'சிறையிலிருந்து சசிகலா சீக்கிரம் வெளிவர வேண்டும் என்பதே எனது பிரார்த்தனை': அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேட்டி

'சிறையிலிருந்து சசிகலா சீக்கிரம் வெளிவர வேண்டும் என்பதே எனது பிரார்த்தனை': அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேட்டி
Updated on
1 min read

'சிறையில் இருக்கும் சசிகலா விரைவில் வெளியே வர வேண்டும் என்பதே எனது பிரார்த்தனை' என்று பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி கூறியுள்ளார்.

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் இன்று (சனிக்கிழமை) காலை சாமி தரிசனம் செய்த அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி, ஸ்ரீஸ்ரீஸ்ரீ சடகோப ராமானுஜ ஜீயரை தனி அறையில் 15 நிமிடம் சந்தித்துப் பேசினார்.

பின்னர் செய்தியாளர்களுக்கு அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அளித்த பேட்டியில், "ஜீயருடனான சந்திப்பின்போது தற்போதுள்ள சூழலில் சமூகத்தில் நடக்கக் கூடியப் பிரச்சனைகள் குறித்துப் பேசினோம்.

ஆண்டாள் கோயில் இடங்களைத் தனிநபர்கள் சிலர் ஆக்கிரமித்துள்ளதாக ஜீயர் முறையிட்டார். அதன் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்தேன்.

பெரியார் குறித்து ரஜினி தவறாக ஏதும் பேசவில்லை. என்னைப் பொறுத்தவரை பெரியார் குறித்து ரஜினி பேசியதால் யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லை. நடந்த நிகழ்வை மட்டுமே ரஜினி கூறினார்.

பிடித்தவர்கள் அவரது கருத்தை ஏற்றுக்கொள்ளட்டும், பிடிக்காதவர்கள் அமைதியாக இருந்துகொள்ளட்டும். ரஜினியை எதிர்த்து ஆர்ப்பாட்டம் செய்வது தேவையற்றது.

சசிகலா விரைவில் சிறையிலிருந்து வெளிவர வேண்டும் என்பதே எனது பிரார்த்தனை. அவர் வெளியே வரவேண்டும், இந்த நாட்டில் மகிழ்ச்சியாக வாழ வேண்டும். அவர் சிறையில் இருப்பது வேதனை அளிக்கிறது. சசிகலா சிறையில் இருந்து வெளியே வந்தால் எனக்கு மகிழ்ச்சி" என்றார்.

அமைச்சர் பேட்டியளித்தபோது அவருடன் முன்னாள் அமைச்சர் இன்பத்தமிழன், எம்.எல்.ஏ.க்கள் சந்திரபிரபா, ராஜவர்மன் மற்றும் அதிமுக கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in