

குரூப்-4 தேர்வு முறைகேடு தொடர்பாக மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) கடந்த ஆண்டு நடத்திய குரூப்-4 தேர்வில் முறைகேடு நடந்தது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்ட 99 தேர்வர்கள் நிரந்தர தகுதி நீக்கம் செய்யப்பட்டு, வாழ்நாள் முழுவதும் தேர்வு எழுத தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதில் தரகராக செயல்பட்ட சென்னை திருவல்லிக்கேணியை சேர்ந்த பள்ளிக்கல்வித் துறை அலுவலக உதவியாளர் ரமேஷ்(39), எரிசக்தி துறை அலுவலக உதவி யாளர் மாமல்லபுரம் திருக்குமரன் (35), தேர்வில் முறைகேடு செய்து வெற்றி பெற்ற திருவல்லிக்கேணி நிதீஷ்குமார் (21) ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
நெல்லை மாவட்டம் வள்ளியூர் அடுத்த விஜயாபதியை சேர்ந்த தரகர் ஐயப்பன், தேர்வர் முத்து ராமலிங்கம், விருத்தாசலம் மகாலட்சுமி ஆகிய 3 பேரிடம் சென்னை சிபிசிஐடி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடலூர், சிவகங்கை, தஞ்சை, நெல்லை, விழுப்புரம் ஆகிய 5 மாவட்டங்களிலும் சிபிசிஐடி போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். வழக்கில் தொடர்புடைய பண்ருட்டி அய்யனார் கோயில் தெருவை சேர்ந்த சிவராஜ், புதுப்பேட்டை பகுதியை சேர்ந்த சீனிவாசன் ஆகியோரை தேடி வருகின்றனர்.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்தவர்களுக்கும் இந்த முறைகேட்டில் தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது. இந்த மோசடி கும்பலுக்கு சென்னை அண்ணா நகரைச் சேர்ந்த ஜெயக்குமார் என்பவர் ஒருங்கிணைப்பாளர் போல இருந்துள்ளார். அவர்தான் குரூப்-4 தேர்வு எழுதியவர்களிடம் பணம் வாங்கிக் கொண்டு திட்டம் வகுத்து கொடுத்துள்ளார்.
இந்த நிலையில் குரூப்-4 மோசடி தொடர்பாக சென்னையில் கல்வித்துறை ஊழியர் ஒருவர் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். அவரது பெயர் ஓம்காந்தன். நுங்கம்பாக்கத்தில் உள்ள பள்ளி-கல்வி இயக்ககத்தில் பணிபுரியும் ஆவண கிளார்க்.
2016-ம் ஆண்டு முதல் விடைத்தாள்களை வேனில் கொண்டு செல்லும் பணியில் ஈடுபட்டு வந்தார். சாப்பிடுவதற்காக வேனை வழியில் நிறுத்தி ஓட்டலுக்கு செல்ல வேண்டும் என்று கூறி மற்ற ஊழியர்களையும் அழைத்து சென்றுள்ளார். அப்போது விடைத்தாள்களை மாற்றுவதற்கு உதவி செய்துள்ளார்.
இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டு எழும்பூரில் உள்ள சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்துக்கு கொண்டு செல்லப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.