தந்தை பெரியார் சிலை உடைப்பு; அரசியல் ஆதாயம் தேடும் சனாதன சக்திகள்: தொல்.திருமாவளவன் கண்டனம்

தந்தை பெரியார் சிலை உடைப்பு; அரசியல் ஆதாயம் தேடும் சனாதன சக்திகள்: தொல்.திருமாவளவன் கண்டனம்
Updated on
1 min read

தந்தை பெரியாரின் சிலையை உடைத்தவர்களை உடனடியாகக் கைது செய்து குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறைப்படுத்த வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே கலியப்பேட்டையில் தந்தை
பெரியாரின் திருவுருவச் சிலையை சமூகவிரோதிகள் நேற்று நள்ளிரவில் உடைத்துச் சேதப்படுத்தியுள்ளனர். காட்டுமிராண்டித்தனமான இந்தப் போக்கை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் மிகவன்மையாகக் கண்டிக்கிறோம்.

தமிழகத்தில் சனாதன சக்திகளான ஆர்எஸ்எஸ், பாஜக உள்ளிட்ட சங்பரிவார்கள் தந்தை பெரியாரைக் கொச்சைப்படுத்தும் வகையிலும் அவருடைய கருத்தியலுக்கு எதிரான நடவடிக்கைகளிலும் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். தமிழகத்தில் அரசியல் ஆதாயம் தேடுவதற்கென சனாதன சக்திகள் அண்மைக்காலமாக இத்தகைய வன்முறை செயல்களில் ஈடுபட்டு வருவது வன்மையான கண்டனத்துக்குரியது.

2018ஆம் ஆண்டு திருப்பத்தூரிலும், 2019ஆம் ஆண்டு அறந்தாங்கியிலும் இதே போல் தந்தை பெரியாரின் சிலையை சமூக விரோதிகள் சேதப்படுத்தினர். அத்துடன், நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களின் திருவுருவச்சிலையை சாதி
வெறியர்கள் சம்மட்டியால் இடித்துத் தகர்த்துத் தரைமட்டமாக்கினர். காவல்துறையினரும் அதிகாரிகளும் அதனை வேடிக்கைப் பார்த்தனர். இவ்வாறு திட்டமிட்டு சாதி-மத வெறியர்கள் செயல்பட்டு வருவதை தமிழக அரசு வேடிக்கைப் பார்க்காமல் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். அத்துடன், தற்போது தந்தை பெரியாரின் சிலையை உடைத்தவர்களை உடனடியாகக் கைது செய்து குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறைப்படுத்த வேண்டும்’’ என தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in