Last Updated : 25 Jan, 2020 08:34 AM

 

Published : 25 Jan 2020 08:34 AM
Last Updated : 25 Jan 2020 08:34 AM

வில்சன் கொலைக்கு பயன்படுத்திய கத்தி மீட்பு; திருவனந்தபுரம் பேருந்து நிலையம் அருகே போலீஸார் பறிமுதல்

எஸ்.ஐ. வில்சன் கொலைக்கு பயன்படுத்திய கத்தியை நேற்று திருவனந்தபுரம் தம்பானூர் பேருந்து நிலையம் அருகிலிருந்து போலீஸார் கைப்பற்றினர். அப்துல் ஷமீம், தவுபீக் உள்ளிட்டோருக்கு தலைவனாக செயல்பட்டவர் குறித்தும் முக்கிய தடயம் சிக்கியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை சோதனைச்சாவடியில் கடந்த 8-ம் தேதி சிறப்புஎஸ்.ஐ. வில்சன் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தில், குமரி மாவட்டத்தைச் சேர்ந்த அப்துல் ஷமீம்,தவுபீக் ஆகியோர் கைதாகிஉள்ளனர்.

துப்பாக்கி மீட்பு

அவர்களிடம் நடத்திய விசாரணையில் நேற்று முன்தினம் கேரளமாநிலம் எர்ணாகுளம் பேருந்து நிலையம் அருகே உள்ள சாக்கடையில் இருந்து, கொலைக்கு பயன்படுத்தப்பட்ட துப்பாக்கியை போலீஸார் கைப்பற்றினர். வில்சனை கொலை செய்ய பயன்படுத்திய கத்தி குறித்து விசாரணை மேற்கொண்டதில் திருவனந்தபுரம் தம்பானூர் பேருந்து நிலையம் அருகே அதனை வீசி எறிந்ததாக அவர்கள் கூறியுள்ளனர்.

டிஎஸ்பி கணேசன் தலைமையிலான தனிப்படையினர், நேற்றுகாலை தவுபீக், அப்துல் ஷமீம்இருவரையும் அழைத்துக்கொண்டு, அங்கு சென்றனர்.

புல்வெளியில் வீசிய கத்தி

அப்போது பேருந்து நிலையம் அருகே உள்ள புல்வெளி பகுதியில் கத்தியை வீசி எறிந்த இடத்தை அவர்கள் அடையாளம் காண்பித்துள்ளனர். அப்பகுதியில் ஒரு மணி நேரத்துக்கு மேல் போலீஸார் தேடி, ரத்தக்கறை படிந்த கத்தியை கைப்பற்றினர். மேலும், கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சியின் அடிப்படையில் கொலை நடப்பதற்கு முன்பு நெய்யாற்றின்கரை பகுதியில் கைப்பையுடன் இருவரும் சுற்றியது குறித்தும், அதில் இருந்த பொருட்கள் குறித்தும் போலீஸார் விசாரித்தனர்.

அப்போது அவர்கள் அளித்ததகவலின் பேரில், நெய்யாற்றின்கரை பள்ளிவாசல் பகுதியில் உள்ள கடை அருகே இருந்த நபரிடம் இருந்து கைப்பையை போலீஸார் கைப்பற்றினர். விசாரணையில் கைப்பையை வாங்கி வைத்திருந்த நபர் இதுபற்றி எந்த விவரமும் அறியாத தொழிலாளி என்பதும் இலவசமாக தனக்கு கொடுத்ததால் அதை வாங்கி வைத்திருந்ததும் தெரியவந்தது.

முக்கிய தடயம்

கைப்பையில் இருந்து சிலகாகித ஆவணங்களை போலீஸார் கைப்பற்றினர். அதில், ‘‘இந்தியாவை இஸ்லாமிய நாடாக மாற்றும் வரை ஓயமாட்டோம். காஜா பாய் என்ற காஜாமொய்தீன்தான் எங்கள் தலைவர்’’ என எழுதப்பட்டிருந்தது. இவ்விவகாரத்தில் ஏற்கெனவே டெல்லியில் கைது செய்யப்பட்ட காஜாமொய்தீனைத்தான் அவர்கள் குறிப்பிட்டிருக்கலாம் என போலீஸார் கருதுகின்றனர்.

தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் மேலும் பல திடுக்கிடும் தகவல்களை இருவரும் தெரிவித்துள்ளனர்.

வில்சனை கொலை செய்வதற்காக கடந்த 8-ம் தேதி மாலையில் நெய்யாற்றின்கரை பள்ளிவாசல் பகுதியில் அப்துல் ஷமீம், தவுபீக் இருவரும் துப்பாக்கியுடன் இருந்துள்ளனர். அப்பகுதியில் உள்ள கடையில் இருந்து கத்தியை வாங்கியுள்ளனர். பின்னர், ஆட்டோவில் ஏறி களியக்காவிளை வந்து வில்சனை கொலை செய்துள்ளனர்.

மும்பை தப்பிச் சென்றனர்

அங்கிருந்து இஞ்சிவிளை வரை நடந்தே சென்று அங்கிருந்து பேருந்து மூலம் திருவனந்தபுரம் தம்பானூர் பேருந்து நிலையம் வந்துள்ளனர். அருகிலுள்ள புல்வெளியில் கத்தியை வீசி எறிந்துவிட்டு துப்பாக்கியுடன் மீண்டும் பேருந்தில் ஏறி எர்ணாகுளம் சென்றுள்ளனர். அங்கு 2 நாட்கள் சுற்றித் திரிந்த நிலையில், 10-ம் தேதி வில்சன் கொலை வழக்கில் தேடப்படும் குற்றவாளிகளாக இருவரையும் அறிவித்து படத்துடன் பத்திரிகைகளில் வந்த செய்தியை பார்த்துள்ளனர்.

இனிமேல் அங்கிருந்தால் போலீஸார் கைது செய்து விடுவார்கள் என அஞ்சி, பேருந்து நிலையம் அருகே கழிவுநீர் ஓடையில் துப்பாக்கியை வீசி எறிந்துவிட்டு, அங்கிருந்து ரயில் மூலம் மும்பை சென்றுள்ளனர்.

2 நாட்களுக்கு மேல் அங்குதிரிந்த நிலையில், வடமாநிலங்களிலும் போலீஸார் தீவிரமாக தேடி வருவதை அறிந்து, அங்கிருந்து பெங்களூருக்கு தப்பி வந்துள்ளனர். இந்நிலையில் கர்நாடக மாநிலம் உடுப்பியில் தாங்கள் போலீஸாரிடம் சிக்கிக் கொண்டதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x