

தமிழகத்தில் கரோனா வைரஸ் பாதிப்பில்லை என மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தெரிவித்தார்.
கரூர் அரசு மருத்துவக் கல்லூரிமற்றும் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை நேற்று அவர்ஆய்வு செய்தார்.
பின்னர், செய்தியாளர்களிடம் அவர் கூறியது: கரூர் அரசு மருத்துவக் கல்லூரிக்கு இந்திய மருத்துவக் கவுன்சில் ஒப்புதல் அளித்ததைத் தொடர்ந்து நடப்பாண்டு 150 மாணவ, மாணவியருடன் கல்லூரி செயல்பட்டு வருகிறது. மருத்துவக் கல்லூரி வளாகத்தில் ரூ.115 கோடியில் 800 படுக்கைகளுடன் கட்டப்பட்டுள்ள மருத்துவமனையை விரைவில் முதல்வர் பழனிசாமி திறந்து வைப்பார்.
ஏற்கெனவே சி.டி. ஸ்கேன் கருவி வழங்கப்பட்டுள்ள நிலையில், ரூ.6 கோடியில் எம்.ஆர்.ஐ.ஸ்கேன் கருவி வழங்கப்பட உள்ளது. இதய அறுவை சிகிச்சை மேற்கொள்ள உதவும் ‘கேத் லேப்' வேண்டும் என்ற போக்குவரத்துத் துறை அமைச்சரின் கோரிக்கையை ஏற்று, விரைவில் ‘கேத்லேப்' வழங்கப்படும்.
தமிழகத்தில் ஒரே ஆண்டில் 9 அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கு அனுமதி பெறப்பட்டுள்ளது. மேலும், 4 மருத்துவக் கல்லூரிகளுக்கு அனுமதி கோரியுள்ளோம்.
தமிழகத்தில் கரோனா வைரஸ் பாதிப்பில்லை, இந்திய அளவிலும் பாதிப்பு இல்லை. சீனாவில் இருந்து சென்னைக்கு நாள்தோறும் ஒரு விமானம் வருகிறது. இதில், வரும் பயணிகள் அனைவருக்கும் உரிய மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது என்றார்.
ஆய்வின்போது அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், ஆட்சியர் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.