எஸ்.ஐ. வில்சனை சுட்டுக் கொல்ல குற்றவாளிகள் பயன்படுத்திய துப்பாக்கி சென்னையில் வாங்கப்பட்டதாக தகவல்- என்ஐஏ, கர்நாடக, தமிழக போலீஸார் தீவிர விசாரணை

எஸ்.ஐ. வில்சனை சுட்டுக் கொல்ல குற்றவாளிகள் பயன்படுத்திய துப்பாக்கி சென்னையில் வாங்கப்பட்டதாக தகவல்- என்ஐஏ, கர்நாடக, தமிழக போலீஸார் தீவிர விசாரணை
Updated on
1 min read

களியக்காவிளையில் எஸ்.ஐ. வில்சனை சுட்டுக் கொல்ல பயன்படுத்தப்பட்ட கைத்துப்பாக்கி,சென்னையில் வாங்கப்பட்டதாகதகவல் வெளியாகி உள்ளது.இதுதொடர்பாக சென்னையில் என்ஐஏ, தமிழக, கர்நாடக போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை சோதனைச் சாவடியில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்த சிறப்பு எஸ்.ஐ. வில்சன் கடந்த 8-ம் தேதி கத்தியால் குத்தியும், துப்பாக்கியால் சுட்டும் கொல்லப்பட்டார். அவரை கொன்றுவிட்டு கேரளா வழியாக கர்நாடக மாநிலத்துக்கு தப்பிய அப்துல் சமீம், தவுபீக் ஆகிய 2 பேரும் உடுப்பியில் கைது செய்யப்பட்டனர். இவர்கள் இருவரும் கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என்பது விசார ணையில் தெரியவந்தது.

வில்சனை சுட்டுக் கொல்ல பயன்படுத்திய கைத்துப்பாக்கியை கேரள மாநிலம் எர்ணாகுளம் பேருந்து நிலையம் அருகே உள்ள கழிவுநீர் ஓடையில் வீசியதாக அவர்கள் தெரிவித்தனர். இதை யடுத்து, அந்த ஓடையில் இருந்து கைத்துப்பாக்கி மீட்கப்பட்டது.

இந்நிலையில், இதுதொடர்பாக தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ள கர்நாடக கியூ பிரிவு போலீஸார் நேற்று முன்தினம் சென்னை வந்தனர். சென்னை பெரியமேடு மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் தீவிர விசாரணையில் ஈடுபட்டனர்.

சென்னையைச் சேர்ந்த ஒருவர்தான் அந்த துப்பாக்கியை குற்றவாளிகளுக்கு வழங்கியுள்ளார் என்று தகவல் வெளியானதால், இதில் தொடர்பு உடையவர்களை கைது செய்யவே கர்நாடக போலீஸார் சென்னை வந்ததாக கூறப்படுகிறது. அவர்களுடன் இணைந்து தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) அதிகாரிகள், சென்னை போலீஸாரும் விசாரணை நடத்தினர். குறிப்பாக தங்கும் விடுதிகள், வாடகை வீடுகளிலும் சோதனை நடத்தப்பட்டது. சிசிடிவிகேமராக்களில் பதிவான காட்சிகளையும் போலீஸார் ஆய்வு செய்துள்ளனர்.

இதுகுறித்து சென்னை போலீஸாரிடம் கேட்டபோது, ‘‘எஸ்.ஐ.வில்சனை கொல்ல பயன்படுத்தப்பட்ட துப்பாக்கி சென்னையில் கைமாறியதாக தகவல் வெளியாகி உள்ளது. அதன் உண்மைத் தன்மையை அறிய நாங்களும் தீவிரமாக விசாரித்து வருகிறோம்’’ என்றனர்.

கண்காணிப்பு தீவிரம்

இந்து அமைப்பு தலைவர்கள், போலீஸ் எஸ்.ஐ. ஆகியோரை திட்டமிட்டு கொலை செய்த குற்றவாளிகள், குடியரசு தினத்தை சீர்குலைக்கவும் வாய்ப்பு உள்ளதாக உளவு பிரிவு போலீஸார் எச்சரித்துள்ளனர். இதையடுத்து, தமிழகம் முழுவதும் பாதுகாப்பு, கண்காணிப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in