Published : 25 Jan 2020 02:32 PM
Last Updated : 25 Jan 2020 02:32 PM

தென்பெண்ணை சிக்கலைத் தீர்க்க தேவை நடுவர் மன்றம் தான்; பேச்சுக்குழு அல்ல: ராமதாஸ்

தென்பெண்ணை சிக்கலைத் தீர்க்க தேவை நடுவர் மன்றம் தான், பேச்சுக்குழு அல்ல என, பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக ராமதாஸ் இன்று (ஜன.25) வெளியிட்ட அறிக்கையில், "தென்பெண்ணையாற்றின் குறுக்கே கர்நாடகம் அணை கட்டுவது தொடர்பான சிக்கலை தீர்ப்பதற்காக பேச்சுவார்த்தைக் குழுவை மத்திய அரசு அமைத்திருக்கிறது. இந்தச் சிக்கலுக்கு தீர்வு காண நடுவர் மன்றம் அமைக்கப்பட வேண்டும் என்று தமிழக அரசு கோரிக்கை விடுத்திருந்த நிலையில், அதற்கு மாறாக பேச்சுக் குழுவை மத்திய அரசு அமைத்திருப்பது தமிழகத்திற்கு இழைக்கப்படும் துரோகமாகும்.

கர்நாடகத்தின் பங்கரபேட்டை ஒன்றியம் யார்கோல் கிராமத்தில் தென்பெண்ணையாற்றின் துணை ஆறான மார்க்கண்டேய நதியின் குறுக்கே கர்நாடக அரசு புதிய அணை கட்டுவதை நிறுத்த ஆணையிட வேண்டும்; அதேபோல் பெண்ணையாற்றின் குறுக்கே தமிழகத்தின் ஒப்புதல் இன்றி எந்த பாசனத் திட்டத்தையும் செயல்படுத்தக் கூடாது என்று கர்நாடக அரசுக்கு ஆணையிடக் கோரி தமிழக அரசு தொடர்ந்த வழக்கை உச்ச நீதிமன்றம் கடந்த நவம்பர் 14-ம் தேதி தள்ளுபடி செய்து விட்டது. இந்த கோரிக்கைகள் குறித்து தீர்மானிக்க நடுவர் மன்றம் அமைக்கும்படி மத்திய அரசை அணுகும்படியும் ஆணையிட்டது. அதன்படி நடுவர் மன்றம் அமைக்கும்படி நீர்வள அமைச்சகத்திடம் தமிழக அரசு விண்ணப்பித்துள்ளது.

நடுவர் மன்றம் அமைக்கக்கோரி கடந்த ஆண்டு நவம்பர் 30-ம் தேதியே தமிழக அரசு விண்ணப்பம் செய்து விட்ட நிலையில், இன்று வரை நடுவர் மன்றம் அமைக்கப்படவில்லை. மாறாக, தென்பெண்ணை ஆற்றின் மார்க்கண்டேய ஆற்றின் குறுக்கே கர்நாடகம் தடுப்பணை அமைக்கும் விவகாரம் தொடர்பாக பேச்சு நடத்துவதற்காக குழு ஒன்றை மத்திய நீர்வள அமைச்சகம் அமைத்துள்ளது. கடந்த 20-ம் தேதியே அக்குழு அமைக்கப்பட்டுவிட்ட போதிலும், அதில் இடம்பெற்றுள்ள உறுப்பினர்களின் விவரம், அதன் அதிகார வரம்பு உள்ளிட்ட விவரங்கள் எதையும் மத்திய நீர்வள அமைச்சகம் வெளியிடவில்லை.

தென்பெண்ணையாற்றுச் சிக்கலைத் தீர்ப்பதற்காக நடுவர் மன்றத்தை அமைக்குமாறு தமிழக அரசு கோரிக்கை விடுத்துள்ள நிலையில், அதற்கு மாறாக பேச்சுவார்த்தைக் குழுவை மத்திய அரசு அமைத்து இருப்பது கர்நாடகத்திற்கு ஆதரவான நடவடிக்கை ஆகும். இதை ஏற்றுக்கொள்ள முடியாது. நதிநிர் பிரச்சினைகளைத் தீர்க்க நடுவர் மன்றம் அமைக்க வேண்டும் என்று கோருவதன் நோக்கமே, அந்த அமைப்புக்கு குடிமையியல் நீதிமன்றத்திற்கான அதிகாரம் உண்டு என்பதால் தான்.

