

சிலை திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்ட திரைப் பட இயக்குநர் வி.சேகரை 3 நாட்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க சென்னை பெருநகர குற்றவியல் நீதிமன்றம் நேற்று அனுமதி வழங்கியது.
சிலை திருட்டு வழக்கில் பிரபல திரைப்பட இயக்குநர் வி.சேகர் சென்னையில் கடந்த 12-ம் தேதி கைது செய்யப்பட்டார். சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸார் அன்று இரவே அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். சிலை திருட்டு கும்பலுடன் உள்ள தொடர்பு குறித்து மேலும் விவரங்களைப் பெற, அவரை 7 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க போலீஸார் முடிவு செய்தனர். இதற்கு அனுமதி கோரி சென்னை பெருநகர 2-வது குற்றவியல் நீதிமன்றத்தில் மனு செய்தனர்.
இதை மாஜிஸ்திரேட் சத்யா பரிசீலித்து, வி.சேகரை 3 நாட்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க நேற்று அனுமதி வழங்கினார். விசாரணை முடிந்து நீதிமன்றத்தில் அவரை வெள்ளிக்கிழமை ஆஜர்படுத்தவும் உத்தரவிட்டார். இதையடுத்து சேகரை அழைத்துச் சென்ற சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸார் அவரை ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.