

குடியரசு தின விழாவை முன்னிட்டு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக அவர்கள் வெளி யிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது:
ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்: குடியரசு தினத்தை முன்னிட்டு தமிழக மக்கள் அனைவருக்கும் என்னுடைய நல்வாழ்த்து களைத் தெரிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். இந்திய அரசியல மைப்பு உருவாவதற்கு உன்னதப் பங்களிப்பு செய்த விடுதலைப் போராட்ட வீரர்கள், சட்டம் இயற்றிய மேதைகள் யாவரையும் நன்றியுடன் இத்தருணத்தில் நினைவுகூரக் கடமைப்பட்டுள்ளோம். நம்முடைய ஒருங்கிணைந்த ஆற்றல் அனைத் தையும் நமது நாட்டின் வளர்ச்சிக்காக முழுமையாக அர்ப்பணித்திட இந்நன்னாளில் உறுதி எடுத்துக் கொள்வோம். இந்திய அரசி யல் அமைப்பின் உன்னத குறிக்கோளைப் பாதுகாத்திடும் வகையில் நம் வாழ்வின் மூச்சு, செயல் ஆகியவற்றை அர்ப்பணித்து, தேசத்தின் பெருமையைக் கட்டிக்காப்பதில் தொடர்ந்துமுன்னேறிச் செல்ல முன்வருவோ மாக என வாழ்த்துகிறேன்.
தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன்: உலகஅரங்கில் இந்தியாவை ஜன நாயக நாடாக முன்னிறுத்திய இந்தியாவின் இரும்பு மனிதர் சர்தார் வல்லபாய் படேல், தேசத் தந்தை காந்தியடிகள், சட்ட மாமேதை அம்பேத்கர் போன்ற எண்ணற்ற அறிஞர்களின் அறிவாற்றலால் உருவான இந்திய குடியரசு சட்டம் பல நாடுகளுக்கு முன்மாதிரியாக இன்றளவும் போற்றப்பட்டு வருவதே ஒவ்வொரு இந்தியரின் பெருமை. இந்திய குடியாட்சி தத்துவத்தின் அருமை, பெருமைகளை உணர்ந்து அதற்கு கடமையாற்றுவதே நமக்கு பெருமை. நாட்டு மக்கள் அனைவருக்கும் குடியரசு தின வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி: இந்திய மக்களின் அறிவாற்றல், சட்ட நுணுக்கம், ஆழ்ந்த அனுபவம், அகன்ற தேசியப் பார்வை, தீர்க்க தரிசனம் ஆகிய அனைத்துக்கும் எடுத்துக்காட்டாக திகழ்வதுதான் நம் அரசமைப்புச் சட்டம். சமூக நீதியும், மதச்சார்பின்மையும் அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படையாக இருக்கிறது. 71-வது இந்திய குடியரசு தினத்தில், அரசமைப்புச் சட்டத்தின் முகப்புரையில் கூறப்பட்டுள்ள நோக்கங்களை பாதுகாக்கிற வகையில் அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க ஒவ்வொரு குடிமகனும் சூளுரை ஏற்க வேண்டும்.
அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்: உலகம் நம்மை மதித்து கொண்டாடுவதற்கு ஆணிவேராக இருப்பது நம்முடைய ஜனநாயக அமைப்புதான். மக்களாட்சி நடக்கிற பெரிய நாடு என்கிற பெருமிதத்தை நமக்கு தந்திருப்பதும் ஜனநாயகம்தான். எந்தப் பேதமும் பார்க்காமல் இந்நாட்டின் குடிமக்கள் அனைவரையும் சமமாக நடத்த வேண்டிய அவசியத்தை நம் அரசமைப்பு முறைதான் கட்டிக்காப்பாற்றி வருகிறது. ஜனநாயகத்தைக் கொண்டு தேசத்தை வளர்ச்சிப் பாதையில் முன்னெடுத்துச் செல்வதற்கான பணிகளில் ஈடுபடுவோம்.
தமாகா தலைவர் ஜி.கே.வாசன்: இந்தியாவின் 71-வது குடியரசு தினம் நாடு முழுவதும் கொண்டாடப்படுவது மகிழ்ச்சிய ளிக்கிறது. சாதி, மத, இன, மொழி ஆகிய வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டு அனைத்து சமு தாயத்தினரும் பாதிக்கப்படாமல் இருப்பதை மத்திய, மாநில அரசுகள் உறுதி செய்துகொள்ள வேண்டும். சுதந்திரத்துக்காக பாடுபட்ட தியாகிகள், வீரர்கள், புரட்சியாளர்கள் ஆகியோரை ஒவ்வொரு இந்தியரும் நினைத்துப் பார்த்து அவர்களுக்கு மரியாதை செய்வதோடு அவர்கள் பெற்றுத்தந்த சுதந்திரத்தை பாதுகாக்க வேண்டும்.
மமக தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா: பல்வேறு மதங்கள், சாதிகள், மொழிகள், கலாச்சாரங்கள் என வேறுபட்டு இருக்கும் மக்களை ஒற்றுமைப்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டது நமது அரசமைப்புச் சட்டம். விடுதலைப் போராட்ட வீரர்களின் கனவாகவும், தேசத்தந்தை காந்தியின் உணர்வாகவும் திகழும் நமது நாட்டின் அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படைகளைப் பாதுகாக்கவும் வேற்றுமையில் ஒற்றுமை காணும் அதன் அடிநாதத்தை நிலைநாட்டவும் உறுதி எடுத்துக் கொள்வோமாக.
இந்திய ஜனநாயக கட்சி நிறுவனத் தலைவர் பாரிவேந்தர்: 71-வது குடியரசுத் திருநாளை கொண்டாடும் இவ்வேளையில், அரசியல் சட்டத்தின் மாட்சிமைக்கும் - மக்களாட்சியின் கண்ணியத்துக்கும் எந்த வகையிலும் பாதிப்பு ஏற்படாத வகையில் பாதுகாக்க வேண்டியது நம் ஒவ்வொருவரின் கடமையாகும்.
சமக நிறுவனத் தலைவர் ரா.சரத்குமார்: தேசத்தின் இறையாண்மை, பொதுநல கோட்பாடு, மதச்சார்பற்ற ஜனநாயக குடியரசை பேணிக்காப்பது நமது கடமை. இந்திய ஜனநாயகத்தின் முக்கிய குறிக்கோளான அனைத்து குடிமக்களுக்குமான சமநீதி, சமத்துவம் மற்றும் சகோ தரத்துவ தத்துவத்தை என்றும் கடைபிடிப்போம்.
கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன், கோகுல மக்கள் கட்சியின் நிறுவன தலைவர் எம்.வி.சேகர் உட்பட பலரும் வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.