நதிநீர் பிரச்சினை தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த கேரள முதல்வர் விரைவில் சென்னை வருகை- தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் தகவல்

பினராயி விஜயன்
பினராயி விஜயன்
Updated on
1 min read

நதிநீர் பிரச்சினை தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த கேரள முதல்வர் பினராயி விஜயன் விரைவில் சென்னை வரவுள்ளதாக தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் தெரிவித்தார்.

தமிழகம் - கேரள மாநிலங்களி டையே முல்லை பெரியாறு, ஆழியாறு - பரம்பிக்குளம் உள்ளிட்ட நதிநீர் பிரச்சினைகளை தீர்க்கும்வகையில், கடந்த ஆண்டு முதல்வர் பழனிசாமி கேரளா சென்று,அம்மாநில முதல்வர் பினராயிவிஜயனுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இதையடுத்து, இருமாநில நதிநீர் பிரச்சினைகளைப் பற்றி விவாதிக்க அதிகாரிகள் குழு அமைக்கப்பட்டது. அந்தகுழுவினரின் முதல் கூட்டம் சென்னையில் நடந்து முடிந்துள்ளது.

இந்நிலையில் கேரள சுற்றுலாத் துறை அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன் நேற்று சென்னை வந்தார். தமிழக சுற்றுலாத் துறை அமைச்சர் கே.சி.கருப்பணன், தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் கே.பாண்டியராஜன் ஆகியோரை தலைமைச் செயலகத்தில் சந்தித்து பேசினார். பின்னர் மூவரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது அமைச்சர் கே.சி.கருப்பணன் கூறியதாவது:

கன்னியாகுமரி மாவட்டத்தில் ரூ.15 கோடி மதிப்பில் விருந்தினர் மாளிகை கட்ட கேரள அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கு ஒரு மாதத்துக்குள் அனுமதியளிப்பது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது. இரு மாநில நதிநீர் பிரச்சினைகள் தொடர்பாக ஏற்கெனவே பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. அடுத்ததாக கேரள முதல்வர் பினராயி விஜயன் விரைவில் சென்னை வந்து முதல்வர் பழனிசாமியை சந்திக்க உள்ளார்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

அமைச்சர் கே.பாண்டியராஜன் கூறும்போது, “பிரசித்திபெற்ற கண்ணகி கோயிலுக்கு செல்வதற்கான நல்ல வழிப்பாதை அமைத்து, அதை சுற்றுலாத்தலமாக மாற்ற கேரள அரசிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தொல்லியல் சார்ந்து மிகப்பெரிய அகழாய்வு முசிறிப்பட்டினத்தில் நடைபெற்று வருகிறது. கீழடி மற்றும் முசிறி தொடர்பான ஒப்பீடு நடத்தி இணைத்து செயல்படுத்த முடிவெடுக்கப்பட்டுள்ளது’’ என்றார்.

கேரள அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன் கூறும்போது, “கண்ணகி கோயில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்று. அந்த கோயிலுக்கு பொதுமக்கள் செல்லும் பாதையில் சில பிரச்சினைகள் உள்ளன. விரைவில் இந்த பாதைதொடர்பாக இரு மாநில அமைச்சர்களின் ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டு, நல்ல முடிவு எட்டப்படும்’’ என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in