ஏழு சத்துணவு மையங்களைக் கவனிக்க ஒரே அமைப்பாளர்: திருப்புவனத்தில் மதிய உணவுத் திட்டம் செயல்படும் நிலை இதுவே!
சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் 7 சத்துணவு மையங்களை ஒரே ஒரு அமைப்பாளரே கவனித்து வருகிறார்.
சிவகங்கை மாவட்டத்தில் 1,292 சத்துணவு மையங்கள் உள்ளன. அமைப்பாளர், சமையலர், உதவியாளர் என 500 பணியாளர்களே உள்ளனர். இரண்டாயிரத்து மேற்பட்ட காலியிடங்கள் உள்ளன.
கடந்த 2017-ல் ஆண்டு ஜூனில் 150 அமைப்பாளர், 38 சமையலர், 456 உதவியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் பெறப்பட்டன. ஆறு மாதங்களுக்கு பின், 2018 பிப். 9 ல் நேர்முகத் தேர்வு நடந்தது. அந்தசமயத்தில் ஆளும்கட்சியினர் நெருக்கடியால் பணியிடங்களை நிரப்புவதில் சிக்கல் ஏற்பட்டது.
திருப்புவனம் ஒன்றியத்தில் 132 மையங்களில் 60 பேர் மட்டுமே பணிபுரிகின்றனர். இதனால் சலுப்பனோடை, பிச்தைபிள்ளையேந்தல், தூதை, டி.வேலாங்குளம், மழவராயனேந்தல், மாரநாடு, திருப்பாச்சேத்தி ஆகிய 7 மையங்களை ஒரே ஒரு அமைப்பாளரே கவனித்து வருகிறார்.
அதேபோல் பூவந்தி, ஏனாதி, மடப்புரம், மஞ்சள்குடி, கிளாதரி, சொக்கையன்பட்டி ஆகிய 6 மையங்களையும் ஒருவரே கவனிக்கிறார். ஆனைக்குளம், கொத்தங்குளம், மேலசொரிக்குளம், சொட்டத்தட்டி, அழகுடையான் ஆகிய இடங்களில் ஒரு பணியாளர் கூட இல்லாததால் மாற்றுப் பணியில் சமையலர்களை நியமித்துள்ளனர்.
இதேநிலை தான் மாவட்டம் முழுவதும் உள்ளது. இதனால் சத்துணவுப் பணி பாதிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்க நிர்வாகி ஒருவர் கூறுகையில், "ஒருவரே பல மையங்களை கவனித்தால் தினமும் சமையலுக்கு தேவையான கீரை வாங்கி கொடுப்பது எப்படி? ஊழியர்கள் இல்லாததால் முறையாக சத்துணவு வழங்க முடியவில்லை. பல மையங்களில் ஆளில்லாததால் வேறு மையங்களில் சமைத்து தலைசுமையாக எடுத்துச் செல்லப்படுகிறது, என்றார்.
இதுகுறித்து ஊரகவளர்ச்சித்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘பணி நியமனத்தை அரசு நிறுத்தி வைத்துள்ளது. மாணவர்கள் எண்ணிக்கை குறைவான மையங்கள் இணைக்கப்பட உள்ளன" என்றார்.
