Published : 26 Jan 2020 19:53 pm

Updated : 27 Jan 2020 10:14 am

 

Published : 26 Jan 2020 07:53 PM
Last Updated : 27 Jan 2020 10:14 AM

அடிப்படை வசதிகள் இல்லாவிட்டாலும் தினமும் தேசியக்கொடி ஏற்றி தேசியகீதம் பாடும் அதிசய கிராமம்

national-flag

சிறுதாமூர்

ஒருநாள்கூடத் தவறாமல் கடந்த இரண்டு ஆண்டுகளாக தினமும் ஊரின் மத்தியில் தேசியக்கொடி ஏற்றி தேசியகீதம் பாடி தேசத்தை வணங்கும் கிராமம் சிறுதாமூர்.

தமிழகத்தில் செங்கல்பட்டு மாவட்டத்தின் கடைக்கோடி கிராமம் சிறுதாமூர். செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் வட்டம் அச்சிறுபாக்கம் ஒன்றியத்தில் உள்ளது. சென்னையிலிருந்து 110 கிமீ தொலைவில் திண்டிவனத்திற்கு முன்பு உள்ள சிறுதாமூர் கிராமத்திற்கு சாலை வசதியோ, பேருந்து வசதியோ இல்லை. அவசர மருத்துவ உதவிக்கென அரசின் ஆரம்ப சுகாதார நிலையமோ கிடையாது.

கல்வி வசதி உள்ளதா என்றால் ஒன்று முதல் 5-ம் வகுப்புவரை ஒரே ஒரு ஆசிரியர்தான் பணியில் உள்ளார். பெண்களின் எழுத்தறிவு 26 சதவிகிதம். காரணம் நடுநிலைப்பள்ளிக்குச் செல்ல வெகுதூரம் நடக்க வேண்டும். சிறுதாமூர் கிராமப் பள்ளியில் கழிப்பறை வசதிகூட இல்லை என்பது வேதனையான செய்தி.

தாங்கள் பயிரிடும் காய்கறிகள், தானியங்கள், மல்லிகை மலர்களை சுமந்து சென்று வணிகம் செய்ய சென்னை கோயம்பேடுவரை செல்ல பேருந்து இல்லாமல் அவதியுறும் விவசாயிகள் கிடைத்த குறைந்த விலைக்கு இடைத்தரகர்களிடம் விளைபொருட்களை விற்கும் துயர சூழலும் தொடர்கிறது.

இந்தியா சுதந்திரம் பெற்று 73 ஆண்டுகள் ஆனபின்பும் எந்த அடிப்படை வசதிகளும் இல்லாத சிறுதாமூரில் கடந்த 2018 ஆகஸ்டு 15ஆம் தேதி சுதந்திரத் திருநாள் முதல் அனைத்து நாட்களிலும் தேசியக்கொடி ஏற்றி தேசியகீதம் பாடுகின்றனர் சிறுதாமூர் கிராம மக்கள். கிராமத்தின் மத்தியில் பெரியவர்களும் சிறுவர்களும் ஒன்றிணைந்து தினமும் தேசவணக்கம் செய்து வருகின்றனர்.

இங்கு இன்று குடியரசு தினவிழா உற்சாகமாக நடைபெற்றது. குடியரசு தினவிழாவில் பத்திரிக்கை தகவல் அலுவலக தென்மண்டலத் தலைமை இயக்குநர் மாரியப்பன் கலந்து கொண்டு தேசியக் கொடியை ஏற்றிவைத்தார் எல்லைப் பாதுகாப்புப் படை வீரர் வே.கிள்ளிவளவன் முன்னிலை வகித்தார்.

சிறுதாமூர் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களிலிருந்து வந்திருந்த ஏராளமானோர் கலந்துகொண்டு வணக்கம் செலுத்தினர்.சிறுதாமூர் பள்ளி மாணவ, மாணவியர்கள் நடத்திய கண்கவர் கலை நிகழ்ச்சிகள் மக்களை மகிழவைத்தன.

