலைக்கப்படும் என்றார் நல்லசாமி.
பேட்டியின்போது, தமிழக உழவர் சங்கத் தலைவர் பொங்கலூர் மணிகண்டன், உழவன் உழைப்பாளர் சங்க மாநிலத் துணைத் தலைவர் ராவணன், மாநிலச் செயலாளர் அருண், மாநில செய்தித் தொடர்பாளர் செந்தில் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.