Last Updated : 25 Jan, 2020 08:24 AM

 

Published : 25 Jan 2020 08:24 AM
Last Updated : 25 Jan 2020 08:24 AM

பள்ளிக்கல்வித் துறைக்கு எதிரான 12 ஆயிரம் நிலுவை வழக்குகளை 6 மாதங்களில் முடிக்க அரசு தீவிரம்

சென்னை

ஆசிரியர்கள் பதவி உயர்வு உட்பட பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வழக்குகளை விரைவாக முடிக்க பள்ளிக்கல்வித் துறை திட்டமிட்டுள்ளது.

தமிழக பள்ளிக்கல்வித் துறையின்கீழ் 37,358 அரசுப் பள்ளிகளின் இயங்குகின்றன. இவற்றில் 2.25 லட்சம் ஆசிரியர்கள் பணிபுரிகின்றனர். அரசுப் பள்ளிகள் தரத்தை மேம்படுத்த பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. எனினும், அரசின் நலத்திட்டங்கள் மற்றும் புதுமையான முயற்சிகளின் பலன்கள் மாணவர்களை முழுமையாக சென்றடையாமல் இருப்பதாக புகார்கள் எழுந்தன.

இதனால் அரசுப் பள்ளிதொடங்கி பள்ளிக் கல்வி இயக்குநரகம் வரை அனைத்து செயல்பாடுகளையும் கண்காணிக்க புதிதாக ஆணையர் பதவி உருவாக்கப்பட்டு, அந்த இடத்துக்கு ஐஏஎஸ் அதிகாரி சிஜி தாமஸ் வைத்யன் நியமிக்கப்பட்டார்.

அதைத் தொடர்ந்து அரசுப் பள்ளிகளின் செயல்பாடுகள் குறித்து அறிவதற்காக ஆணையர் சிஜி தாமஸ் வைத்யன் கடந்த டிசம்பரில் மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஆய்வு நடத்தினார். அந்த ஆய்வில் பள்ளிக்கல்வித் துறைக்கு எதிராக சுமார் 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வழக்குகள் நீதிமன்றங்களில் நிலுவையில் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து வழக்குகளை விரைவாக முடிக்க கல்வித் துறை திட்டமிட்டுள்ளது.

மாவட்ட நீதிமன்றங்கள்

இதுகுறித்து பள்ளிக்கல்வி அதிகாரிகள் கூறியதாவது:

ஆசிரியர்களுக்கான ஊதிய முரண்பாடு, கல்வித்தகுதி, ஓய்வூதியம், பணி நியமனம், அரசின்அறிவிப்புகளை எதிர்த்து சங்கங்களின் முறையீடுகள் உட்பட பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வழக்குகள் நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ளன.

இதுதவிர மாவட்ட நீதிமன்றம், தொழிலாளர் நடுவர் நீதிமன்றங்களிலும் நூற்றுக்கணக்கான வழக்குகள் பதிவாகியுள்ளன.

இவற்றில் 70 சதவீத புகார்கள் ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடு, பணியிட மாற்றம் மற்றும் பதவி உயர்வு தொடர்பானதாக உள்ளன. மேலும், 500-க்கும் மேற்பட்ட வழக்குகள் 20 ஆண்டுகளுக்கு மேலாக நிலுவையில் உள்ளன. இந்த வழக்குகள் நீதிமன்றங்களில் விசாரணைக்கு வரும்போது துறை சார்ந்த அதிகாரிகள் நேரில் ஆஜராகி விளக்கம் தர வேண்டியுள்ளது. இதனால் நிர்வாகப் பணிகள் முடங்குவதுடன், அரசின் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதிலும் பல்வேறு சிக்கல்கள் ஏற்படுகின்றன.

ஆணையர் தலைமையில் குழு

இதற்கு தீர்வுகாணும் நோக்கத்துடன் நிலுவை வழக்குகளை வரும் ஜூன் மாதத்துக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இதற்காக பள்ளிக்கல்வி துறை ஆணையர் சிஜி தாமஸ் வைத்யன் தலைமையில் உயர்நிலைக் குழு அமைக்கப்பட்டுள்ளது. அதில் உயர் நீதிமன்ற அரசு வழக்கறிஞர், பள்ளிக்கல்வித் துறை சட்ட அதிகாரி மற்றும் ஆலோசகர் ஆகியோர் உறுப்பினர்களாக உள்ளனர்.

மேலும், மாவட்ட வாரியாக வழக்கு விவரங்களும் சேகரிக்கப்பட்டு வருகின்றன. ஆசிரியர்கள் மற்றும் சங்கங்களின் நிர்வாகிகளிடம் பேச்சுவார்த்தை மூலம் வழக்குகளை முடிவுக்கு கொண்டுவரவும் முயற்சி மேற்கொள்ளப்பட உள்ளது. இதற்கான பணிகள் இந்தமாத இறுதியில் தொடங்கப்படும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x