மெரினா கடற்கரையில் வைக்கப்பட்டுள்ள சிவாஜி சிலைக்கு ஆபத்து நேரக்கூடாது: நடிகர் வாகை சந்திரசேகர் வேண்டுகோள்

மெரினா கடற்கரையில் வைக்கப்பட்டுள்ள சிவாஜி சிலைக்கு ஆபத்து நேரக்கூடாது: நடிகர் வாகை சந்திரசேகர் வேண்டுகோள்
Updated on
1 min read

சென்னை மெரினா கடற்கரையில் வைக்கப்பட்டுள்ள சிவாஜி சிலைக்கு எந்தவித ஆபத்தும் வந்துவிடக்கூடாது என்று, நடிகர் வாகை சந்திரசேகர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே செப்.5-ம் தேதி திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கும் ‘விடியல் மீட்புப் பேரணி பொதுக்கூட்டம்’ தொடர்பாக வடக்கு மாவட்ட திமுக அலுவலகத்தில் கலை, இலக்கிய பகுத்தறிவு பேரவையின் ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது.

பேரவையின் மாநிலச் செயலாளர் நடிகர் வாகை சந்திரசேகர் பங்கேற்றார்.

அப்போது செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது:

தமிழகத்துக்கு விடியலை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கில், திமுக தொடர்ச்சியாக நடத்திவரும் பேரணி, பொதுக்கூட்டங்களின் வரிசையில், செப்.5-ம் தேதி பல்லடம் அருகே நடைபெறும் பொதுக்கூட்டத்தை சிறப்பாக நடத்த தயாராகி வருகிறோம். வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக ஆட்சி அமையும்.

நடிகர் சிவாஜிக்கு மணிமண்டபம் கட்டுவதற்கு கருணாநிதி தடையாக இருந்தார் என சட்டப்பேரவையில் சரத்குமார் பேசியது கேலிக்குரிய செய்தி. இந்த கருத்துக்கு எதிராக போராட்டங்கள் வெடிக்கும்.

கருணாநிதி ஆட்சியில் தான், சென்னை மெரினா கடற்கரையில் சிவாஜிக்கு சிலை வைக்கப்பட்டது. ஜெயலலிதா ஆட்சிக்கு வந்து 4 ஆண்டுகளாகிறது. சிவாஜிக்கு மணிமண்டபம் கட்டுவது தொடர்பாக, ஆட்சிக்கு வந்ததுமே சொல்லி இருக்கலாமே.

எனவே, சென்னை மெரினா கடற்கரையில் வைக்கப்பட்டுள்ள சிவாஜி சிலைக்கு எந்தவித ஆபத்தும் வந்துவிடக்கூடாது. கடந்த 6 மாதமாக பூரண மதுவிலக்கு குறித்து, தமிழகத்தில் பல்வேறு அரசியல் தலைவர்கள் பேசி வருகிறார்கள். ஆனால், கருணாநிதி பேசிய பிறகுதான் மக்களிடம் எதிரொலித்தது. இவ்வாறு, அவர் பேசினார்.

நடிகர்கள் குமரிமுத்து, வாசு விக்ரம், திருப்பூர் வடக்கு மாவட்டச் செயலாளர் க.செல்வராஜ் உட்பட பலர் பங்கேற்றனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in