Last Updated : 24 Jan, 2020 10:13 PM

 

Published : 24 Jan 2020 10:13 PM
Last Updated : 24 Jan 2020 10:13 PM

விளைநிலங்களில் எரிவாயு குழாய் புதைப்பதை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

தஞ்சாவூர்

பூதலூர் அருகே விளைநிலங்களில் எரிவாயு குழாய் பதிப்பதைக் கண்டித்து, தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கடும் எதிர்ப்பு தெரிவித்து, வெள்ளிக்கிழமை அன்று ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இதையடுத்து எரிவாயு குழாய் பதிக்க வந்த அலுவலர்கள் தமது முயற்சியைக் கைவிட்டு திரும்பிச் சென்றனர்.

மத்திய அரசு பொதுமக்கள் கருத்து கேட்காமல் ஹைட்ரோகார்பன் உள்ளிட்ட எரிவாயு எடுக்கும் பணியில் ஈடுபடலாம் என அரசாணை வெளியிட்டுள்ளது. சுற்றுச்சூழல் அனுமதி பெறவும் தேவையில்லை என சொல்லி உள்ளது. தமிழக அரசு சார்பில் இதனைக் கண்டித்து கடிதம் எழுதி உள்ளது. திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் வரும் 28 ஆம் தேதி டெல்டா மாவட்டங்களில் போராட்டம் அறிவித்துள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், மத்திய அரசின் அறிவிப்புக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளது.

இந்நிலையில் தஞ்சாவூர் மாவட்டம், பூதலூர் வட்டம், புதுப்பட்டி அருகே நெல் மற்றும் எள் சாகுபடி செய்யப்பட்டிருந்த இடத்தில் எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு உற்பத்தி நிறுவனம் சார்பில், எரிவாயு குழாய் பதிக்கும் பணி நடைபெற்று வந்தது. இதையடுத்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, தமிழ்நாடு விவசாயிகள் சங்க நிர்வாகிகள் பணிகளை தடுத்து நிறுத்தி, விளைநிலங்களில் எரிவாயு குழாய் பதிப்பதைக் கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் என்.வி.கண்ணன் தலைமை வகித்தார். சிபிஎம் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் வழக்கறிஞர் வெ.ஜீவகுமார், சிபிஎம் பூதலூர் தெற்கு ஒன்றியச் செயலாளர் சி.பாஸ்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நிர்வாகிகள் முகமது சுல்தான், சோலை ரமேஷ், மருதமுத்து, விஜயகுமார், தமிழ்ச்செல்வன், சந்திரபோஸ், பாலசுப்பிரமணியன், எம்.ஜி.சரவணன், பழனிச்சாமி, அறிவழகன், வியாகுல தாஸ், நெல்சன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இதையடுத்து அங்கு வந்த பூதலூர் வட்டாட்சியர் சிவகுமார், காவல்துறை ஆய்வாளர் முருகேசன் ஆகியோர் சிபிஎம் மற்றும் விவசாய சங்க தலைவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் விவசாயிகள் கருத்து கேட்டு, பேச்சுவார்த்தை நடத்திய பின்னரே எரிவாயு குழாய் பதிக்கும் பணி நடைபெறும்" என தெரிவித்தனர்.


இதையடுத்து மீண்டும் குழாய் பதிக்கும் பணி நடந்தால் போராட்டம் நடத்துவோம் எனத் தெரிவித்து, ஆர்ப்பாட்டத்தை கைவிட்டு கட்சியினர், விவசாயிகள், பொதுமக்கள் கலைந்து சென்றனர். இதனால் இப்பகுதியில் பரபரப்பான சூழல் உருவாகியுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x