Published : 26 Jan 2020 07:37 AM
Last Updated : 26 Jan 2020 07:37 AM

முதல் மனைவி விவாகரத்து பெற்றுவிட்டால் இரண்டாவது மனைவி ஓய்வூதியம் பெறலாம்- உயர் நீதிமன்றம் உத்தரவு

முதல் மனைவி விவாகரத்து பெற்றுவிட்டாலோ அல்லது இறந்துவிட்டாலோ இரண்டாவது மனைவிசட்டப்படி ஓய்வூதியம் பெறலாம் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தருமபுரி மாவட்டம் மொரப்பூர் பஞ்சாயத்து யூனியனில் அரசு டாக்டராகப் பணியாற்றியவர் சின்னச்சாமி. இவருக்கும் பஞ்சோலை என்பவருக்கும் திருமணமாகி 3 பெண் குழந்தைகள் உள்ளனர்.

இந்நிலையில், சின்னச்சாமி சரோஜினிதேவி என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்தார். அவருக்கு 2 ஆண் குழந்தைகளும் ஒரு பெண் குழந்தையும் உள்ளனர்.

முதல் மனைவி உயிரிழப்பு

இந்நிலையில், கடந்த 1997-ல் பஞ்சோலை மரணமடைந்தார். டாக்டர் சின்னச்சாமி கடந்த 1999-ல்ஓய்வு பெற்றார். இதையடுத்து, தனது குடும்ப ஓய்வூதியத்துக்கான வாரிசாக 2-வது மனைவி சரோஜினிதேவியை நியமித்தார். 2009-ல் டாக்டர் சின்னச்சாமியும் இறந்தார். இந்நிலையில் தனக்கு குடும்ப ஓய்வூதியம் வழங்கக் கோரி சரோஜினிதேவி அதிகாரிகளிடம் மனு அளித்தார்.

உயர் நீதிமன்றத்தில் வழக்கு

ஆனால் அவர் 2வது மனைவி என்பதால் ஓய்வூதியம் வழங்க முடியாது என அதிகாரிகள் நிராகரித்தனர். அதையடுத்து சரோஜினிதேவி கணவரின் ஓய்வூதியத்தைதனக்கு வழங்க உத்தரவிடக்கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி என்.ஆனந்த் வெங்டேஷ் பிறப்பித்துள்ள உத்தரவில், ‘‘ஓய்வூதிய விதிகளில் 2-வது மனைவி சட்டப்பூர்வ வாரிசு இல்லை எனக் கூறப்பட்டுள்ளதால்தான் அவருக்கு ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கை நிராகரிக்கப்பட்டதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

மனுதாரர் சின்னச்சாமியின் 2-வது மனைவியாக அவர் இறக்கும்வரை வாழ்ந்துள்ளார். முதல் மனைவி இறந்த பிறகும் 12 ஆண்டுகள் வரை கணவருடன் வாழ்ந்துள்ளார்.

உச்ச நீதிமன்றம் உத்தரவு

முதல் மனைவியை விவாகரத்து செய்துவிட்டாலோ அல்லது முதல் மனைவி இறந்துவிட்டாலோ கணவருடன் நீண்டநாட்களாக வாழ்க்கை நடத்தும் 2-வது மனைவிஓய்வூதிய பலன்களை பெறலாம் என தனுலாஸ் என்பவரின் வழக்கில் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

முதல் மனைவி இறந்த பிறகுதான் 2-வது மனைவி ஓய்வூதியம் கோருகிறார். எனவே கணவரி்ன் குடும்ப ஓய்வூதியம் பெற இவருக்கு உரிமை உள்ளது.

ஆகையால், 12 வாரங்களுக்குள் இவருக்கு சேர வேண்டிய குடும்ப ஓய்வூதியத்தை வழங்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x