

நாட்டிலேயே பெண் குழந்தைகள் பிறப்பு விகிதம் தமிழகத்தில்தான் அதிகம் என்று சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தெரிவித்தார்.
தேசிய பெண் குழந்தைகள்தினம் நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி, தமிழகஅரசு சார்பில் பெண் குழந்தைகள் பாதுகாப்பை வலியுறுத்தி சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. பேரணியை சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தொடங்கி வைத்தார்.
விழிப்புணர்வு வாசகங்களுடன் கூடிய பதாகைகளை ஏந்தியவாறு சுகாதாரப் பணியாளர்கள், கல்லூரி மாணவிகள் உட்பட 200-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
அப்போது, செய்தியாளர்களிடம் அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியதாவது:
நாட்டிலேயே பெண் குழந்தைகள் பிறப்பு விகிதம் தமிழகத்தில்தான் அதிகமாக உள்ளது. 1,000 ஆண் குழந்தைகளுக்கு, 914 பெண் குழந்தைகள் என்பதுதேசிய அளவிலான சராசரியாக இருக்கும் நிலையில், தமிழகத்தில் 1,000 ஆண் குழந்தைகளுக்கு 943 பெண் குழந்தைகள் என்ற விகிதம் உள்ளது.
பெண் குழந்தைகளின் பிறப்பு விகிதத்தை மேலும் அதிகரிக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஆண் குழந்தைதான் வேண்டும் என்ற நிலை மாறி, வீட்டுக்கு பெண் குழந்தைகள் இருந்தால் போதும் என்று அனைவரும் நினைக்கத் தொடங்கிவிட்டனர்.
கருவில் உள்ள குழந்தை ஆணா, பெண்ணா என்று சொல்லக் கூடாது என்கிற சட்டம், தமிழகத்தில் கடுமையாக பின்பற்றப்படுகிறது. விதிகளை மீறி செயல்படுவோர் மீது தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.