

தமிழகத்தில் பூரண மதுவிலக்கு கொள்கையை அமல்படுத்து வதை தவிர அதிமுக அரசுக்கு வேறு வழியில்லை என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:
கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ள சுந்தர் பிச்சை, தமிழர்களின் பெருமையையும் புகழையும் உயர்த்தும் வகையில் தன் பணியை தொடர வாழ்த்துகிறேன்.
‘ராஜீவ் காந்தி கொலை வழக்கில், குற்றவியல் நடை முறைச் சட்டப்படி ஆயுள் கைதிகளை மாநில அரசே விடுவிக்கலாம். அதில் ஏதா வது சிக்கல் இருந்தால், விடுவிக்கக் கூடாது என்று மாநில அரசுக்கு மத்திய அரசு கடிதம் எழுதி இருக்கலாம். ஆனால் நீதிமன்றத்தை நாடியது ஏன்?’ என்று வழக்கறிஞர்கள் ராம்ஜெத்மலானி, யுக்சவுத்ரி ஆகியோர் உச்ச நீதிமன்றத்தில் சிறப்பாக வாதாடியுள்ளனர்.
ராஜீவ் கொலை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டவர்களை விடுதலை செய்வதோடு நில்லாமல், மத்திய அரசிடம் தமிழக அரசு ஒப்புதல் கேட்டதுதான் தவறாகிவிட்டதோ என்று எண்ணத் தோன்றுகிறது. முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறனை கைது செய்வதில் சிபிஐ ஏன் அவசரம் காட்டுகிறது? அரசியல் ரீதியான பழிவாங்கும் நடவடிக்கை தானே இது என்று கேட்ட உச்ச நீதிமன்றம், அந்த வழக்குக்கு ஏறத்தாழ முற்றுப்புள்ளியே வைத்துள்ளது.
தலைமை நீதிபதி கருத்து
முதல்வரின் சுதந்திர தின உரையில் பூரண மதுவிலக்கை அமல்படுத்துவது பற்றி அறிவிப்புகள் வெளியாகும் என்று சொல்லப்படுகிறது. மதுவிலக்கை அறிவிப்பதை தவிர, அதிமுக அரசுக்கு வேறு வழியில்லை. சிலர் டாஸ்மாக் கடைகளின் எண்ணிக்கையையும், இயங்குகிற நேரத்தையும் முதல்வர் குறைப்பார் என்று கூறுகின்றனர். விற்பனை நேரத்தை குறைப்பதால் தீர்வு ஏற்படாது என்று உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியே கூறியுள்ளார்.
இவ்வாறு கருணாநிதி தெரிவித்துள்ளார்.