

அதிமுக முன்னாள் எம்.பி. கே.சி.பழனிச்சாமி அதிமுக பெயரில் போலி இணையதளம் தயாரித்ததாக எழுந்த புகாரில் இன்று போலீஸாரால் கைது செய்யப்பட்டார்.
கடந்த 1989-ல் நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்ட கே.சி.பழனிச்சாமி எம்.பி.யாகத் தேர்வானார். இதைத் தொடர்ந்து காங்கேயம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராகவும் பதவி வகித்துள்ளார். இந்த நிலையில் இவர் கட்சி விரோத நடவடிக்கைக்காக அதிமுகவில் இருந்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு நீக்கப்பட்டார்.
இந்நிலையில், கே.சி.பழனிச்சாமி மீது சூலூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. தான் இன்னும் அதிமுகவில் இருப்பதாகக் கூறி, கே.சி.பழனிச்சாமி தொடர்ந்து கட்சியை விமர்சித்து வந்ததாகவும், கட்சியின் பெயரில் போலி இணையதளம் நடத்தி வந்ததாகவும், சூலூர் காவல் நிலையத்தில் முத்துகவுண்டன் புதூர் ஊராட்சி மன்றத் தலைவர் கந்தவேல் புகார் அளித்தார்.
இதன் பேரில், கோவை லாலிரோட்டில் உள்ள கே.சி.பழனிச்சாமியின் வீட்டுக்கு இன்று (ஜன.25) அதிகாலை சென்று கைது செய்த போலீஸார், சூலூர் காவல் நிலையத்தில் வைத்து அவரை விசாரணை செய்து வருகின்றனர்.
இந்திய தண்டனை சட்டப்பிரிவின் கீழ் ஏமாற்றுதல், நம்பியவர்களை ஏமாற்றுதல், ஆள்மாறாட்டம் செய்து ஏமாற்றுதல், தவறான ஆவணத்தை உருவாக்குதல், பொய் ஆவணம் உருவாக்கி ஏமாற்றுதல், ஏமாற்றத் திட்டமிட்டு ஆவணம் உருவாக்குதல், சொத்துக் குறீயிட்டைத் தவறாகப் பயன்படுத்துதல், தவறான சொத்துக் குறியீட்டைப் பயன்படுத்துதல், சொத்து அடையாளத்தை உருவாக்கும் கருவியை வைத்திருந்தல் உள்ளிட்ட 11 பிரிவுகளின் கீழும், தகவல் தொழில்நுட்பச் சட்டப் பிரிவுகளின் கீழும், போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
இதைத் தொடர்ந்து சூலூர் காவல் நிலையத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும் பத்திரிகையாளர்கள் காவல் நிலைய வளாகத்திற்குள் வர அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.