Published : 25 Jan 2020 04:22 PM
Last Updated : 25 Jan 2020 04:22 PM

'ஒரே நாடு-ஒரே ரேஷன்': நயவஞ்சகத் திட்டத்தை திரும்பப் பெறுக; வேல்முருகன்

'ஒரே நாடு-ஒரே ரேஷன்' என்ற நயவஞ்சகமான திட்டத்தைத் திரும்ப பெற வேண்டும் என, தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக வேல்முருகன் இன்று (ஜன.25) வெளியிட்ட அறிக்கையில், "மாநில உரிமைகளுக்கு எதிரான ஒரு திட்டமே 'ஒரே நாடு-ஒரே ரேஷன்' என்பது. இதை வரும் ஜூன் மாதம் முதல் இந்தியா முழுவதும் அமல்படுத்துவோம் என்றது மத்திய அரசு.

ஆனால் அதற்குள்ளேயே, உடனடியாகவே, இப்போதே தமிழ்நாட்டில் நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் முதல் கட்டமாக அமல்படுத்தி, ரேஷன் அட்டைதாரர்கள் எந்த ரேஷன் கடையில் வேண்டுமானாலும் பொருட்கள் வாங்கிக்கொள்ளலாம் என்று அரசாணையே வெளியிட்டுவிட்டது அதிமுக அரசு.

தமிழ்நாட்டில் 35 ஆயிரத்து 233 ரேஷன் கடைகள் உள்ளன. 2 கோடியே 5 லட்சத்து 3 ஆயிரத்து 379 ஸ்மார்ட் ரேஷன் கார்டுகள் உள்ளன. இவற்றுடன் ஆதார் மற்றும் செல்போன் எண்கள் இணைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு ரேஷன் கார்டுக்கும் நிர்ணயிக்கப்பட்ட பொருட்களை ஸ்மார்ட் ரேஷன் கார்டு மூலமாகவோ, ஆதார் அட்டை மூலமாகவோ அல்லது அதில் பதிவு செய்யப்பட்ட செல்போன் எண் மூலமாகவோ வாங்கிக்கொள்ள முடியும். எனவே இதற்கேற்ப தற்போது ஆன்லைன் வினியோகத்துக்காக பயன்படுத்தப்படும் விற்பனை உபகரணங்களில் மென்பொருள் மாற்றம் செய்யப்பட இருக்கிறது.

ரேஷன் பொருட்களை பக்கத்து ரேஷன் கடைகளில் வாங்கமுடியாத அடிக்கடி இடம் மாறும் தொழிலாளர்களுக்கு இது மிகுந்த பயனுள்ள திட்டமாக இருக்கும் என்கின்றனர். இதனை பரீட்சார்த்த முறையில் அறிந்துகொள்வதற்காகத்தான் முதல் கட்டமாக தூத்துக்குடி மற்றும் நெல்லை மாவட்டங்களில் ஒரு வாரத்துக்கு மட்டும் இந்தத் திட்டத்தை அமல்படுத்தப்பட உள்ளது. இந்த மாவட்டங்களில் உள்ள எந்த ரேஷன் கடையிலும் பொருட்களை வாங்கிக் கொள்ளலாமாம். பின்னர் மற்ற மாவட்டங்களிலும் இத்திட்டம் அமல்படுத்தப்பட உள்ளது.

ரேஷன் கார்டுக்கு எந்த மாநிலத்தில் உள்ள ரேஷன் கடைகளில் வேண்டுமானாலும் பொருட்கள் வாங்கிக் கொள்ளலாம் என்கிற இத்திட்டம், ஒரு மாநிலத்தில் இருந்து வேறு மாநிலத்துக்குச் செல்லும் தொழிலாளர்களுக்காகவே கொண்டுவந்த திட்டமாகும். குறிப்பாக வட மாநிலங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் அலை அலையாக வந்து தமிழ்நாட்டில் குடியேறுவது நாள்தோறும் நடந்துவருகிறது. அப்படிக் குடியேறியவர்கள் தமிழ்நாட்டில் இப்பொழுதே ஒரு கோடிக்கும் மேல் இருக்கிறார்கள். இது தமிழக மக்கள்தொகையில் 7:1 என்ற விகிதமாகும்.

இதனால் நாளை தமிழ்நாட்டின் சமூக, கலாச்சார, பண்பாட்டு, அரசியல், பொருளியல் கணக்கே மாறிப்போகும் ஆபத்தே ஏற்பட்டிருக்கிறது. எனவே வெளிமாநிலத்தவர் வருகையைக் கட்டுப்படுத்தும் மற்றும் ஒழுங்குபடுத்தும் சட்டத்தை தமிழக அரசு கொண்டுவர வேண்டும் என்று தொடக்கத்திலிருந்தே குரலெழுப்பி வருகிறது தமிழக வாழ்வுரிமைக் கட்சி. ஆனால் தமிழக அரசு இதனைக் கண்டுகொள்ளாமல் இருந்ததன் காரணம் இப்போதுதான் புரிகிறது.

அண்மைக்காலமாக அதிமுக பாஜகவுடன் மோதல்போக்கைக் கொண்டுள்ளதாக ஒரு நாடகம் திட்டமிட்டு நடத்தப்படுகிறது. அது ஏன் என்பதற்காக விடை, 5, 8 ஆம் வகுப்புகளுக்குப் பொதுத் தேர்வு மற்றும் இந்த 'ஒரே நாடு - ஒரே ரேஷன் கார்டு' திட்டம் முதல் கட்டமாக நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் அமல் போன்ற எஜமானர் விசுவாச நடவடிக்கைகளில் அடங்கியிருக்கிறது.

அமைச்சரவை மொத்தமும் ஊழலிலேயே திளைப்பதைக் கண்டுகொள்ளாமல் இருக்க இந்த எஜமான விசுவாச நடவடிக்கைகள்தான் உதவுகின்றன என்றால் நிச்சயம் அது பொய்யில்லை. அதனால்தான் மாநில உரிமைகளுக்கே எதிரான மக்கள் விரோத இந்த நடவடிக்கைகள் கூசாமல் தொடர்கின்றது தமிழக அரசு.

இந்த நயவஞ்சகத் திட்டத்தைத் திரும்பப்பெற வேண்டும் என எச்சரிக்கிறது தமிழக வாழ்வுரிமைக் கட்சி" என வேல்முருகன் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x