Published : 25 Jan 2020 07:38 AM
Last Updated : 25 Jan 2020 07:38 AM

நெல்லையப்பர் கோயிலில் லட்சதீபத் திருவிழா

தை அமாவாசையை முன்னிட்டு, திருநெல்வேலி நெல்லையப்பர், காந்தியம்மன் கோயிலில் 6 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் லட்சதீபத் திருவிழா நேற்று நடைபெற்றது. சுவாமி சந்நிதி வாயிலில் 12 அடி உயரத்துக்கு கூம்பு வடிவில் ஏற்றப்பட்ட விளக்குகள் வரிசையைக் காண திரண்டிருந்த பக்தர்கள். படம்: மு.லெட்சுமி அருண்.

திருநெல்வேலி

திருநெல்வேலி நெல்லையப்பர் காந்திமதி அம்மன் கோயிலில் புதுமையான தீபங்களுடன் லட்சதீபத் திருவிழா நேற்று நடைபெற்றது.

இக்கோயிலில் 1864-ம் ஆண்டு தொடங்கி தை அமாவாசை தினத்தன்று ஆண்டுதோறும் பத்ர தீபத் திருவிழாவும், 6 ஆண்டுகளுக்கு ஒருமுறை லட்ச தீபத் திருவிழாவும் நடைபெற்று வருகின்றன. இவ்வாண்டு லட்ச தீபத்திருவிழா கடந்த 13-ம் தேதி தொடங்கியது. விழா நாட்களில் தினமும் மூல மகாலிங்கம், வேணுவனநாதர், காந்திமதி அம்மன் சந்நிதிகளில் ஹோமம், ஸ்நபன அபிஷேகம், ஆராதனை உள்ளிட்டவை நடத்தப்பட்டன.

கடந்த 17-ம் தேதி தொடங்கி பொற்றாமரை விநாயகர் சந்நிதியில் அதிருத்ர பெருவேள்வி ஒரு வாரம் நடைபெற்றது. கடந்த 19-ம் தேதி மாலை 6 மணிக்கு கோயிலின் நாதமணி மண்டபத்தில் தங்கவிளக்கு மற்றும் இரண்டு வெள்ளி விளக்குகள் ஏற்றப்பட்டன.

தை அமாவாசையையொட்டி லட்சதீபத் திருவிழா நேற்று நடைபெற்றது. காலை 8 மணிக்கு 11 பால்குடங்கள் எடுத்து செல்லுதல், 11 மணிக்கு அம்மன் சந்நிதி ஊஞ்சல் மண்டபத்தில் எழுந்தருளிய பஞ்சமூர்த்திகளின் உற்சவர்களுக்கு 308 சங்காபிஷேகம், சிறப்பு அபிஷேகங்கள், அலங்காரம், தீபாராதனை ஆகியவை நடைபெற்றன. பகலில் கோயில் பிரகாரத்தில் 5 ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மாலை 6 மணியளவில் நாதமணி மண்டபத்தில் வைக்கப்பட்டிருந்த தங்க விளக்கிலிருந்து தீபம் எடுத்துவரப்பட்டு, திருக்கோயிலின் பிரதான கொடிமரம் அருகில் வைக்கப்பட்டிருக்கும் நந்தி தீபம் ஏற்றப்பட்டது.

18 அடி சுழலும் விளக்கு வரிசை

பின்னர், கோயில் பிரகாரங்கள் முழுவதும் தீபங்கள் ஏற்றப்பட்டன.

இம்முறை 12 அடி உயரம் கொண்ட சுழலக்கூடிய கூம்பு வடிவ விளக்கு வரிசை, 18 அடி உயரம் கொண்ட மூன்று கோள வடிவ சுழலும் விளக்கு வரிசை மற்றும் 8 அடி உயரம் கொண்ட ராட்டின வடிவில் அமைந்த சுழலும் விளக்கு வரிசை ஆகியவை ஏற்றப்பட்டன. திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x