

திருநெல்வேலி மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் தேசிய வாக்காளர் தினத்தினை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
பாளையங்கோட்டை வ.உ.சி.மைதானத்தில் திருநெல்வேலி மாநகராட்சி சார்பில் தேர்தல் தொடர்பான விழிப்புணர்வு வாகனத்தை மாவட்ட வருவாய் அலுவலர் முத்துராமலிங்கம் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.
இந்த வாகனம் மாநகராட்சியில் அனைத்துப் பகுதிகளுக்கும் சென்று வாக்களிப்பதன் அவசியத்தை குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
மேலும், பள்ளி, கல்லூரி மாணவ மாணவர்களின் மனிதச் சங்கிலி மற்றும் விழிப்புணர்வுப் பேரணி நடைபெற்றது. பேரணி நூற்றாண்டு மண்டபம், லூர்துநாதன் சிலை, தெற்கு பஜார் வழியாக தூய யோவான் கல்லூரியில் நிறைவடைந்தது.
திருநெல்வேலி புதிய பேருந்து நிலையத்தில் மகளிர் திட்டத்தின் மூலம் வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக பல வண்ணங்களில் விழிப்பணர்வு கோலப் போட்டி நடத்தப்பட்டது. மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் வாக்களிப்பதன் அவசியம் குறித்த கையெழுத்து இயக்கத்தை மாவட்ட வருவாய் அலுவலர் தொடங்கி வைத்தார்.
மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பார்வையற்றோர் பள்ளி மாணவிகள் வாக்களிப்பதன் அவசியம் குறித்த பாடல்களை பாடினார்கள். மேலும் ஒயிலாட்டம், கரகாட்டம், மவுன நாடகம் உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கான விழிப்புணர்வு பேச்சுப் போட்டி நடைபெற்றது.
10-வது தேசிய வாக்காளர் தினத்தில் 10-வது பிறந்த நாளை கொண்டாடிய 4 குழந்தைகளுடன் மாவட்ட வருவாய் அலுவலர் கேக் வெட்டி கொண்டாடினார்.
சிறப்பாக தேர்தல் பணிகளில் பணியாற்றிய அலுவலர்களுக்கும், தேசிய வாக்காளர் தினத்தினை முன்ன்னிட்டு நடைபெற்ற பேச்சு போட்டி,கட்டுரைப் போட்டி, ஒவியப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
இந்நிகழ்ச்சிகளில் சேரன்மகாதேவி சார் ஆட்சியர் பிரதீக் தயாள், மாவட்ட ஆட்சியர் நேர்முக உதவியாளர்கள் சுப்பையா, சாந்தி, வட்டாட்சியர்கள் திருப்பதி, தங்கராஜ், உட்பட அலுவலர்கள் கலந்து கொண்டனர்.