Published : 26 Jan 2020 07:13 AM
Last Updated : 26 Jan 2020 07:13 AM

71-வது குடியரசு தினம் இன்று கொண்டாட்டம்: சென்னையில் தேசிய கொடி ஏற்றுகிறார் ஆளுநர்; வீரதீர செயல்களுக்கான விருதுகளை முதல்வர் பழனிசாமி வழங்குகிறார்

71-வது குடியரசு தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி சென்னை காமராஜர் சாலையில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், தேசியக்கொடியை ஏற்றி வைத்து அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொள்கிறார்.

வீரதீர செயலுக்கான அண்ணா பதக்கம், காந்தியடிகள் காவலர் பதக்கங்கள் மற்றும் விருதுகளை முதல்வர் பழனிசாமி வழங்குகிறார்.

71-வது குடியரசு தினத்தை முன்னிட்டு, சென்னை, காம ராஜர் சாலையில் உள்ள காந்தி சிலை அருகில் இன்று காலை நடைபெறும் விழாவில், ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்துகிறார். முன்னதாக, காலை 7.55 மணிக்கு, அணிவகுப்பு புடைசூழ வரும் ஆளுநர் மற்றும் முதல்வருக்கு, ராணுவம், விமானம், கடற்படை, கடலோர காவல்படை, காவல்துறை அதிகாரிகளை தலைமைச் செயலர் கே.சண்முகம் அறிமுகம் செய்து வைக்கிறார்.

தொடர்ந்து, காலை 8 மணிக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்துகிறார். அதைத்தொடர்ந்து முப்படை வீரர்கள், கடலோர காவல்படை, முன்னாள் ராணுவத்தினர், துணை ராணுவப்படையினர், தமிழ்நாடு பேரிடர் நிவாரணப் படை, சிறப்பு காவல்படை, வனத் துறை, சிறைத் துறை தீயணைப்புத் துறை உள்ளிட்ட படைப்பிரிவுகளின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொள்கிறார்.

அதன் பிறகு, வீரதீர செயலுக்கான அண்ணா பதக்கம், மதுவிலக்கு அமலாக்கத்துக்காக வழங்கப்படும் காந்தியடிகள் காவலர் பதக்கம், திருத்திய நெல் சாகுபடிக்கான வேளாண்மைத் துறை சிறப்புவிருதுகளை முதல்வர் பழனிசாமி, வழங்குகிறார். இந்த ஆண்டு கூடுதலாக, தமிழகத்தில் சிறந்த காவல் நிலையங்களாகத் தேர்வுசெய்யப்பட்ட கோவை ரேஸ்கோர்ஸ், திண்டுக்கல் டவுன் வடக்குமற்றும் தருமபுரி டவுன் காவல் நிலையங்களுக்கு சிறப்பு கோப்பைகளை முதல்வர் வழங்குகிறார்.

இதையடுத்து, பள்ளி, கல்லூரி மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள், பல்வேறு மாநிலங்களின் பிரத்யேக நடனங்கள் நடைபெறும். அதைத் தொடர்ந்து, தமிழக அரசின் பல்வேறு துறைகளின் திட்டங்களை விளக்கும் அலங்கார ஊர்திகள் அணிவகுப்பு நடைபெறுகிறது.

இவ்விழாவில், தமிழக அமைச்சர்கள், உயர் நீதிமன்ற தலைமைநீதிபதி, பல்வேறு நாடுகளின் தூதரக அதிகாரிகள், எம்எல்ஏக்கள், எம்.பி.க்கள் மற்றும் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள், பொதுமக்கள் பங்கேற்கின்றனர்.

குடியரசு தினவிழா நிகழ்ச்சிக்காக காமராஜர் சாலையில் பட்டினப்பாக்கம் முதல் ரிசர்வ் வங்கி வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இதேபோல், தெற்கு ரயில்வே, துறைமுக பொறுப்புக் கழகம், எல்ஐசி, சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு அலுவலகங்களிலும், உயர் அதிகாரிகள் தேசியக் கொடியைஏற்றி வைத்து அணிவகுப்பு மரியாதையை ஏற்கின்றனர்.

கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் இன்று மாலை 5 மணிக்கு, முதல்வர், துணை முதல்வர், அமைச்சர்கள், அதிகாரிகள் மற்றும் முக்கியப் பிரமுகர்களுக்கு ஆளுநர் தேநீர் விருந்து அளிக்கிறார். காலை 8 மணிக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்துகிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x