

சேலத்தில் தடையை மீறி ராமர் படத்துடன் ஊர்வலமாக செல்ல முயன்ற பாஜக-வினர் 49 பேரை போலீஸார் கைது செய்தனர்.
சேலத்தில் 1971-ம் ஆண்டு திராவிடர் கழகம் சார்பில் பெரியார் தலைமையில் மூடநம்பிக்கை ஒழிப்பு பேரணி நடத்தப்பட்டது. பெரியார் நடத்திய பேரணியில் ராமர் சீதை உருவங்களை அவமரியாதை செய்ததாக, துக்ளக் விழாவில், நடிகர் ரஜினிகாந்த் பேசியது, சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதுசம்பந்தமாக ஊடகங்களில் கடந்த சில நாட்களாக பிரச்சனை தொடர்பாக விவாதங்கள் நடைபெற்று வருகிறது.
சேலம் மாவட்ட பாஜக சார்பில் 50 ஆண்டுகளுக்கு பின்னர், பெரியாரால் பேரணி நடத்தப்பட்ட அதேநாளான நேற்று, சேலம் மாநகர் மாவட்ட பாஜக சார்பில் மாவட்ட தலைவர் கோபிநாத் தலைமையில், செவ்வாய்பேட்டை மெயின் ரோட்டில் உள்ள சீனிவாசா பார்க் அருகில் ராமர், சீதை உருவ படத்துக்கு மாலை அணிவித்து சிறப்பு பூஜை செய்து ஊர்வலமாக செல்ல முயன்றனர்.
இதற்கு காவல்துறையினர் அனுமதி மறுத்திருந்த நிலையில், தடையை மீறி பாஜக மாவட்ட தலைவர் கோபிநாத் தலைமையில் பாஜக மூத்த தலைவர் லக்ஷ்மணன் உள்பட 49 பேர், ராமர் சீதை திருவுருவப் படத்துக்கு சிறப்பு பூஜைகள் செய்து மலர் தூவி, ராம நாமம் பாடி மங்கல வாத்தியங்கள் முழங்க ஊர்வலமாக செல்ல முற்பட்டனர். அப்போது, போலீஸார் ராமர்-சீதை உருவப்படுத்துடன் ஊர்வலமாக செல்ல முயன்ற பாஜக-வினரை தடுத்து நிறுத்தினர். இதனால், இருதரப்புக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. தடையை மீறி ஊர்வலம் செல்ல முயன்ற பாஜக-வினரை போலீஸார் வலுக்கட்டாயப்படுத்தி, போலீஸ் வேனில் ஏற்றி 49 பேரை கைது செய்தனர்.