

ஓட்டுக்கு பணம் கொடுக்க வரும் அரசியல்வாதிகளை உங்கள் வீட்டுக்குள் நுழையவோ, பெற்றோரை சந்திக்கவோ அனுமதிக்காதீர்கள் என்று மாணவர்களுக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் அறிவுரை கூறியுள்ளார்.
தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அலுவலகம் சார்பில் தேசிய வாக்காளர் தின விழா சென்னை கலைவாணர் அரங்கில் நேற்று நடைபெற்றது. இதில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் கலந்துகொண்டு, தேர்தல் பணி யில் சிறந்து விளங்கியதற்காக மாவட்ட ஆட்சியர்கள் ஷில்பா பிரபாகர் (திருநெல்வேலி), சந்தீப் நந்தூரி (தூத்துக்குடி), வி.சாந்தா (பெரம்பலூர்) ஆகியோருக்கு ‘சிறந்த மாவட்ட தேர்தல் அதிகாரி’ விருதை வழங்கி கவுரவித்தார்.
கன்னியாகுமரி மாவட்டம்நாகர்கோவில் சார்ஆட்சியர்சரண்யா அரி, உத்தமபாளையத் தில் சார் ஆட்சியராக இருந்த வி.வைத்திநாதன், பெரியகுளம் வருவாய் கோட்டாட்சியராக இருந்த சி.ஜெயபிரீத்தா ஆகியோருக்கு ‘சிறந்த வாக்காளர் பதிவு அலுவலர்’ விருதை வழங்கினார்.
சென்னை மாநகராட்சி துணை ஆணையர் பி.குமாரவேல் பாண்டி யன், சிதம்பரம் சார் ஆட்சியர் விஷு மஹாஜன் மற்றும் கல்வித்துறை அதிகாரிகள், வாக்குச்சாவடி அலுவலர்கள், பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கும் விருதுகளை வழங்கினார். பின்னர் அவர் பேசியதாவது:
இந்திய தேர்தல் ஆணையம் கடந்த 1950 ஜனவரி 25-ம் தேதி உருவாக்கப்பட்டது. இதை நினைவுகூரும் விதமாக, கடந்த 2011 முதல் ஆண்டுதோறும் ஜனவரி 25-ம் தேதி தேசிய வாக்காளர் தினமாக கொண்டாடப்படுகிறது. 100 சதவீத அளவுக்கு வாக்காளர்களின் பெயரை வாக்காளர் பட்டியலில் சேர்ப்பது, இளம் வாக்காளர்கள் உட்பட அனைவரும் வாக்களிப் பதை உறுதிசெய்வதே இதன் நோக்கமாகும்.
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதை எளிமையாக்க தேர்தல்ஆணையம் பல்வேறு முயற்சிகளைமேற்கொண்டு வருகிறது. மக்கள்வசதிக்கேற்ப, வாக்களிக்கும் முறையும் எளிமையாக்கப்பட்டுள்ளது. வாக்காளர் தின விழாவில் மாணவர்கள் அதிகம் பங்கேற்றிருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது.
ஒவ்வொரு மாணவரும், வாக்குரிமை பெற்ற தங்கள் குடும்பத்தினர் அனைவரையும் வாக்களிக்க வைக்க வேண்டும். ஓட்டுக்கு பணம்கொடுக்க வரும் அரசியல்வாதிகளை உங்கள் வீட்டுக்குள் நுழையவோ, பெற்றோரை சந்திக்கவோ அனுமதிக்கக் கூடாது. ஒவ்வொருமாணவரும் இந்த இரண்டையும் செய்தாலே, தேர்தல்கள் வெளிப்படையாக நடைபெறுவதுடன், உண்மையான மக்களாட்சி உறுதிசெய்யப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
தமிழக தலைமைச் செயலாளர்கே.சண்முகம் பேசியபோது, ‘‘ஓட்டின் மதிப்பு என்ன என்பதை ஒவ்வொரு குடிமகனும் உணர வேண்டும். சாதி, சமய பாகுபாடின்றி மக்கள் வாக்களிக்க வேண்டும். இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்பம் மூலமாக மூளைச்சலவை செய்யப்படுவது அபாயகரமானது. மக்களின் தேவை என்னஎன்பது அவர்களை கேட்டாலே தெரிந்துவிடும். அதை விடுத்துஅரசியல் கட்சிகள், மக்களை கவர ஆலோசகரை நியமித்துக்கொள்ளும் நிலை காணப்படுகிறது. இவை எல்லாம் மாறவேண்டும். அதற்கு இளைய சமுதாயம் நல்ல தலைவர்களை தேர்ந்தெடுக்க வேண்டும்’’ என்றார்.
விழாவில், தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு, மாநில தேர்தல் ஆணையர் ஆர்.பழனிசாமி, சென்னை மாநகராட்சி ஆணையர் கோ.பிரகாஷ், ஆட்சியர் ஆர்.சீதாலட்சுமி, ஆளுநரின்செயலர் ஆனந்தராவ் பாட்டீல்ஆகியோர் பங்கேற்றனர்.