மார்க்கண்டேய ஆற்றின் குறுக்கே 50 மீட்டர் உயரத்திற்கு அணை அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டு, இதுவரை 70% பணிகள் நிறைவடைந்து விட்டன. இத்தகைய சூழலில் நடுவர் மன்றம் அமைக்கப்பட்டால், இரு தரப்பு கருத்துகளையும் விசாரித்து, இறுதித் தீர்ப்பு வழங்கப்படும் வரை அணையின் கட்டுமானப் பணிகளை நிறுத்தி வைக்கும்படி இடைக்கால ஆணை பிறப்பிக்க அந்த அமைப்புக்கு அதிகாரம் உண்டு. அவ்வாறு பிறப்பிக்கப்படும் ஆணையை கர்நாடகம் மீற முடியாது. அது தான் தமிழகத்திற்கு நீதி வழங்குவதாக அமையும்.

மாறாக, பேச்சுவார்த்தைக் குழுவுக்கு அத்தகைய அதிகாரம் எதுவும் கிடையாது. அதைப் பயன்படுத்திக் கொண்டு ஒருபுறம் தமிழகத்துடன் பேச்சு நடத்திக் கொண்டே, மறுபுறம் கர்நாடகம் அணையை கட்டி முடித்து விடும் வாய்ப்பு உள்ளது. அதன்பின்னர் இச்சிக்கல் குறித்து பேச்சு நடத்துவதாலோ, நடுவர் மன்றம் அமைப்பதாலோ எந்த பயனும் ஏற்படாது. கடந்த காலங்களில் காவிரி உள்ளிட்ட ஆற்றுநீர் பிரச்சினைகள் தொடர்பாக கர்நாடகத்துடன் தமிழக அரசு நடத்திய பேச்சுக்களால் எந்த பயனும் ஏற்பட்டதில்லை. இப்போது மத்திய அரசு அமைக்கும் பேச்சுவார்த்தைக் குழுவாலும் தமிழகத்திற்கு எந்த பயனும் ஏற்படாது.

1892-ம் ஆண்டில் சென்னை - மைசூரு மாகாணங்களுக்கிடையே செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின் கீழ் இந்த ஆறும் வருகிறது. அந்த ஒப்பந்தத்தின்படி முதல்மடை பாசனப் பகுதிகளில் எதை செய்வதானாலும், கடைமடை பாசன மாநிலமான தமிழகத்தின் ஒப்புதலை கர்நாடகம் பெற வேண்டும். ஆனால், தமிழகத்தின் அனுமதியைப் பெறாமல் கர்நாடகம் அணை கட்டி வரும் சூழலில் அதற்கு தீர்வு காண்பதற்கு சரியான அமைப்பு நடுவர் மன்றம் தானே தவிர, இருதரப்பு பேச்சுவார்த்தைக் குழு அல்ல.

தென்பெண்ணையாறு கர்நாடகத்தில் தோன்றினாலும் அம்மாநிலத்தில் மிகக் குறைந்த தொலைவுக்கு மட்டுமே ஓடுகிறது. தமிழகத்தில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தொடங்கி பல்வேறு மாவட்டங்கள் வழியாக ஓடி கடலூர் மாவட்டத்தில் வங்கக்கடலில் கலக்கிறது. அந்த ஆற்றில் அணை கட்டப்பட்டால் தமிழ்நாட்டில் கிருஷ்ணகிரி, தருமபுரி, திருண்ணாமலை, விழுப்புரம், கடலூர் ஆகிய 5 மாவட்டங்களில் பல லட்சம் ஏக்கர் நிலங்கள் பாதிக்கப்படும். இதனால் லட்சக்கணக்கானோர் வாழ்வாதாரத்தை இழப்பர். இதை உணர்ந்து தென்பெண்ணையாறு சிக்கலைத் தீர்க்க நடுவர் மன்றம் அமைக்க மத்திய அரசு ஆணையிட வேண்டும்" என ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x