

ராஜிவ்காந்தி கொலை வழக்கில் சிறை தண்டனை அனுபவிக்கும் ஏழு தமிழர்களின் விடுதலைக்கு தமிழக அரசு நடவடிக்கை எடுக்கும் என, இந்த வழக்கில் தற்போது பரோலில் உள்ள ரவிச்சந்திரனிடம் அமைச்சர் செல்லூர் ராஜூ உறுதியளித்தார்.
ஏழு தமிழர் விடுதலை இயக்கம் சார்பில் அதன் ஒருங்கிணைப்பாளர் முத்துப்பாண்டி மற்றும் நிர்வாகிகள் தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூவை நேரில் சந்தித்து மனு அளித்தார்.
அந்த மனுவில், முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி கொலை வழக்கில் கடந்த 29 ஆண்டுகளாக பேரறிவாளன், முருகன், சாந்தன், நளினி, ரவிச்சந்திரன் உட்பட 7 பேர் சிறையில் வாடுகின்றனர். இவர்களை மாநில அரசு தனக்குள்ள அதிகாரத்தை பயன்படுத்தி விடுவிக்கலாம் என உச்ச நீதிமன்றம் 2013ல் உத்தரவிட்டது.
இந்த தீர்ப்பு அடிப்படையில் ஏழு தமிழர்களை விடுவிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்கும் என சட்டப்பேரவையில் அப்போதைய தமிழக முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். பின்னர் தமிழக முதல்வரான எடப்பாடி பழனிச்சாமி, 9.9.2018-ல் தமிழக அமைச்சரவையில் ஏழு தமிழர்களை விடுதலை செய்ய தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த தீர்மானம் தமிழக ஆளுனரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது.
இந்நிலையில் நளினி, பேரறிவாளன் ஆகியோருக்கு பரோல் வழங்கப்பட்டது. ரவிச்சந்திரனுக்கு உயர் நீதிமன்ற உத்தரவுபடி ஜன. 10-ல் 15 நாள் பரோல் விடுமறை வழங்கப்பட்டது. இந்த விடுப்பு காலம் ஜன. 25-ல் முடிகிறது. ரவிச்சந்திரன் மேலும் ஒரு மாத பரோல் விடுப்பு கேட்டு ஜன. 16-ல் மனு அளித்தார். ஆனால் அவரது மனுவை சிறைத்துறை துணைத் தலைவர் நிராகரித்து ஜன. 21-ல் உத்தரவிட்டுள்ளார். எனவே ரவிச்சந்திரனின் மனுவை கருணையுடன் பரிசீலித்து அவருக்கு மேலும் ஒரு மாதம் பரோல் விடுமுறை வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.
பின்னர் அருப்புக்கோட்டையில் உள்ள ரவிச்சந்திரனிடம் செல்போன் மூலம் அமைச்சர் செல்லூர் ராஜூவை ஏழு தமிழர் இயக்க நிர்வாகிகள் பேச வைத்தனர். அப்போது ‘ரவிச்சந்திரனிடம் கவலைப்பட வேண்டாம். அம்மாவின் அரசு ஏழு பேரையும் கைவிடாது. ஏழு பேரையும் விடுதலை செய்ய தமிழக அரசு கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கும். இந்த கோரிக்கை தொடர்பாக முதல்வரிடம் பேசுவேன்’ என அமைச்சர் தெரிவித்தார்.