

தேசிய மக்கள்தொகை பதிவேடு(என்பிஆர்), தேசிய குடிமக்கள் பதிவேடு (என்ஆர்சி) தொடர்பான கேள்விகளுக்கு பதில் அளிக்கவேண்டாம் என்று தொழிலாளர்களுக்கு சிஐடியு அகில இந்தியத்தலைவர் ஹேமலதா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சிஐடியு 16-வது அகில இந்தியமாநாடு சென்னை ராயப்பேட்டைையில் உள்ள ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நேற்று முன்தினம் தொடங்கியது. வரும் 27-ம் தேதிவரை நடைபெறவுள்ள மாநாட்டின் 2-வது நாளான நேற்று செய்தியாளர்களிடம் ஹேமலதா கூறியதாவது:
சிஐடியு அகில இந்திய மாநாட்டில் மூன்று முக்கியமான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. குடியுரிமை சட்டத்தை திரும்பப்பெற வேண்டும் என்பது முக்கியமான தீர்மானம். மக்கள்தொகை கணக்கெடுப்பின்போது என்பிஆர், என்சிஆர் ஆகியவற்றை செயல்படுத்த மத்திய பாஜக அரசு திட்டமிட்டுள்ளது. இதனை முறியடிக்க மக்கள்தொகை கணக்கெடுப்பு தொடர்பான விவரங்களை மட்டுமே அளிக்க வேண்டும். என்பிஆர், என்சிஆர் தொடர்பான எந்தக் கேள்விகளுக்கும் தொழிலாளர்கள் பதில் அளிக்கவேண்டாம்.
ஆண்களுக்கு சமமாக பெண்களுக்கும் ஊதியம் வழங்க வேண்டும் என்று சட்டம் இருந்தாலும் அது நடைமுறையில் இல்லை.இரவு நேரப் பணி கட்டாயம், பணியிடத்தில் பாலியல் தொல்லை என்று பெண்கள் பெரும் பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. எனவே, பெண்களுக்கு ஆதரவான சட்டங்களை கறாராக அமல்படுத்த வலியுறுத்தி வரும் மார்ச் 6-ம் தேதி சிறை நிரப்பும் போராட்டம் நடக்கிறது.
உலகம் முழுவதும் ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடியால் புதியமுதலீடுகள் வரவில்லை. வேலையின்மை, வேலையிழப்பு ஏற்பட்டுள்ளதால் இந்த நெருக்கடியை தீர்க்க வழி காணாமல் மத்திய பாஜக அரசு மக்கள் மதரீதியாகபிரிக்கும் தவறான பாதையில் செல்கிறது. இது கடும் கண்டனத்துக்குரியது. வகுப்புவாத அரசியலை முறியடித்து ஜனநாயகம், மதச்சார்பின்மையை பாதுகாப்போம் என்ற முழக்கத்துடன் மகாத்மா காந்தி சுட்டுக் கொல்லப்பட்ட ஜனவரி 30-ம் தேதி, நாடு முழுவதும் பிரசாரம், ஆர்ப்பாட்டம், மனித சங்கிலி, உறுதி மொழி ஏற்பு என பல வடிவங்களில் தொழிலாளர்கள் போராட்டம் நடத்தவுள்ளனர்.
இவ்வாறு ஹேமலதா கூறினார்
இந்தப் பேட்டியின் போது சிஐடியு மாநில தலைவர் அ. சவுந்தரராசன் உள்ளிட்ட நிர்வாகிகள் உடன் இருந்தனர்.