

சென்னை பெருநகர காவல் கட்டுப்பாட்டு அறைக்கு கடந்த வெள்ளிக்கிழமை நள்ளிரவு தொலைபேசி அழைப்பு வந்தது.
அதில் பேசிய நபர், தான் கோவை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வந்ததாகவும், சரியாக சிகிச்சை தரவில்லை. அதனால் நான் மனித வெடிகுண்டாக மாறி தாக்குதல் நடத்தப் போகிறேன் எனக்கூறிவிட்டு இணைப்பைத் துண்டித்துள்ளார்.
சென்னை காவல்துறையினர் கோவை மாநகர காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். ரேஸ்கோர்ஸ் காவல்துறையினர் நேற்று விசாரித்தனர்.
அதில் மிரட்டல் விடுத்தவர் குனியமுத்தூரைச் சேர்ந்த பீர் (எ) பீர்முகமது (35) எனத் தெரிந்தது. மது போதையில் சிகிச்சைக்கு வந்த போது நடந்த வாக்குவாதத்தால் மிரட்டல் விடுத்தது தெரிந்தது.
இதையடுத்து அவரிடம் காவல்துறையினர் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.