விழாவின் சிறப்பு நிகழ்ச்சியாக பள்ளிமாணவர்கள் அறுபது பேர் எல்லைப்பாதுகாப்புப் படையினரின் தியாகத்தைப் பாராட்டி அஞ்சல் அட்டையில் எழுதி நிகழ்ச்சிக்கு வந்திருந்த எல்லைப் பாதுகாப்புப் படைவீரர் கிள்ளிவளவனிடம் வழங்கினர். அந்த பாராட்டு அஞ்சல் அட்டைகள் எல்லையில் கடும் குளிரிலும், வெப்பத்திலும் தேசப்பாதுகாப்புச் சேவைபுரியும் வீரர்களின் பார்வைக்கு அனுப்பப்பட்டன.

நிகழ்ச்சியில் சிறப்புரையாற்றிய பத்திரிக்கை தகவல் அலுவலக தென்மண்டலத் தலைமை இயக்குநர் மாரியப்பன் மத்திய, மாநில அரசுகளின் திட்டங்களின் பயன்களை விளக்கினார். கடந்த இரண்டு ஆண்டுகளாகத் தினமும் தேசியக்கொடியேற்றி தேசிய கீதம் பாடும் சிறுதாமூர் கிராம மக்களைப் பாராட்டினார்.

சிறுதாமூர் இந்தியாவின் ஒரு முன்மாதிரி கிராமமாக விளங்குவதாகவும் இன்னும் இரண்டு ஆண்டுகளில் வளர்ச்சியடைந்த கிராமமாக உயரும் என்றும் கூறினார். மக்கள் ஒற்றுமையுடன் செயலாற்றினால் உலக சாதனைபுரிய இயலும் என்றும், சிறுதாமூர் கிராமத்தினரின் ஆர்வமும் மாணவர்களின் ஆற்றலும் வியக்கவைக்கின்றன என்றும் பாராட்டிப் பேசினார்.

எல்லை பாதுகாப்புப் படை வீரர் கிள்ளிவளவன் பேசுகையில் தேசப்பாதுகாப்பிற்கு தமது வாழ்க்கையை அர்ப்பணிக்கும் எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்களின் சேவையை விளக்கிப் பேசினார். எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்களின் பணியைப் பாராட்டி அவர்களுக்கு நாடு முழுவதுமிலிருந்து மாணவர்கள் எழுதிய 50000 அஞ்சல் அட்டைகள்வரை அனுப்பும் பணிபுரிந்த கிள்ளிவளவன் இக்கடிதங்கள் வீரர்களுக்கு உற்சாக மூட்டுவதாக மகிழ்ந்து கூறினார்.

சிறுதாமூர் ஸ்ரீ.ஸ்ரீனிவாசர் அறக்கட்டளை நிர்வாக இயக்குநர்விஜயகிருஷ்ணன் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்து வரவேற்புரையாற்றினார். கிராம முன்னாள் அலுவலர் துலுக்காணம், கதிர்வேலு, தலைமை ஆசிரியை பாக்கியலட்சுமி, ஆக்ஸிஸ் வங்கி மேலாளர் மோகன்ராஜ், ராஜேஷ்கண்ணா, கிராம அலுவலர் ஏழுமலை, சுவையரசி சாந்தி விஜயகிருஷ்ணன் ஆகியோர் நிகழ்ச்சியில் உரையாற்றினர்.

தேசிய நல்லாசிரியர் சௌமியநாராயணன் நன்றி கூறினார்.

கிராம மக்கள் ஒன்றிணைந்து ஊரின் நடுவில் உள்ள குளத்தினைத் தூர்வாரி ஆழப்படுத்தினர். உடனே பெய்த பெருமழையின் சேமிப்பால் நீர்வளம் உயர்ந்துள்ளது.

நூறாவது சுதந்திரத் தினத்திற்குள் தங்கள் கோரிக்கைகள் நிறைவேறுமா என்று தினமும் தேசியக் கொடிவணக்கம் செய்தபடி கேட்கின்றனர் சிறுதாமூர் கிராமப் பொதுமக்கள்.


National flagதேசியகீதம்தேசியக்கொடிசிறுதாமூர்

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like


More From This Category

More From this Author