

பத்மஸ்ரீ, பத்ம பூஷண் விருது பெற்ற தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் உள்ளிட்ட நாடு முழுவதும் பத்ம விருது பெறுபவர்கள் அனைவரும் பாராட்டுக்குரியவர்கள் என தமாகா தலைவர் ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் ‘‘தமிழ்நாட்டைச் சேர்ந்த கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன் அவர்கள் சமூக சேவகருக்கான பத்ம பூஷண் விருது பெறுவதும், டிவிஎஸ் மோட்டார் நிறுவன மேலாண் இயக்குநர் வேணு ஸ்ரீனிவாசன் அவர்கள் பத்ம பூஷண் விருது பெறுவதும், கர்நாடக இசைப் பாடகிகளான லலிதா மற்றும் சரோஜா அவர்கள் பத்மஸ்ரீ விருது பெறுவதும் மற்றும் சென்னை ஐஐடி யில் பேராசிரியராக பணியாற்றும் கேரள மாநிலத்தைச் சேர்ந்த பிரதீப் அவர்கள் பத்மஸ்ரீ விருது பெறுவதும் பாராட்டுக்குரியது, மகிழ்ச்சியளிக்கிறது. குறிப்பாக தமிழகத்தில் தென்காசி மாவட்டம், ஆய்க்குடி அமர்சேவா சங்க நிறுவன தலைவர் எஸ். ராமகிருஷ்ணன் அவர்கள் சிறு குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு உணவு, உடை, உறைவிடம், கல்வி, தொழிற்பயிற்சி, உடலியக்கப் பயிற்சிகள் போன்றவற்றை வழங்கியதால் பத்மஸ்ரீ விருது பெற்றது பெரிதும் பாராட்டுக்குரியது.
தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் சமூக சேவையிலும், மாற்றுத்திறனாளிகளுக்கு உதவுவதிலும், தொழில்துறையிலும், கர்நாடக இசையிலும் செய்திருக்கின்ற அர்ப்பணிப்பான, சிறப்பான பணிக்கு கிடைத்திருக்கின்ற பரிசாகத் தான் இந்த விருது கிடைக்கிறது. மேலும் மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர்கள் சுஷ்மா சுவராஜ், ஜார்ஜ் ஃபெர்னாண்டஸ், அருண் ஜெட்லி மற்றும் பிரபல குத்து சண்டை வீராங்கனை மேரிகோம் ஆகியோருக்கு பத்ம விபூஷண் விருதையும் மற்றும் பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்துவிற்கு பத்ம பூஷண் விருதையும் மத்திய அரசு வழங்குவது பாராட்டுக்குரியது.
பத்ம விருது பெறுபவர்கள் அனைவரும் அவரவர்கள் சார்ந்த துறையில் சிறந்து விளங்கியதால் விருது கிடைக்கப்பெறுகிறார்கள் என்பது நாட்டு மக்களுக்கும், நாட்டிற்கும் பெருமையாக இருக்கிறது. மத்திய அரசின் உயரிய விருதுகளான பத்மஸ்ரீ, பத்ம பூஷண், பத்ம விபூஷண் ஆகியவற்றை நாடு முழுவதும் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கியவர்களுக்கு வழங்கும் மத்திய அரசு தமிழகத்தில் உள்ள பல்வேறு துறையில் சிறந்து விளங்குகின்ற பலருக்கும் பத்ம விருது வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று த.மா.கா சார்பில் மத்திய அரசை கேட்டுக்கொள்கிறேன். பத்ம விருதுகள் பெறும் தமிழகம் உள்ளிட்ட நாடு முழுவதும் பல்வேறு துறையில் சாதித்தவர்கள் அனைவரையும் த.மா.கா சார்பில் பாராட்டுகிறேன், வாழ்த்துகிறேன். விருது பெறுபவர்களின் சிறப்பான பணிகள் மென்மேலும் தொடர, வளர, சிறக்க வாழ்த்துகிறேன்.’’ எனக் கூறியுள்ளளார்.