Last Updated : 25 Jan, 2020 04:26 PM

 

Published : 25 Jan 2020 04:26 PM
Last Updated : 25 Jan 2020 04:26 PM

ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூடு அடுத்தக்கட்ட விசாரணைக்கு ரஜினியை அழைக்க வாய்ப்பு: ஆணையத் தலைவர் தகவல்

ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத்தில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பான அடுத்தக்கட்ட விசாரணைக்கு நடிகர் ரஜினியை அழைக்க வாய்ப்புள்ளதாக ஆணையத் தலைவர் தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடியில் நடைபெற்ற துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்து ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான ஒரு நபர் கமிஷன் விசாரணை நடத்தி வருகிறது.

ஒரு நபர் கமிஷனின் 18-வது கட்ட விசாரணை கடந்த 21ம் தேதி தொடங்கி இன்று (ஜன.25) மதியம் வரை நடைபெற்றது. விசாரணையின் இறுதியில் கமிஷனின் வழக்கறிஞர் வடிவேல் முருகன் செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்தார்.

அப்போழுது அவர் கூறுகையில், "18 -ம் கட்ட விசாரணை கடந்த 22-ம் தேதி தொடங்கி இன்றுவரை நடந்து முடிந்துள்ளது. இதில் 704 பேருக்கு அழைப்பாணை அனுப்பப்பட்டு 445 பேர் சாட்சிகளாக விசாரிக்கப்பட்டுள்ளனர்.

இதுவரை 630 ஆவணங்கள் குறியீடு செய்யப்பட்டுள்ளன. சராசரியாக ஒரு நாளைக்கு பத்து சாட்சிகள் வீதம் விசாரிக்கப்பட்டு உள்ளன. 18-வது கட்ட விசாரணையில் அதிகமாக ஒளிப்பதிவாளர்கள், தொலைக்காட்சி நிருபர்கள், செய்தியாளர்கள் ஆகியோர் விசாரிக்கப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து போராட்டம் நடைபெற்ற நேரத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள், ஆவணங்கள் உள்ளிட்டவை ஆணையத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.

அடுத்தகட்ட விசாரணை பிப்ரவரி மாதம் மூன்றாவது வாரத்தில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த விசாரணையில் வழக்கறிஞர் ஹென்றி டிபேன் தாக்கல் செய்துள்ள 125 பக்க பிரமாண பத்திரம் ஐந்து பகுதிகளாக உள்ளது. எனவே அவரை அடுத்த கட்ட விசாரணைக்கு வருமாறு அழைத்துள்ளோம். அவர் தாக்கல் செய்துள்ள ஆவணங்களை போலீஸ் விசாரணை நடத்திய பின்பே நடவடிக்கை எடுக்க முடியும் என்பதால் அதனுடைய நகல் காவல் துறைக்கும் அனுப்பப்பட்டுள்ளது. நடிகை மற்றும் செய்தி வாசிப்பாளர் பாத்திமா பாபுவும் அடுத்த கட்ட விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளார்.

துப்பாக்கிச் சூட்டில் காயம் அடைந்தவர்கள் பலியானவர்கள், குடும்பத்திற்கு நிவாரண நிதிகள் வழங்கப்பட வேண்டும் என அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டு மாவட்ட நிர்வாகத்தின் மூலம் அளிக்கப்பட்டுள்ளது. மேலும் ஒரு சில பேருக்கு வழங்கப்பட வேண்டிய நிவாரண நிதி பரிசீலனையில் உள்ளன. அவர்களுக்கு விரைவில் வழங்கப்படும் என எதிர்பார்க்கிறோம். துப்பாக்கிச்சூடு நடைபெற்றபோது எங்கெங்கு ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனங்கள் நிறுத்தப்பட்டிருந்தன என்பது குறித்து விவரம் கேட்கப்பட்டுள்ளது.

அது குறித்து விவரம் வந்தவுடன் அது தொடர்பான விசாரணைகள் நடைபெறும். துப்பாக்கிச் சூடு நடைபெறுவதற்கு முன் முந்தைய ஒரு வார காலத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பதிவான சிசிடிவி கண்காணிப்பு கேமரா காட்சிகள் ஆய்வு செய்ய உள்ளோம். அது கிடைக்கப் பெற்றவுடன் அது தொடர்பான விசாரணையும் தொடர்ந்து நடைபெறும்.

இதற்கு அடுத்த கட்ட விசாரணையில் போலீஸ் அதிகாரிகள், ஸ்டெர்லைட் குடியிருப்பு ஊழியர்கள், ஆலைத் தொழிலாளர்கள் ஆகியோரை விசாரிக்கவுள்ளோம். தடயவியல் வல்லுனர்கள், மருத்துவர்கள், தனியார் மருத்துவமனை மருத்துவர்கள் போன்றோரும் விசாரிக்கப்பட உள்ளனர்.

நடிகர் ரஜினிகாந்த், துப்பாக்கிச்சூடு தொடர்பாக பத்திரிகையாளர்களுக்கு அளித்த பேட்டியில் ஒரு சிலக் குறியீடுகளை பேசியுள்ளதாக இங்கு சாட்சிகளாக ஆஜரானவர்கள் வாக்குமூலம் அளித்துள்ளனர். அது தொடர்பான ஆவணங்களைத் தாக்கல் செய்துள்ளனர். எனவே தேவைப்படும் நிலையில் நடிகர் ரஜினிகாந்துக்கு சம்மன் அனுப்பி விசாரணை நடத்தப்படும். தேவைப்பட்டால் அடுத்தகட்ட விசாரணையின் போது கூட நடிகர் ரஜினிகாந்தை ஆஜராவதற்கு அழைக்கலாம்.

ஆணையத்தை பொறுத்தவரையில் ராகுல் காந்தியை அழைத்து விசாரிப்பதற்கு தேவையில்லை என நினைக்கிறோம். மேலும் துப்பாக்கிச் சூட்டில் பலியானவர்கள் காயமடைந்தவர்களுக்கு வழங்கப்பட்ட வேலைகள் கூட தகுதிக்கேற்ற வேலை இல்லை என வரப்பெற்ற புகார்களின் அடிப்படையில் அவர்களுக்கு வழங்கப்பட்ட பணியை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என மாவட்ட ஆட்சியருக்கு அறிக்கை அனுப்பி உள்ளோம் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x