Published : 25 Jan 2020 12:13 PM
Last Updated : 25 Jan 2020 12:13 PM

அமைச்சர் கருப்பணன் கடிதத்தால்தான் ஹைட்ரோகார்பன் செயல்படுத்தப்பட உள்ளது: வேல்முருகன் குற்றச்சாட்டு

அமைச்சர் கருப்பணன் எழுதிய கடிதத்தின் அடிப்படையிலேயே தமிழ்நாட்டைப் பாலைவனமாக்கப் போகும் ஹைட்ரோகார்பன் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளதாக, தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் குற்றம் சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக வேல்முருகன் இன்று (ஜன.25) வெளியிட்ட அறிக்கையில், "ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு மக்களிடம் கருத்துக் கேட்க வேண்டும். தமிழக அரசின் சுற்றுச்சூழல் துறை அனுமதியைப் பெற வேண்டும் என்றெல்லாம் சட்டவிதிகள் குறுக்கே நின்றன.

இந்த நிலையில்தான் 2018 ஆம் ஆண்டில் தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கருப்பணன் மத்திய அரசுக்கு ஒரு கடிதம் எழுதுகிறார். அதில், "ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு தமிழ்நாட்டில் கடும் எதிர்ப்பும் அதேசமயம் பெரும் அச்சமும் நிலவுகிறது. அதனால் மக்களிடம் கருத்துக் கேட்க வேண்டாம்; சுற்றுச்சூழல் அனுமதியும் கோர வேண்டாம்" என்று குறிப்பிட்டிருந்தார்.

கருப்பணனின் கடிதத்தை அப்படியே பின்பற்றி, திட்டத்தை நேரடியாகவே நடைமுறைக்குக் கொண்டுவர வகை தேடிக்கொண்டது மத்திய அரசு. அதாவது மக்களிடம் கருத்துக் கேட்பது மற்றும் சுற்றுச்சூழல் அனுமதியைப் பெறுவது ஆகிய சட்டவிதிகளை ரத்து செய்துவிட்டது. உடனடியாக வேதாந்தா நிறுவனத்திற்கு ஹைட்ரோகார்பன் எடுக்க 50 கிணறுகளுக்கு அனுமதியும் அளித்துவிட்டது.

இப்படிச் செய்தது மக்களுக்கு எதிரானதாகும். மாநில உரிமைக்கும் எதிரானதாகும். "இதை நாங்கள் எதிர்க்கிறோம், அதனால் அனுமதிக்க மாட்டோம்" என்று மத்திய அரசுக்குத் தெரிவித்திருக்க வேண்டும் அதிமுக அரசு!

ஆனால், எதிர்ப்போ வரவேற்போ எதுவும் தெரிவிக்காமல் மவுனமாக இருந்துவிட்டது அதிமுக அரசு. மவுனம் சம்மதத்திற்கு அறிகுறி என எடுத்துக்கொண்டுதான், மக்களிடம் கருத்துக் கேட்பது மற்றும் சுற்றுச்சூழல் அனுமதியைப் பெறுவது ஆகிய சட்டவிதிகளை ரத்து செய்துவிட்டது மத்திய அரசு. அப்படிச் செய்துவிட்டு, நேரடியாகவே ஹைட்ரோகார்பன் திட்டத்தைத் திணிக்கவும் செய்துவிட்டது.

அதிமுக அரசு அமைதி காத்ததே ஹைட்ரோகார்பன் திட்டத்தை தமிழ்நாட்டில் அனுமதித்ததாகிவிட்டது. இத்தனைக்கும் ஹைட்ரோகார்பன் திட்டத்தை தமிழ்நாட்டில் அனுமதிக்கவே மாட்டோம் என்று சட்டப்பேரவையிலேயே சத்தியம் செய்யாத குறையாக வாக்குறுதி அளித்திருந்தது அதிமுக அரசு. அது வெறும் கபட நாடகம்தான் என்பது இப்போது நிரூபணமாகியிருக்கிறது.

காவிரி டெல்டா உள்ளிட்ட தமிழக வேளாண் பகுதிகளை மட்டுமல்ல; தமிழகத்தையே சீரழித்துப் பாலைவனமாக்கிவிடும் ஆபத்தான இந்த ஹைட்ரோகார்பன் திட்டத்தை மத்திய அரசு அரசு உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும்; அதிமுக அரசும், இதனை உடனடியாகத் திரும்பப் பெற மத்திய அரசை வலியுறுத்த வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறது தமிழக வாழ்வுரிமைக் கட்சி!

கருப்பணன் எழுதிய கடிதத்தின் அடிப்படையிலேயே தமிழ்நாட்டைப் பாலைவனமாக்கப்போகும் ஹைட்ரோகார்பன் திட்டம்! அதிமுக மற்றும் மத்திய அரசுகளின் நயவஞ்சகக் கூட்டால் விளைந்த இந்த திட்டத்தை விரட்டியடிப்போம்" என வேல்முருகன் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x