

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே வடக்கம்பட்டியில் முனியாண்டி கோயில் திருவிழாவையொட்டி இன்று அதிகாலையில் பிரியாணி திருவிழா நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே வடக்கம்பட்டியில் பிரசித்தி பெற்ற முனியாண்டி கோயில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் தை மாதம் வளர்பிறை வெள்ளிக்கிழமையில் அன்னதான திருவிழா நடைபெறும். இங்குள்ள முனியாண்டியை குலதெய்வமாக வழிபடும் இக்கிராமத்தினர் தமிழகத்தின் பல்வேறு ஊர்களிலும் முனியாண்டி விலாஸ் எனும் பெயரில் ஓட்டல் நடத்தி வருகின்றனர்.
அதேபோல், கேரளா, கர்நாடகா, புதுச்சேரியிலும் முனியாண்டி விலாஸ் எனும் பெயரில் ஓட்டல் நடத்தி வருகின்றனர். ஓட்டல் மூலம் கிடைக்கும் வருமானத்தில் ஒரு பகுதியை சேமித்து வருகின்றனர். சேமித்த தொகை மூலம் அன்னதான திருவிழாவை நடத்துகின்றனர்.
அதேபோல், இந்தாண்டு 85-ம் ஆண்டு பிரியாணி திருவிழா கடந்த ஒருவாரத்திற்கு முன்பு காப்புகட்டுதலுடன் பக்தர்கள் விரதம் மேற்கொண்டனர். நேற்று காலையில் வடக்கம்பட்டி, பொட்டல்பட்டி, அகத்தாபட்டி மற்றும் சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் பால் குடம் எடுத்து ஊர்வலமாக சென்றனர்.
அன்று மாலையில் நிலைமாலையுடன் பூத்தட்டு ஊர்வலம் நடைபெற்றது. ஊர்வலம் முடிந்து அடைந்த பின்னர், முனியாண்டி சுவாமிக்கு மாலைகள் அணிவிக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இரவு 12 மணியளவில் பூஜைகள் செய்து முதலில் சக்திகிடா பலி கொடுக்கப்பட்டது.
பின்னர் நேர்த்திக்கடனாக பக்தர்கள் வழங்கிய 150 கிடாக்கள், 300 கோழிகள் பலியிடப்பட்டன. அதன் மூலம் 1600 கிலோ அரிசியில் பிரியாணி தயாரிக்கப்பட்டது. பின்னர் முனியாண்டிக்கு படையலிட்டு அதிகாலையில் பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதமாக பிரியாணி வழங்கப்பட்டது.
இதுகுறித்து அக்கிராமத்தைச் சேர்ந்த பக்தர்கள் கூறுகையில், தமிழகத்தின் பல கிராமங்களில் முனியாண்டி கோயில்கள் உள்ளது. ஆனால் வடக்கம்பட்டி கோயில்தான் ஆதிமுனியாண்டி கோயில். இங்குள்ள கோயிலில் மட்டுமே பிரசாதமாக பிரியாணி வழங்கப்படுகிறது.
இக்கோயிலை குலதெய்வமாக வழிபடுவோர் தெய்வ வாக்காக ஓட்டல் தொழிலில் கலப்படமின்றி சுத்தமாக அசைவ உணவுகளை வழங்கி வருகின்றனர்.
அதேபோல், அன்னதான திருவிழாவில் அசைவ பிரியாணி முனியாண்டி சுவாமிக்கு படைத்து பக்தர்களுக்கு வழங்கி வருகின்றனர். முதலில் நாயுடு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் பிரியாணி திருவிழா நடத்துகின்றனர்.
அதற்கடுத்து ரெட்டியார் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் பிரியாணி திருவிழா நடத்துகின்றனர். இதில் திருவிழாக் கமிட்டி உறுப்பினர்களுக்கும் பிரசாதமாக பிரியாணி வழங்கப்படுகிறது, எனத் தெரிவித்தனர்.